சென்னையில் கர்ப்பமாக இருந்த வடமாநில பெண் தொழிலாளியான குமாரி என்பவர் பிரசவத்திற்கு அஞ்சி கருவைக் கலைக்க மருத்துவ வழிகாட்டுதலின்றி நாட்டு மருந்தை உண்டதால் சிசு இறந்து கர்ப்பப்பையிலேயே தங்கி சீல் பிடித்திருந்திருக்கிறது. கர்ப்பப்பையிலேயே சிசு தங்கியதால் நேற்றைய தினம் அப்பெண்ணும் பரிதாபமாக உயிரிழந்திருந்த சம்பவம் நடந்திருந்தது.

தொடர்புடைய செய்தி: சென்னை: கருக்கலைப்புக்காக தானாக மருந்து எடுத்துக் கொண்ட பெண்ணிற்கு நேர்ந்த விபரீதம்

குமாரி மட்டுமல்ல… இந்தியாவில் பாதுகாப்பற்ற கருக்கலைப்பால் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு பெண் மரணிக்கிறாள். அதாவது ஒவ்வொரு நாளும் 48 குமாரிகளை இந்தியா பாதுகாப்பற்ற கருக்கலைப்புக்கு பலிகொடுக்கிறது என ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் தகவலின்படி, உலகளவில் நடக்கும் பாதுகாப்பற்ற கருக்கலைப்புகளில் சரிபாதிக்கும் மேற்பட்டவை ஆசியாவிலும் குறிப்பாக தென் ஆசியா மற்றும் மத்திய ஆசியாவிலும் நிகழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கிட்டத்தட்ட இந்தியாவில்தான் அதிகப்பட்ட பாதுகாப்பற்ற கருக்கலைப்புகள் நடக்கின்றன. சோகம் என்னவென்றால், இந்தியாவில் கருக்கலைப்பு சட்டத்துக்கு புறம்பானதல்ல. கருக்கலைப்பென்பது, இந்திய சட்டம் அனுமதிக்கும் ஒரு மருத்துவ வழிமுறைதான்.

image

இந்தியாவில் கருக்கலைப்புக்கான சட்டம், இன்று நேற்று வந்ததல்ல. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பாதுகாப்பான கருக்கலைப்புக்கான சட்டம் இந்தியாவில் உள்ளது. 1971-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அச்சட்டத்தில் 2002, 2003, 2021ம் ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டது. அத்திருத்தங்களின் படி, குறிப்பிட்ட சில காரணங்களுக்காக வேண்டி கருக்கலைப்பு செய்வது சட்டப்படி சரி. அக்காரணங்கள் இல்லாத பெண்களுக்கு, சட்டம் உதவிசெய்யாது.

இந்தக் காரணங்கள் பட்டியலில் இருக்கும் குழப்பங்களே, கருக்கலைக்க விரும்பும் கர்ப்பிணிகளை பாதுகாப்பற்ற கருக்கலைப்புக்கு உள்ளாகவைக்கிறது என்கின்றனர் செயற்பாட்டாளர்கள். அதனாலேயே ‘இந்தியாவில் பாதுகாப்பற்ற கருக்கலைப்பை ஒழிப்போம்’ என்ற முயற்சியில் அவர்கள் முதல் விஷயமாக சட்டம் சொல்லும் காரணங்கள் பற்றிய விழிப்புணர்வை முதன்மை படுத்துகின்றனர். தமிழகத்தை சேர்ந்த காமன் ஹெல்த் மற்றும் ரூசக் என்ற பெண்கள் நலன் சார்ந்த அமைப்பை சேர்ந்த செயற்பாட்டாளர் பாலசுப்ரமணியம், சட்டக் கட்டுப்பாடுகள் பற்றி நம்மிடையே விரிவாக பகிர்ந்துக்கொண்டார்.

image

பாதுகாப்பாக கருக்கலைப்பு செய்து கொள்ள சட்டப்படி அனுமதிக்கப்பட்ட காரணங்கள் கீழே (இவையாவும் சம்பந்தப்பட்ட கர்ப்பிணியை அடிப்படையாக வைத்து இயற்றப்பட்ட விதிமுறைகள்தான். மற்றபடி அப்பெண்ணின் கர்ப்பத்துக்கு காரணமான நபர் உட்பட குடும்ப உறுப்பினர் யாரும் இதில் தலையிடப்போவதில்லை. ஒருவேளை சம்பந்தப்பட்ட பெண் 18 வயதுக்கு குறைவானவர் என்றால், பாதுகாவலர் அல்லது பெற்றோரிடம் ஒப்புதல் கேட்கப்படும்):

* அக்கருவின் காரணமாக அப்பெண்ணின் உடலுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படுவது

* பாலியல் வன்கொடுமையின் விளைவாக ஏற்பட்ட கர்ப்பம்

* திட்டமிடப்படாத கர்ப்பம் என கர்ப்பிணி கூறும் சூழ்நிலை (சம்பந்தப்பட்ட பெண் உறவின்போது கருத்தடை சாதனம் பயன்படுத்தியப் பின்னரும் கரு உருவாகியிருந்து, அது தனக்கு மனரீதியாக மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது என அப்பெண் கருதும் சூழல்)

* கருவின் வளர்ச்சியில் குறைபாடுகள் இருப்பது

image

இக்காரணங்கள் உள்ள பெண்கள் மருத்துவரை அணுகி, சட்ட ரீதியான எவ்வித தடையுமின்றி சுயவிருப்பத்தின்பேரில் கருக்கலைப்பு செய்துகொள்ளலாம். இவையன்றி பாலின அடிப்படையில் கருவை கலைக்க விரும்புவது, பிறரின் நிர்பந்தத்துக்காக சம்பந்தப்பட்ட பெண் கருக்கலைப்புக்கு உள்ளாவது, கர்ப்பம் சார்ந்த பயத்தின் காரணமாக கருக்கலைப்புக்கு முயல்வது போன்ற காரணங்கள் சட்டத்துக்கு புறம்பானதாக கருதப்படும். இப்படியானவர்கள் மருத்துவரை நாடினால், அவர்களுக்கு உரிய மனநல ஆலோசனையும் மருத்துவ வழிகாட்டுதலும் நிச்சயம் வழங்கப்படும்.

சட்டரீதியிலான கருக்கலைப்பை பொறுத்தவரை, கருவின் வளர்ச்சியை பொறுத்து (எத்தனை வார கரு என்ற அடிப்படையில்) எத்தனை மருத்துவரிடம் அனுமதி பெற வேண்டும் என்பது நிர்ணயிக்கப்படும். அந்த வார இடைவெளி குறித்த விவரம்:

* 20 வாரங்களுக்குட்பட்ட கருவை கலைக்க வேண்டுமெனில், கருக்கலைப்பு சேவை வழங்குவதற்கென பதிவுபெற்ற மருத்துவர் ஒருவரின் அனுமதியை அப்பெண் பெற வேண்டும். பின் கருக்கலைப்பு செய்துக்கொள்ளலாம்.

* 20 – 24 வாரங்களான கரு என்றால், இரண்டு கருக்கலைப்பு சேவை வழங்குவதற்கென பதிவுபெற்ற மருத்துவர் அனுமதியுடன் கருக்கலைப்பு செய்யலாம். இந்த கால இடைவெளியில் கருக்கலைப்பு செய்வது மருத்துவ ரீதியாக சற்று சவாலானது என்பதால் இதற்கு கூடுதல் கட்டுப்பாடுகளும், காரண விவரங்களும் கேட்கப்படலாம்.

image

* 24 வாரங்களுக்கு பிறகு கருக்கலைப்பு செய்ய வேண்டுமென்றால் மாநில மருத்துவக் குழுவை கருக்கலைக்க விரும்பும் கர்ப்பிணிகள் அணுக வேண்டியிருக்கும். இக்குழுவில் ஒரு மகப்பேறு மருத்துவர், ஒரு குழந்தை நல மருத்துவர், கதிரியக்க நிபுணர் மற்றும் மாநில அரசால் நியமிக்கப்படும் ஒரு நபர் இருப்பர். இவர்கள் ஒப்புதலின் கிடைத்த பின்னர் கருக்கலைப்பு செய்யலாம். (இந்த ஒப்புதலை நேரடியாக சம்மந்தப்பட்ட பெண்ணே விண்ணப்பித்து பெறவேண்டுமா அல்லது மருத்துவர்கள் பரிந்துரை கடிதம் அனுப்பி பெறவேண்டுமா என்பது குறித்த விதிமுறையை அரசு இன்னும் வெளியிடவில்லை.) 

இப்படி கருவின் வளர்ச்சியை பொறுத்து, மருத்துவக்குழுவின் அனுமதியை மட்டும் பெற்று ஒரு கர்ப்பிணி தன் சுயவிருப்பப்படி இந்தியாவில் சட்ட உதவியுடன் பாதுகாப்பாக (தன் உடலுக்கோ உயிருக்கோ எவ்வித சேதமும் இன்றி) கருக்கலைப்பு செய்துகொள்ளலாம்.

கருக்கலைப்புக்கான கட்டுப்பாடுகளில் பெண்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய மற்றுமொரு முக்கியமான சட்டரீதியான மற்றுமொரு விஷயம் உள்ளது. அது, கருக்கலைப்புக்காக ஒரு பெண் மருத்துவ சேவையை நாடும்போது, அவர் 18 வயதை கடந்தவர் என்றால், கருக்கலைப்புக்கு அவர் சம்மதம் மட்டுமே போதுமானது. கணவர், குடும்பத்தினர் என யாருடைய சம்மதமோ, ஒப்புதலோ, கையொப்பமோ சட்டரீதியாக தேவைப்படாது, கட்டாயமும் இல்லை. சம்பந்தப்பட்ட பெண்ணின் விருப்பமே, இறுதி முடிவு. அப்பெண் திருமணமாகாதவர் என்றாலும்கூட, சம்பந்தப்பட்ட துணையரின் ஒப்புதல் கட்டாயமில்லைதான். இதுவே 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்றால், பாதுகாவலர் அல்லது பெற்றோர் சம்மதம் வேண்டும். மேலும் அந்த கருக்கலைப்புக்கு பின்னான காரணம், புகாராக போஸ்கோவின்கீழ் பெறப்படும். இருப்பினும் சம்பந்தப்பட்ட பெண் குழந்தையின் தனிவிவரங்கள் அனைத்தும் முழுமையாக பாதுகாக்கப்படும் / பாதுகாக்கப்பட வேண்டும். அதுவே சட்டம்.

image

இப்படி சட்டத்துக்கு உட்பட்டு கருக்கலைப்பு செய்துகொள்ளும் பெண்ணின் பெயர் மற்றும் இதர விவரங்களை எக்காரணம் கொண்டும், சட்ட ரீதியாக மருத்துவரோ மருத்துவ உதவியாளர்களோ தெரிவிக்கக்கூடாது என சட்டம் சொல்கிறது. மீறி அதை வெளியே சொன்னால், அந்த நபருக்கு சட்டம் ஓராண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து வழங்கும்.

இதையும் படிங்க… கருக்கலைப்பு செய்வதை சட்ட உரிமையாக்கக் கோரி மெக்சிகோவில் ஆர்ப்பாட்டம்

இதை நான் அழுத்திச்சொல்லக் காரணம், பெரும்பாலான நேரம் ‘கருவை கலைக்க வீட்டில் யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்களோ, கருவை கலைத்தது வெளியில் தெரிந்தால் யாரேனும் ஏதாவது சொல்லி விடுவார்களோ, நம்மை தவறாக நினைத்துவிடுவார்களோ’ என்ற அடுக்கடுக்கான கேள்விகளால்தான், கர்ப்பிணிகள் ‘யாருக்கும் தெரியாமல்’ கருவை கலைக்க வேண்டும் என முடிவுசெய்து ஆபத்தானவர்களிடம் சென்று அவர்களின் சூழ்ச்சியில் சிக்கிக்கொள்கின்றனர். அப்படி பாதுகாப்பில்லாமல் ஒரு இடத்தில் சென்று கருவை கலைத்துக்கொள்ள முயன்றால், அது அப்பெண்ணின் உடலுக்கும் உயிருக்கும் ஆபத்து என்பதை ஒவ்வொரு பெண்ணும் புரிந்துக்கொள்ள வேண்டும்.

குறிப்பாக கருக்கலைப்பு முடிவை எடுக்கும் கர்ப்பிணிகள் புரிந்துக்கொள்ள வேண்டும். அரசாங்கமே உங்களின் கருக்கலைப்பு முடிவையும், உங்களின் தனி மனித விருப்பத்தையும் மதிப்புக்கொடுத்து ஏற்றுக்கொண்டு, உங்கள் தனிப்பட்ட விவரங்களையும் பாதுகாத்து, மிக பாதுகாப்பான முறையில் உங்கள் உயிருக்கும் உடலுக்கும் ஆபத்து ஏற்படாத வகையில் கருவை கலைக்க சட்ட ரீதியாக உதவும்போது, பாதுகாப்பில்லாத கருக்கலைப்புக்கு ஏன் நீங்கள் செல்லவேண்டும்? ஏன் ஆபத்தை விலைகொடுத்து வாங்க வேண்டும்? இதை மட்டும் சிந்தியுங்கள்” என்றார் தெளிவுடன்.

image

நேற்று நடந்திருக்கும் குமாரியின் சம்பவத்தை நாம் சற்று ஆராய்ந்துப்பார்த்தபோது பிரசவ வலி உள்ளிட்ட பயம் காரணமாக அவர் நாட்டுமருந்துக்கடை ஒன்றை நாடியிருந்ததை காண முடிந்தது. இப்படி ‘தனிநபர்களை நாடி மருந்து மாத்திரை பெறுவது தவறென புரிந்தாலும்கூட, இதற்கான சிகிச்சையை அளிக்கும் மருத்துவக்குழுவை எங்கு அடையாளம் காண்பது மற்றும் பாதுகாப்பான கருக்கலைப்பை எங்கு செய்யலாம்’ என நாம் நினைக்கலாம். அதற்கான பதிலையும் அவரே தருகிறார்.

“அரசால் அங்கீகரிக்கப்பட்ட கருக்கலைப்பு சேவை மையங்களில் செய்துகொள்ளலாம். பயிற்சியும் அரசு அனுமதியும் பெற்ற எந்தவொரு மருத்துவரும், கருக்கலைப்புக்கான சிகிச்சையை செய்யலாம்” என்றார்.

ஆக, கருக்கலைப்பென்பது நம் நாட்டில் தனிநபரின் உரிமை. அதை களங்கப்படுத்துவதில் நியாயமுமில்லை, அது சட்டமும் இல்லை. இந்தக் குழந்தை தற்போதுள்ள என்னுடைய சூழலில் எனக்கு வேண்டுமா, வேண்டாமா என்பதை அதை சுமக்கவுள்ள பெண்ணே முடிவுசெய்ய வேண்டும். இதை உணர்ந்து கருக்கலைக்க முயலும் பெண்கள், முறையாக மருத்துவரை அணுகவும். அப்படியில்லாமல் பாதுகாப்பற்ற முறையில் எவ்வித முயற்சியையும் மேற்கொள்ள வேண்டாம்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.