Press "Enter" to skip to content

DC v RR: ஒற்றை ஆளாக வெள்ளையடித்த கோவாலு சஞ்சு சாம்சன்… பிளேஆப் குஷியில் டெல்லி! | IPL 2021

முதல்பாதி ஆக்ஷன், இரண்டாம்பாதி ஹாரர் என செல்வராகவனின் படம் போல இருவேறு ஜானர்களில் இருக்கிறது இந்த ஐபிஎல் தொடர். இந்தத் தடவையும் கஷ்டம்தான் என நினைத்த சென்னை டேபிள் டாப்பில் அமர்ந்தது, ஆர்.சி.பி அதிசயமாகத் தொடர்ந்து ஜெயித்தது, டெல்லியும் மும்பையும் எதிர்பார்த்த மாதிரியே டாப் 4ல் இருந்தது – இவை எல்லாமே முதல் பாதியில். இரண்டாம் லெக்கின் திரைக்கதையே வேறுவிதமாக இருக்கிறது.

மறுபடியும் யு.ஏ.இ-யா எனப் பதறிய சென்னை ரசிகர்களை சந்தோஷத்தில் திளைக்க வைத்திருக்கிறது அந்த அணியின் வெற்றிகள். மறுபக்கம் ‘துபாய்ல ஒரே ஒரு தூக்குதுரைதான்’ என கடந்த ஆண்டு மாஸ் காட்டிய மும்பை பிளேஆப்பிற்கு செல்லுவோமா மாட்டோமா என அதன் ரசிகர்களை தவிக்க விட்டிருக்கிறது. இது எல்லாவற்றையும்விட பெரிய ட்விஸ்ட் கே.கே.ஆர் கொடுத்ததுதான். முதல் பாதியில் ஷார்க்ஸ் அணியின் பிரேம்ஜி போல ஆடிக்கொண்டிருந்த அணி இரண்டாம் பாதியில் பீச்சில் அடித்து நொறுக்கி பேட்டை பிடுங்கும் சிறுவர்களைபோல கெத்து காட்டுகிறது. இனி ஆடும் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியம் என்கிற நிலையை எட்டியிருக்கிறது தொடர். அதனாலேயே டெல்லி – ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு எதிர்பார்ப்பிருந்தது.

DC v RR | IPL 2021

டாஸ் வென்ற ராஜஸ்தான் பீல்டிங் தேர்வு செய்தது. மோரிஸ், லூயிஸ் இருவருக்கும் பதில் சம்ஷியும் மில்லரும். கடந்த ஆட்டத்தில் காயமடைந்த ஸ்டாய்னிஸுக்கு பதில் டெல்லி அணியில் லலித் யாதவ். அந்த அணியின் இந்திய கோர் டீமே வலிமையானது என்பதால் இந்த முறை மூன்றே வெளிநாட்டு வீரர்கள்தான்.

டெல்லி ஓபனிங்கை பொறுத்தவரை இருவருமே பவர் ஹிட்டர்கள் இல்லை. ஆனால் விறுவிறுவென பவர்ப்ளேயில் ஸ்கோர் செய்பவர்கள். ஏனோ இந்த முறை ஆட்சியில் இல்லாத காங்கிரஸ் தலைமை போல அடக்கியே வாசித்தார்கள். முதல் மூன்று ஓவர்களில் 18 ரன்கள்தான். நான்காவது ஓவரில் நான்காவது பௌலிங் மாற்றம். தியாகியை கொண்டு வந்தார் சாம்சன். கை மேல் பலன். அவர் வீசிய முதல் பாலிலேயே தவான் போல்ட். அடுத்த ஓவரிலேயே ஷாவும் நடையைக் கட்ட, மொத்த பிரஷரும் இந்நாள் மற்றும் முன்னாள் கேப்டன்கள் மீது. பவர்ப்ளே முடிவில் 36/2.

பந்தை வாங்கினார் டி20 ரேங்கிங்கில் முதலிடத்தில் இருக்கும் சம்ஷி. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது போல அந்த ஓவரில் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஆரம்ப காலத்தில் நிதியமைச்சர் பி.டி.ஆர் போல களத்தில் அவரின் பேட் பேசுகிறதோ இல்லையோ, பன்ட் பேசிக்கொண்டே இருப்பார். ஆனால் சமீப காலங்களில் கீப்பிங் செய்யும்போது தர்மயுத்தம் தியான மோடில்தான் இருக்கிறார். இப்போது பேட்டிங்கும் அப்படியே! இந்த இரண்டு ஐபிஎல் சீசன்களில் அவரின் ஸ்ட்ரைக் ரேட் வெகுவாகக் குறைந்திருக்கிறது.

DC v RR | IPL 2021

மறுபக்கம் ஆங்கர் இன்னிங்ஸ் ஆடும் ஸ்ரேயாஸின் ஆட்டத்தில் இந்த முறை பொறி பறந்தது. திவேதியா, சம்ஷி வீசிய அடுத்தடுத்த ஓவர்களில் சிக்ஸ்கள் பறக்கவிட்டார். ரன்கள் மெதுவாக ஏற, ராஜஸ்தானுக்குத் தேவையாய் இருந்தது ஒரு விக்கெட். ‘நானிருக்க பயமேன்’ என அவர்களுக்கு கை கொடுத்தார் பன்ட். முஷ்தாபிஷுர் வீசிய ஷார்ட் பாலை தனது டெம்ப்ளேட் டீப் ஸ்கொயர் லெக் பக்கம் அடிக்க முயன்று போல்ட்டானார்.

திரும்பவும் சின்னம்மாவை பார்த்த ர.ர போல ரன்ரேட் தவழ ஆரம்பித்தது. போதாக்குறைக்கு ஸ்ரேயாஸும் அவுட்டாகி வெளியேற, ஸ்கோர் 14 ஓவர்கள் முடிவில் 92/4. சும்மா இழுத்து சாத்துவோம், ரன் வந்தா டீமுக்கு, அவுட்டானா பெவிலியனுக்கு என முடிவு கட்டி அடித்து வெளுக்க ஆரம்பித்தார் ஹெய்ட்மர். லலித் யாதவ் ஓவரில் இரண்டு பவுண்டரி, தியாகியின் ஓவரில் மூன்று பவுண்டரி என அவர் புண்ணியத்தில் டீசன்ட்டாக டெபாசிட் இழக்காமல் தப்பித்தது டெல்லி. கடைசி மூன்று ஓவர்களில் முப்பது ரன்கள் வர, ராஜஸ்தானுக்கு இலக்கு 155 ரன்களானது. கடந்த ஏழு ஆட்டங்களில் நான்கு முறை முதலில் பேட் செய்த அணி நூற்றி ஐம்பத்தி சொச்ச ரன்களை இலக்காக வைத்திருக்கிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஸ்லோ பிட்ச்களுக்கு இதுவே சாட்சி.

DC v RR | IPL 2021

கடந்த ஆட்டத்தில் லூயிஸுக்கு தன் இடத்தை விட்டுக்கொடுத்து மிடில் ஆர்டரில் இறங்கிய லிவிங்ஸ்டன் இந்த முறை ஓபனிங் இறங்கினார். உடன் கடந்த ஆட்டத்தில் வெளுத்து வாங்கிய ஜெய்ஸ்வால். ஆனால் இருவருமே சொல்லி வைத்ததுபோல அடுத்தடுத்து அவுட்டாகி நடையைக் கட்டினார்கள். ஓபனிங் சொதப்பலும் ராஜஸ்தானும் பா.ஜ.க நிர்வாகிகளும் உளறல்களும் போல. எப்போதாவதுதான் ஹிட்டடிக்கும். வழக்கம்போல இந்தத் தடவையும் பிரஷர் கேப்டன் சஞ்சு சாம்சன் மீது.

Also Read: IPL : பாவம் பஞ்சாபியன்ஸ்…யார் சிறப்பாகத் தோற்பது என்பதில் போட்டாபோட்டி…அப்புறம் என்ன நடந்துச்சுனா?

ஐந்தாவது ஓவரில், ‘நான் உங்க நாட்டுக்காரங்க மாதிரி கிடையாது. கண்டிப்பா உங்களுக்கு நல்லதுதான் பண்ணுவேன்’ என அஸ்வினிடம் விக்கெட்டை பறிகொடுத்து மில்லர் நடந்து போக, ‘வானம் தொட்டுப்போன…’ பாடல் பின்னணியில் ஒலிக்க, கண்ணில் நீர் வைத்துக்கொண்டார் அஸ்வின்.

DC v RR | IPL 2021

என்ன ஏதோ தட்கல்ல டிக்கெட் புக் பண்ணி போற மாதிரி டக்குடக்குனு கிளம்புறாங்க என மறுமுனையில் பரிதாபமாய் பார்த்துக்கொண்டிருந்தார் சாம்சன். அணிக்கான முதல் பவுண்டரியே ஏழாவது ஓவரில்தான் வந்தது. பவர்ப்ளே முழுக்க பவுண்டரி அடிக்காமல் ஒரு அணி பேட்டிங் செய்வது இது ஐபிஎல்லில் மூன்றாவது முறை.

11வது ஓவரில் லோம்ராரும் கிளம்ப, உள்ளே வந்தார் ரியான் பராக். அவரும் நிறைய நேரம் எல்லாம் எடுத்துக் கொள்ளவில்லை. இரண்டே ரன்களில் நடையைக் கட்டினார். இப்போது களத்தில் திவேதியா. ‘போன தடவை மாதிரி கடைசி நேரத்துல அடிச்சு ஜெயிக்க வச்சுடுவாரு’ என நகம் கடித்தபடி காத்திருந்தார்கள் ராயல்ஸ் ரசிகர்கள். சாரி, எப்பவாவது இறக்கினாதான் அந்த வித்தைக்கு மவுசு இருக்கும் என அவரும் டாட்டா காண்பிக்க, சந்திரமுகி பங்களாவை ஒற்றையாளாய் வெள்ளையடிக்கும் கோவாலுவை போலவிடாது சேஸ் செய்துகொண்டிருந்தார் சாம்சன்.

DC v RR | IPL 2021

ஆனாலும் ஸ்கொர்போர்ட் தமிழ் சினிமா டாக்டர் போல, ‘ஒரு ரெண்டு ஓவருக்கு முன்னாடி இதை செஞ்சிருந்தா கண்டிப்பா டீமை காப்பாத்திருக்கலாம். ஐ யம் சாரி’ எனக் கண்ணாடியை கழற்றியது. 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ஸ்கோர் 121/6. இதில் சாம்சன் மட்டும் 70 ரன்கள்.

16 புள்ளிகள் பெற்றுவிட்டாலே பிளேஆப்பிற்கு தகுதி பெற்றுவிட்ட கணக்குதான்… அதனால் யார் எப்படினாலும் போங்க. நாங்க பிளேஆப்புக்கு பிராக்டீஸ் பண்றோம் என ரிலாக்ஸாகிவிட்டது டெல்லி. சென்னைக்கும் இன்னும் ஒரே ஒரு வெற்றிதான் தேவை. மிஞ்சிய இரண்டு இடங்களுக்கு ஆறு அணிகள் முட்டி மோதப்போவதால் அரபு எமிரேட்ஸில் மணல் புயல்களைத் தாண்டிய மேட்ச் புயல்கள் இனி வீசத் தொடங்கும்.