புதுச்சேரி கோரிமேட்டில் இயங்கி வரும் மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் (Jawaharlal Institute of PostGraduate Medical Education & Research) மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ நிபுணர்கள், பேராசிரியர்கள், மருத்துவ அதிகாரிகள், செவிலியர்கள், ஆய்வகப் பணியாளர்கள், நிரந்தர ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் என சுமார் 4,000-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகிறார்கள். 1872-ல் பிரெஞ்சு ஆட்சியில் துவங்கப்பட்ட இந்த மருத்துவமனை 1964-ம் ஆண்டு ஜிப்மர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றது.

ஜிப்மர் மருத்துவமனை முற்றுகைப் போராட்டம்

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிகராகக் கூறப்படும் இந்த மருத்துவமனைக்கு புதுச்சேரி மட்டுமல்லாமல் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்றுத் திரும்புவது வழக்கம்.

இந்நிலையில் செப்டம்பர் 18-ம் தேதி ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்ட சுற்றறிக்கையில், “புதுச்சேரியில் மாத வருவாய் 2,499 ரூபாய்க்கும் கீழே இருப்பவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க இருக்கிறோம். அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த ஏழைகளுக்கும் அதேபோல சிகிச்சை அளிக்க இருக்கிறோம். அதனால் இனி சிவப்பு ரேஷன் கார்டுகளைக் காண்பிப்பவர்களுக்கு மட்டும்தான் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும். இந்த நடைமுறை வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும்” என்று குறிப்பிட்டிருந்தார் ஜிப்மர் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ராகேஷ் அகர்வால். அந்த அறிக்கைக்கு விழுப்புரம் எம்.பி ரவிக்குமார், புதுச்சேரி எம்.பி வைத்திலிங்கம், புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் எம்.எல்.ஏ சிவா உள்ளிட்டவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், ஜிப்மர் அந்த சுற்றறிக்கையை திரும்பப்பெற வேண்டுமென்று எச்சரித்திருந்தனர்.

Also Read: `மாத வருவாய் ரூ.2,500 இருந்தால் பணக்காரர்களா?!` – ஜிப்மர் அறிவிப்பால் கொந்தளிக்கும் புதுச்சேரி

அதே கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு சமூக அமைப்புகள் நேற்று ஊர்வலமாகச் சென்று ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளவர்களுக்கு மட்டுமே இலவச சிகிச்சை என்ற சுற்றறிக்கையை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவிப்பை வெளியிட்டிருக்கும் ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம், வழக்கம்போல அனைத்து மக்களுக்கும் இலவச சிகிச்சை தொடரும் என்று குறிப்பிட்டிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.