சேலம் மாவட்டம், தலைவாசல் அருகில் உள்ள ஒரு தனியார் ஊறுகாய் தயாரிக்கும் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிபவர் ராஜா. இவர் அப்பகுதியில் உள்ள சார்வாய்புதூர் பகுதியைச் சேர்ந்தவர். தனது நிறுவனத்திற்குத் தேவையான வெள்ளரிப் பிஞ்சுகளை திண்டிவனம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகளின் மூலமாகச் சேகரித்துக்கொள்வர்.

Also Read: `தனி வீடுகள்தான் டார்கெட்!’ – போலி மதபோதகர், சாமியார் உட்பட 8 பேர் கும்பல் சிக்கியது எப்படி?

அதற்கு உண்டான பணத்தை விவசாயிகளிடம் கொடுப்பதற்காகத் தன்னுடன் காசாளராக பணிபுரிபவருடன் 30 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு கடந்த 15-ம் தேதி கார் மூலம் திண்டிவனம் பகுதிக்கு வந்துள்ளார் ராஜா.

சம்பவ இடத்தில் ஆய்வு செய்த விழுப்புரம் எஸ்.பி.

திண்டிவனம் அடுத்த பெருமுக்கல் அருகே கார் சென்றபோது பைக் மூலம் பின்தொடர்ந்து வந்த ஒரு கும்பல் காரை வழிமறித்து ஆயுதங்களைக் காட்டி மிரட்டியுள்ளது. கையில் வைத்திருந்த தடியைக் கொண்டு காரின் கண்ணாடியை உடைத்த அந்த கும்பல், ராஜா கொண்டு சென்ற 30 லட்சம் ரூபாயை வழிப்பறி செய்து கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. அன்றைய தினமே சம்பவ இடத்தை நேரில் வந்து பார்வையிட்டார் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா. இந்த வழிப்பறி சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டது பிரம்மதேசம் காவல்துறை. விசாரணையில், இந்த ஊறுகாய் நிறுவனத்தில் பணியாற்றி வந்த மனோஜ்குமார்; அதே நிறுவனத்தில் பணிபுரிந்து பணிநீக்கம் செய்யப்பட்ட பன்னீர்செல்வம், மணிகண்டன் ஆகியோருக்கும்; சென்னை ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து பணி நீக்கம் செய்யப்பட்ட செல்வகுமார் இவர்கள் நால்வருக்கும் இந்த வழிப்பறியில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அந்த 4 நபர்களையும் கடந்த 18-ம் தேதி கைது செய்தது பிரம்மதேசம் காவல்துறை. மேலும், இச்சம்பவத்தில் கைவரிசை காட்டிய முக்கிய குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் (24.09.2021) பிற்பகல் முருக்கேரி பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களிடம் விசாரித்துள்ளனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனர். அவர்கள் கோவூரைச் சேர்ந்த திலீப் என்பதும், மற்றொருவர் முகலிவாக்கத்தை சேர்ந்த அஜில்குமார் என்பதும் தெரியவந்திருக்கிறது. அவர்களிடம் மேலும் விசாரித்தபோது இந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த இருவரையும் கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர் பிரம்மதேசம் காவல்துறையினர்.

Also Read: விழுப்புரம்: கொரோனாவால் வேலை இல்லை; மாடுகள் தொடர் திருட்டு! – 6 பேர் கொண்ட கும்பல் சிக்கியது எப்படி?

இதுதொடர்பாக, பிரம்மதேசம் காவல் ஆய்வாளர் சீனிபாபுவிடம் பேசினோம்.“ஒரு வாரத்திற்கு முன்பு, மூன்று பைக் மூலமாக 6 பேர் இங்கு வந்து ஊறுகாய் நிறுவன மேலாளரின் காரை வழிமறித்து 30 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர். அதில் இருவரைத்தான் நேற்று முன்தினம் வாகன சோதனையின்போது பிடித்துள்ளோம்.

பரிமுதல் செய்யப்பட்ட பணம்

Also Read: ஜெராக்ஸ் போடப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகள்; ஆடுகள் நூதன திருட்டு! – மூவர் கும்பல் சிக்கியது எப்படி?

குற்றம் நடந்தது தொடர்பாக விசாரித்ததில் அவர், “குற்றத்திற்கு வழி வகுத்துக் கொடுத்து, உதவியாக இருந்த நான்கு பேரைக் கடந்த 18-ம் தேதி பிடித்துவிட்டோம். இந்த நான்கு பேரில், மனோஜ்குமார் என்பவர் அதே ஊறுகாய் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். பன்னீர்செல்வம், மணிகண்டன் என்ற இருவரும் ஏற்கனவே அங்கு வேலை செய்து பணியில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள். செல்வகுமார் என்பவர் சென்னையில் காவல் துறையில் பணியாற்றியபோது குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டதால் சுமார் 6 வருடங்களுக்கு முன்பு பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டவர்.

இந்த வழிப்பறிக்கு மூலகாரணமான திலீப்பும், செல்வகுமாரும் ஏற்கெனவே இரண்டு இணை குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள். இந்த ஊறுகாய் நிறுவனத்தில் பணிசெய்து வந்த ஊழியர் மனோஜ்குமார் மூலமாக, திண்டிவனம் பகுதிக்கு 30 லட்சம் ரூபாய் எடுத்துச் செல்லப்படும் தகவல் பன்னீர்செல்வம் என்பவருக்குச் சென்றுள்ளது. அவர் மூலமாக முன்னாள் காவலர் செல்வகுமாருக்குத் தகவல் சென்றுள்ளது. அவர் மூலமாக திலீப்புக்கு தகவல் செல்கிறது. இறுதியாக திலீப், தன்னுடைய ஆட்கள் மூலமாக இந்த குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளார். பணம் திண்டிவனம் நோக்கி கொண்டுவரப்பட்ட அன்று (15.09.2021) இவர்கள் சேலத்தில் இருந்து பின்தொடர்ந்து வந்துள்ளனர். உளுந்தூர்பேட்டை அருகே வந்தபோது ஒருவர் பின் ஒருவராக இணைந்துள்ளனர். இப்படியாக திண்டிவனம் அடுத்த பெருமுக்கல் அருகே அந்த ஊறுகாய் நிறுவனத்தின் மேலாளரின் கார் வந்தபோது காரை வழிமறித்து இந்த குற்றச் செயல் அரங்கேற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வந்தோம்.

காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், விழுப்புரம்

சுங்கச்சாவடியில் பதிவான சி.சி.டி.வி காட்சிகள், வண்டியின் எண் மற்றும் சைபர் கிரைம் உதவியோடு குற்றவாளிகளைத் தேடி வந்தோம். இதற்கு வழி வகுத்துக் கொடுத்து உதவியாக இருந்த 4 பேர் அண்மையில் கைது செய்யப்பட்டனர். கொள்ளை அடித்த பணத்தை கொண்டு பாண்டிச்சேரி பகுதியில் கொண்டாடிவிட்டு வந்ததாகக் கூறப்படும் இருவரை நேற்று முன்தினம் மதியம் 2 மணி அளவில் சென்னை நோக்கி சென்றபோது பிடித்தோம். இதுவரை பிடிபட்டுள்ள 6 பேரிடம் இருந்து 12.60 லட்சம் ரூபாயையும், ஒரு பைக், ஒரு காரையும் பறிமுதல் செய்துள்ளோம். தலைமறைவாக உள்ள 4 பேரைத் தேடி வருகின்றோம். இவர்கள் அனைவரும் இதற்கு முன்பாகவும் சில குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். பிடிபட்டவர்கள் மீது 395, 397 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.