ஷாலினி பிரியதர்ஷினி, ஆசிரியர்

பிரியதர்ஷினி

ஷாலினி பிரியதர்ஷினி சென்னை பரங்கிமலையைப் பூர்வீகமாகக்கொண்டவர். சென்னை எத்திராஜ் கல்லூரியில் இளங்கலை ஆங்கில இலக்கியமும், மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் முதுகலை தமிழ் இலக்கியமும் படித்தவர். ஆங்கில ஆசிரியராக சில ஆண்டுகள் பணியாற்றியவர். நெடும் பயண அனுபவங்கள்கொணடவர். சிறுகதைப் போட்டிகளில் வென்றிருக்கிறார். பல இணைய இதழ்களில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். தன் பயணத்தின் வழியே கண்டடைந்த பலதரப்பட்ட பிராந்திய மக்களின் வாழ்வை, அவர்தம் பண்பாட்டு விழுமியங்களை `நாடோடிச் சித்திரங்கள்’ வழியே எழுதியிருக்கிறார்.

இந்தியாவின் கிழக்கு முகம்

பயணங்களைத் தத்துவார்த்த சிந்தனைகளுடன் அடையாளப்படுத்துவதும், அவற்றுக்கு ஆன்மிகச் சாயங்கள் பூசுவதும் வழக்கமாக இருக்கிறது. பயணங்களுக்கு யதார்த்த முகமொன்றும் உண்டு. புத்தர் பயணித்தார், காந்தியடிகள் பயணித்தார், சே குவேரா பயணித்தார். ஆம், இவர்கள் பயணித்தனர். அதேபோல் ஒவ்வொரு நாளும் தேவைகளின் நிர்பந்தத்தில் பயணிக்கும் சாமானியர்களும் இருக்கின்றனர். லாரி ஓட்டுநர்கள், வியாபாரிகள், பிழைப்புக்காக இடம்பெயர்ந்து வாழும் மனிதர்கள் என அனைவரும் ஏதோவொரு விதத்தில் பயணிப்பவர்களே. அப்படியென்றால் அனைவரும் `ஞானத் தேடல்’ புரிபவர்களா அல்லது ஆன்மிக நெறிகளைப் புரிந்துகொண்டு `காருண்யம்’ ததும்பும் கருணாமூர்த்திகளாகிவிடுகின்றனரா என்றால், பெரும்பாலும் அப்படி நிகழ்வதில்லை என்பதுதான் முன்னர் நான் குறிப்பிட்ட யதார்த்த முகம்.

எனது பயணங்களும் புறக்காரணங்களுக்காவே தொடங்கியவைதான் என்றாலும், அவை என் அகத்தினுள்ளும் மெல்ல பாதை அமைத்துச் செல்ல ஆரம்பித்தன. அப்போதுதான் முதன்முறையாக சக மனிதர்களைக் குறித்தும், சமூகத்தின் ஏற்ற தாழ்வுகள் குறித்தும் எனது பார்வை விரிவடையத் தொடங்கியது. அந்த வகையில் பயணங்களே எனது ஆசான்.

பயணம்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் இன்றளவும் பெருமளவில் கவனம் பெறாத நிலையில், எனக்கு அங்கு சென்று வாழும் நிர்பந்தம் ஏற்பட்டபோது மனம் அதை ஏற்க முடியாமல் தவித்தது. பாடப்புத்தகங்களில் சுட்டப்பெற்ற பிரம்மபுத்திரா நதி, அதிக அளவு மழை பொழியும் இடமான சிரபுஞ்சி, டிக்பாய் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் இவை தவிர வேறெதுவும் அறிந்திராத எனக்கு, அங்கு சென்று வாழ்க்கை அமைத்துக்கொள்ளவேண்டிய கட்டாயம். இந்தியா என்றால் டெல்லி செங்கோட்டை, காஷ்மீர் பனிமலைகள், ஜெய்ப்பூர் அரண்மனைகள், மும்பை மாநகர வீதிகள், தஞ்சை பெரிய கோயில், கேரளத்துக் கடற்காயல் பகுதிகள் என்ற ஏட்டறிவு மட்டுமேகொண்ட சாமானியர்களில் நானுமொருத்தியாகவே இருந்தேன். அந்தப் பார்வையின் கோணத்தை மாற்றியமைத்ததும் எனது பயணங்களே.

இன்று நாட்டின் எல்லா மூலைகளிலும் வட கிழக்கிந்தியர்களை சமீபகாலமாக அதிகம் காண முடிகிறது. அழகுநிலையங்களிலும், பழரச நிலையங்களிலும், உணவகங்களிலும் பணிபுரியும் இவர்கள் அடிப்படையில் கடின உழைப்பாளிகள்; பொறுமைசாலிகள். நேரம் பொருட்படுத்தாமல் வேலை செய்யக்கூடியவர்கள். அது அவர்களின் மரபணுக்களின் இயல்பாகவும் இருக்கக்கூடும். தமிழ்நாட்டின் ஏதோவொரு சிற்றூரின் அழகுநிலையத்தில் புன்முறுவலுடன் நம்மை வரவேற்கும் வடகிழக்குப் பெண்ணொருத்தி இருப்பார். எந்தவொரு கார்ப்பரேட் உணவகத்திலும் சிற்றெறும்புப்போல் வேலை செய்யும் வடகிழக்கிந்திய இளைஞர் ஒருவர் நிச்சயம் இருப்பார். குனிந்த தலை நிமிராமல், புன்னகை மட்டுமே பகிர்ந்துகொள்ளும், கூச்ச சுபாவமுடைய அந்தப் பகுதி மக்களைக் குறித்தும், அவர்கள் பிழைப்புவேண்டி நெடுந்தூரம் பயணிக்கவேண்டிய காரணங்கள் குறித்தும் யாரும் பெரிதாக கவனம் செலுத்துவதில்லை. இயற்கைச் சீற்றங்களின் விளைவால் தவிக்கும் மக்கள் எப்போதாவது போராட்டங்கள் நடத்தினால் வடகிழக்கு மாநிலங்கள் கவனம் ஈர்க்க முயல்கின்றன என்று அரசாங்கமே எள்ளி நகையாடுவதுண்டு. புறக்கணிப்பு இருக்குமிடத்தில் கவன ஈர்ப்பு முயற்சிகள் எதிர்வினையாக உருவாகத்தானே செய்யும்… “ஒருவேளை தொலைவிலிருப்பதால்தான் அரசின் பார்வை படாமல் போய்விட்டதோ…’’ என்று எனது அஸ்ஸாமிய நண்பர் ஒருவர் நகைச்சுவையாக அடிக்கடி கூறுவார்.

அஸ்ஸாம்

கல்லூரி நாள்களில் அறிமுகமான சில வடகிழக்கு மாநில மாணவர்களை உருவ கேலி செய்தும், அவர்தம் மொழியையும், உணவு முறையையும் பழித்துப் பேசிய தருணங்களை இன்றும் நினைத்துப் பார்த்து நான் வருந்துவதுண்டு. நம்மிலிருந்து முற்றிலும் வேறுபட்ட புதிய மனிதர்களைச் சந்திக்கையில் ஏற்படும் அச்சத்தின் விளைவால் நிகழ்த்திப் பார்க்கும் தற்காப்பு குரூரங்கள் அவை என்பது இப்போது புரிகிறது. இந்தப் புரிதலை சாத்தியப்படுத்தியதும் பயணங்களே. விதியின் அழைப்போ, தேடலின் விளைவோ… இரண்டில் எதுவென்று விளங்கும் முன்னரே காலம் என் கால்களுக்குப் புதிய திசைகளை அறிமுகப்படுத்தியிருந்தது.

கன்னியாகுமரியிலிருந்து திப்ரூகர் செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் வழித்தடம்தான் இந்தியாவின் மிக நீண்ட ரயில் தடம். ஐந்து நாள்கள் தொடரும் இந்தப் பயணம் இந்தியாவின் ஒன்பது மாநிலங்களைக் கடந்து செல்கிறது.

கொல்கத்தாவின் ஹவுரா ரயில் நிலையத்தை அடைந்ததும் இந்தியாவின் கிழக்கு முகம் பொலிவுபெறத் தொடங்குகிறது. இந்திய வரைபடத்தில் சிறியதொரு நிலத்துண்டம்போல் காட்சியளிக்கும் ஜல்பாய்குரி ரயில் நிலையத்தை வந்தடைந்தபோது நெடியதோர் உறக்கம் கலைந்து கண் விழித்தேன். ஏனைய இந்தியாவுடன் வடகிழக்கு மாநிலங்களை இணைக்கும் முடிச்சாக சிலிகுரி ஜல்பாய்குரி பகுதிகள் திகழ்கின்றன. இந்தியாவுக்குள் சீனா அத்துமீறி நுழையும் இடங்களுள் ஒன்றாகவும் சிலிகுரி நிலப்பகுதி இருப்பதால், இந்திய ராணுவத்தின் கட்டுப்பாடுகளும் அங்கு அதிகம்.

சிக்கன் நெக் (கோழிக் கழுத்து) என்று அழைக்கப்படும் சிலிகுரி, ஜல்பாய்குரி ரயில் நிலையத்தை அடைந்ததும், நடைமேடை சிற்றுண்டி வியாபாரிகள் ரயிலுக்குள் வேகமாக படையெடுப்பதைக் காண முடியும். கழுத்தைச் சுற்றி தொங்கவிடப்பட்டிருக்கும் உணவு சமைக்கும் பலகையை ஏந்தியபடி ஒருவர் பின் ஒருவராக நம்மை அணுகுவர். `மிஷ்டி தோஹி’, `ரோஷ்குலா’, `ஜல் முரி’ ஆகிய சொற்கள் தொடர்ந்து செவிகளில் ஒலித்தபடி இருக்கும். தாளம் அமைத்து, அவற்றை விற்கும் அவர்களின் அழைப்பை மறுப்பதென்பது அவ்வளவு எளிதல்ல. இனிப்பூட்டப்ட்ட தயிரில் குலோப் ஜாமூன்களும், ரசகுல்லாக்களும் ஊறவைத்த ஒரு கிண்ணத்தையும், `ஜல் மூரி’ என்னும் ஊறவைத்த கொண்டைக்கடலை கலந்த காரப்பொரியை மற்றொரு கிண்ணத்திலும் நிரப்பி என்னிடம் கொடுத்துவிட்டு மின்னல் வேகத்தில் மறைந்துவிட்டார் அந்த இளைஞர். “விலை எவ்வளவு?’’ என்று நான் கேட்டதற்கு, “நீங்க சாப்பிடுங்க, பணம் வந்து வாங்கிக்கிறேன்” என்னு புன்னகைத்துச் சென்றார்.

பயணம்

சராசரி இந்தியப் பெண்ணின் மன ஐயம் என்னுள்ளும் எழும்பியது. இவன் ஏன் இதை வலிந்து கொடுத்துவிட்டுப் போகிறான் என்ற கேள்வியுடன் சுற்றுமுற்றும் பார்த்தேன். சுற்றியிருந்தவர்கள் பெரும்பாலானோர் கைகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட ரசகுல்லா, மசாலாப் பொறி கிண்ணங்கள் இருந்தன. ஏதோவொரு மாயக் கிளர்ச்சியின் பிடியில் சிக்கியவர்கள்போல் சூழலில் பேச்சு சப்தம் திடீரென்று குறைந்து அனைவரும் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அதுவரை கடுமையை மட்டுமே சுமந்திருந்த எனது எதிர் இருக்கைக்காரரின் முகத்தில் பரவச மென்மையொன்று படர்ந்திருப்பதைக் காண முடிந்தது. உணவுச் சுவையின் பரவசம் அது. காமமும் உணவும் வெறுமை போக்கும் நிவாரணிகள் என்று எங்கோ படித்தது அப்போது நினைவுக்கு வந்தது.

யானையின் மணியோசைபோல் வடகிழக்கு இந்தியாவின் எல்லைகளை நெருங்கியதுமே காற்றெங்கும் கலந்திருந்து நம்மை வரவேற்கும் மற்றொரு விஷயம், அந்தப் பகுதியின் தேநீர் மணம். அந்தப் பகுதி நண்பரொருவர் தேநீரை `உயிரின் விழைவு’ என்பார்; ‘வாழ்க்கையை வரவேற்கும் அழைப்பிதழ்’ என்பார். உயிர்ப்பின் ருசி தேநீரில் உள்ளது. `எதைத் தன்னுடன் இணைத்துக்கொண்டாலும், தன் தனித்தன்மையைத் துறக்காத தேநீர் மனிதரிடம் பாகுபாடு பார்ப்பதில்லை. எங்கள் பகுதி தேநீரின் இளஞ்சிவப்பில் எங்கள் உழைப்பாளர்களின் வலியும் சினமும் கலந்துள்ளன” என்று சிலர் கூறக் கேட்டதுண்டு. மனிதர்களும் நிலமும் எவ்வளவு வெவ்வேறானாலும் உழைக்கும் வர்க்கம் சந்திக்கும் போராட்டங்களும் வலிகளும் உலகம் முழுதும் பொதுவானவையாகவே இருக்கின்றன என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். உழைப்பின் குரலுக்கு காலத்தைக் கடந்து ஒலிக்கும் வலிமை உண்டு.

உழைப்பு

பல்வேறு பழங்குடியின மக்கள் வாழும் வடகிழக்கு மாநிலத்தவரோடு நெருங்கிப் பழகியவர்களால் அவர்களது குணவியல்பில் ஒரு தீவிரமிருப்பதை உணர முடியும். செய்யும் வேலையில் நிதானமும் பொறுமையும் காட்டுபவர்கள், மனிதர்களிடம் மிக கவனமாகப் பழகுவார்கள். கோபமும் வேகமும் அதே அளவு ஆழமாக வெளிப்படும். மலைப் பகுதியொன்றில் அடர்ந்த வனத்தினுள் நுழைந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருக்கையில் எங்கிருந்தோ திடீரென்று ஒரு மனிதர் தோன்றி எங்களை பெருஞ்சினங்கொண்டு அவ்விடம்விட்டு விரட்டினார். நாங்கள் சென்றுவிடுகிறோம் என்று கூறிய பின்னரும் அவர் அமைதியடையவில்லை. மொழி புரியாவிடினும் எங்களை வன்மையாகத் திட்டுகிறார் என்று மட்டும் புரிந்தது. ஒரு ழியாக எங்களை அவ்விடத்திலிருந்து வெளியேற்றியதும் வேகமாகத் திரும்பிச் சென்றுவிட்டார். திரும்பியவரின் கைப்பையில் பாலித்தீன் பைகளும் பாட்டில்களும் நிரம்பியிருந்தன. அவரது கோபத்தின் காரணம் புரிய எங்களுக்கு நெடுநேரமாகவில்லை. “அவர் இங்க இருக்குற டிரைபல் மக்களில் ஒருவர்.

அந்த நிகழ்வுக்குப் பிறகு பயணங்களின்போது புகைப்படம் எடுப்பதையும், நொறுக்குத்தீனி எடுத்துச் செல்வதையும் பெருமளவு குறைத்துக்கொண்டேன்.

‘ஏழு சகோதரிகள்’ என்னும் அடைமொழி கொண்டு வழங்கப்படும் வடக்கிழக்கு மாநிலங்களின் முக்கியத்துவம் பெறும் மற்ற அடையாளங்களான பிரம்மபுத்திரா நதி, வடகிழக்கின் கலைப் படைப்புகள், மூங்கில் காடுகள், மஹாராஜா யானைகள், பழங்குடியினர் வாழ்வியல் ஆகியவற்றைக் காட்டிலும் என்னை மிகவும் கவர்ந்தது அந்தப் பகுதிப் பெண்களின் வாழ்வியல். ரசனையும் கடின உழைப்பும் கலந்த ஆளுமை பெற்ற பெண்களை அங்குதான் நான் முதன்முதலில் சந்தித்தேன். பெண்மை பொழியும் காமாக்யா தேவியின் நிலத்தை ஊடுருவிப் பாயும் பிரம்மபுத்திராவும் பெரும் ஆச்சர்யமே. ஆச்சர்யங்களை ஒவ்வொன்றாக இனி வரும் பகுதிகளில் அறியலாம்.

(பயணம் முடிவதில்லை…)

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.