சென்னை கீழ்பாக்கம், ராஜரத்தினம் தெருவைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் கடந்த 3-ம் தேதி புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது. “நான் எனது பெயரில் தங்க நகைகளை பட்டைத் தீட்டும் தொழில் செய்து வருகிறேன். எனது தந்தை அசோக்குமார் பெயரில் ஜே.ஜி ஜூவல்ஸ் பிரைவெட் லிமிடெட் என்ற தங்க நகைகள் பட்டை தீட்டும் தொழில் செய்துவருகிறோம். என்னிடம் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தப்பான் ரூபீதாஸ் என்பவர் கடந்த 8 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார்.

தங்கக்கட்டிகளைத் திருடிய வழக்கில் கைதான ரமேஷ்

எனது தந்தை அசோக்குமாரிடம் திருவொற்றியூரைச் சேர்ந்த அருண், ரமேஷ் ஆகியோர் கடந்த 17 ஆண்டுகளாக வேலை செய்துவருகிறார்கள். தப்பான் ரூபீதாஸ், அருண், ரமேஷ் ஆகியோர் 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தங்கக்கட்டியை நகைகளாக செய்யக் கொடுத்தேன். ஆனால் மூன்று பேரும் சரியாக வேலைக்கு வரவில்லை. அதனால் அவர்கள் வேலை செய்யும் அறையைப் பார்த்தபோது மூன்று பேரிடமும் கொடுத்த தங்கக் கட்டிகளை கணக்கு பார்த்தபோது அவர்கள் சிறுக, சிறுக தங்க நகைகளை திருடியது தெரியவந்தது. தப்பான் ரூபீதாஸிடம் 453 கிராம் எடையுள்ள தங்க நகையும் எனது அப்பா அசோக்குமார் பட்டறையில் வேலை செய்த அருணிடம் 445 கிராம் எடையுள்ள தங்க நகைகளையும் ரமேஷிடம் 91 கிராம் எடையுள்ள தங்க நகைகளையும் திருடியது தெரியவந்தது. எனவே மூன்று பேர் மீது நடவடிக்கை எடுப்பதோடு தங்க நகைகளையும் மீட்டுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன்பேரில் கமிஷனர் சங்கர் ஜிவால், கூடுதல் கமிஷனர் கண்ணன் உத்தரவின்பேரில் இணை கமிஷனர் ராஜேந்திரன் வழிகாட்டுதலின்பேரில் துணை கமிஷனர் கார்த்திக்கேயன், உதவி கமிஷனர் ரமேஷ் ஆகியோர் மேற்பார்வையில், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சாம் வின்சென்ட் இந்திய தண்டனைச் சட்டம் 408-ன் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். புகாரளித்த 3 மணி நேரத்திலேயே தங்கக்கட்டிகளைத் திருடி விற்ற அருண், ரமேஷை ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் தப்பான் ரூபிதாஸை போலீஸார் தேடிவருகின்றனர்.

Also Read: சிக்கும் தங்கக்கட்டிகள்… அதிரவைக்கும் கரன்சி நோட்டுகள் – பரபரக்கும் திருச்சி விமானநிலையம்

தங்கக்கட்டிகளை திருடிய வழக்கில் கைதான அருண்

Also Read: கேரளா: ரூ.150 கோடி தங்க நகை மோசடி! – மஞ்சேஸ்வரம் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ கைது

இதுகுறித்து கீழ்பாக்கம் போலீஸார் கூறுகையில், “புகாரளித்த அருண்குமார் அவரின் தந்தை அசோக்குமார் ஆகியோரிடம் 100-க்கும் மேற்பட்டவர்கள் தங்க நகைகளைச் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் உள்ள பிரபலமான ஜூவல்லரிகளுக்கு இவர்கள் தங்க நகைகளை செய்து கொடுத்து வருகின்றனர். அதனால் இவர்களிடம் வேலை செய்யபவர்களிடம் நம்பிக்கையின்பேரில் தங்கக் கட்டிகளைக் கொடுப்பது வழக்கம். இந்த தங்க நகைகளைச் செய்யும் பட்டறையில் வேலை செய்து வந்த அருண், ரமேஷ், தப்பான் ருபீதாஸ் ஆகியோர் நம்பிக்கை மோசடி செய்திருக்கின்றனர்.

இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து புத்திசாலித்தனமாக உரிமையாளர்களை ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்தது. அதாவது, ரமேஷிடம் தங்கக் கட்டிகளைக் கணக்கு கேட்கும்போது அருண், தன்னிடம் உள்ள தங்கக்கட்டிகளைக் கொடுப்பார். அதனால் ரமேஷிடம் தங்கக்கட்டிகள் குறைவாக இருந்தாலும் அவர் உரிமையாளர்களிடம் சிக்க மாட்டார். அதைப்போல அருணிடம் தங்கக்கட்டிகளை கணக்கு கேட்கும்போது தப்பான் ரூபீதாஸிடம் உள்ள தங்கக்கட்டிகளை கொடுப்பார். இப்படி மூன்று பேரும் தங்களிடம் உள்ள தங்கக்கட்டிகளைக் கொடுத்து உரிமையாளர்களை ஏமாற்றி வந்திருக்கின்றனர். ஆனால், இவர்கள் மூன்று பேரிடம் கொடுத்த தங்கக்கட்டிகளை சிறுக, சிறுக திருடி அதை விற்று வந்திருக்கின்றனர். ஒரே நேரத்தில் மூன்று பேரிடம் கணக்கு கேட்டிருந்தால் சிக்கியிருப்பார்கள். ஆனால், சுழற்சி முறையில் ஊழியர்களிடம் தங்கக் கட்டிகளை கணக்கு கேட்டதால் இவர்கள் மாதக்கணக்கில் தப்பி வந்திருக்கின்றனர்.

இன்ஸ்பெக்டர் சாம்வின்சென்ட்

இந்தச் சமயத்தில்தான் தப்பான் ரூபீதாஸிடம் அருண் கொடுத்த 100 கிராம் எடையுள்ள தங்கக் கட்டியை திரும்பக் கொடுக்காமல் தப்பான் ரூபீதாஸ் தலைமறைவாகி விட்டார். அதனால் அருணிடம் உரிமையாளர் கணக்கு கேட்டபோது அவர் மாட்டிக்கொள்வோம் என பயந்து நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருக்கிறார். இதுகுறித்து உரிமையாளருக்குத் தகவல் தெரிந்ததும் விசாரித்தபோதுதான் அருண், ரமேஷ், தப்பான் ரூபீதாஸ் ஆகியோரின் திருட்டு கூட்டணி குறித்து தெரியவந்தது. உடனடியாக காவல் நிலையத்தில் புகாரளித்ததும் அருண், ரமேஷை திருவொற்றியூர் ரயில் நிலைத்தில் வைத்து கைது செய்தோம். 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை மீட்டுள்ளோம். தலைமறைவாக உள்ள தப்பான் ரூபீதாஸை தேடிவருகிறோம்” என்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.