கேரளா மாநிலம், கொச்சினைச் சேர்ந்த பாபு ஜார்ஜ் வாளவி என்கிற முதலீட்டாளர் ஒருவர் 43 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய `மேவார் ஆயில் அண்ட் ஜெனரல் மில்ஸ்’ நிறுவனத்தின் 3,500 பங்குகளின் இன்றைய மதிப்பு ரூ.1,448 கோடியாக அதிகரித்திருக்கிறது. ஆனால். அதற்குரிய தொகையை சம்பந்தப்பட்ட நிறுவனம் தர மறுப்பதால், செபியிடம் புகார் செய்துள்ளார். இந்த விவகாரம் பங்குச் சந்தை வட்டாரத்தில் தற்போது பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது

புகாரின் பின்னணி என்ன?

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் செயல்பட்டுவந்த `மேவார் ஆயில் அண்ட் ஜெனரல் மில்ஸ்’ நிறுவனத்தின் விநியோகஸ்தராக, பாபு ஜார்ஜ் வாளவி 1970-முதல் 1980-ம் ஆண்டு வரை இருந்திருக்கிறார். இந்த நிறுவனத்தின் நிறுவனருடனான நட்பின் அடிப்படையில், 1978-ம் ஆண்டு பாபு ஜார்ஜ் வாளவி தனது குடும்பத்தினர் நான்கு பேருடன் சேர்ந்து அந்த நிறுவனத்தின் 3,500 பங்குகளை வாங்கியுள்ளார். இது அன்றைய நிறுவனத்தின் பங்குகளில் 2.8% ஆகும்.

PI industries

அப்போது மேவார் ஆயில் அண்ட் ஜெனரல் மில்ஸ் நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படவில்லை. அதனால் வாளவி வாங்கிய பங்குகளுக்கு எந்தவித டிவிடெண்டும் வழங்கப்படவில்லை. நாளடைவில் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்ததை வாளவியின் குடும்பத்தினர் மறந்துவிட்டனர்.

2015-ம் ஆண்டில் வீட்டை சுத்தம் செய்தபோது, மேவார் ஆயில் அண்ட் ஜெனரல் மில்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பது தொடர்பான பங்குப் பத்திரங்கள் கிடைத்துள்ளன. இதைத் தொடர்ந்து இந்த நிறுவனத்தின் உண்மை நிலவரத்தை அறியும் முயற்சியில் பாபு ஜார்ஜ் வாளவி ஈடுபட்டார். அப்போதுதான் மேவார் ஆயில் அண்ட் ஜெனரல் மில்ஸ் நிறுவனத்தின் பெயர் `பி.ஐ.இண்டஸ்ட்ரீஸ்’ என மாற்றப்பட்டு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிந்தது தெரியவந்திருக்கிறது.

PI Industries

தன்னிடம் உள்ள பங்குகள் குறித்து அந்த நிறுவனத்திடம் தெரிவித்து, உரிமை கோரியபோது, 1989-ம் ஆண்டே அவர் வசம் இருந்த பங்குகள் விற்பனை செய்யப்பட்டுவிட்டதாக அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். தனது பங்குகள் முறைகேடாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள வாளவி, சட்ட ரீதியாக அணுகும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆறு ஆண்டுகள் ஆகியும் இந்தப் பிரச்னை முடிவுக்கு வராததால், இதுகுறித்து செபி அமைப்பிடம் வாளவி புகார் செய்திருக்கிறார்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

இந்த விவகாரம் குறித்தும், டிவிடெண்ட் பெறப்படாத மற்றும் உரிமை கோராமல் விடும் பங்குகள் என்னவாகும் என்பது குறித்தும் பங்குச் சந்தை நிபுணர் வ.நாகப்பனிடம் கேட்டோம்.

“பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் பல நிறுவனங்கள், அவர்களின் மோசமான செயல்பாடுகளால் பங்குச் சந்தையிலிருந்து காணாமல் போயிருக்கின்றன. அப்படியான பங்குகளில் முதலீடு செய்திருந்து, அந்த நிறுவனம் தொடர்பான பங்கு ஆவணங்கள் பல ஆண்டுகளுக்குப் பிறகு கண்டெடுக்கப் பட்டால் சிக்கலே இல்லை. ஏனெனில், நிறுவனமே இல்லாதபோது, யாரும் யாரிடமும் எந்தவொரு உரிமையும் கோர முடியாது.

பாபு ஜார்ஜ் வாளவி

ஆனால், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு நல்ல நிலையில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கும் பங்கு பத்திரங்கள் வீட்டில் கண்டுகொள்ளப்படாமல் இருந்து, பல ஆண்டுகளுக்குப் பிறகு கண்டெக்கப்பட்டால், பாபு ஜார்ஜ் வாளவியைப் போல பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். கண்டெடுக்கப்படும் பத்திரத்தில் பங்குகளை வாங்கியபோது இருந்த நிறுவனத்தின் பெயர்தான் இப்போதும் இருக்கிறதா அல்லது பெயர் மாற்றப்பட்டிருக்கிறதா என்பதை முதலில் பார்க்க வேண்டும். அடுத்தாக, நிறுவனத்தின் பெயர் மாற்றப்பட்டிருந்தால், அடுத்ததாக பங்கினுடைய பெய்ட்-அப் வேல்யூ 10 ரூபாயா அல்லது 2 ரூபாயா என்பதைக் கவனிக்க வேண்டும்.

Also Read: பங்குச்சந்தை முதலீடு உங்களுக்கு சரிப்பட்டு வருமா? இதைப் படிச்சிட்டு முடிவெடுங்க! – 20

மூன்றாவதாக, பங்குதாரரிடம் பங்கு வந்து சேர்ந்த தேதிக்குப் பிறகு, அந்த நிறுவனம் வழங்கியிருக்கும் போனஸ், டிவிடெண்ட், ஸ்டாக் ஸ்பிலிட் போன்ற விஷயங்களைக் கவனிக்க வேண்டும். அப்போதுதான் பங்குப் பத்திரம் கண்டெடுக்கப்பட்ட தினத்தில், பங்குதாரரின் கைவசம் இருக்கும் பங்குகளின் எண்ணிக்கை மற்றும் அதன் மொத்த மதிப்பைத் தெரிந்துகொள்ள முடியும். வாளவியின் விவகாரத்தில் இந்த அடிப்படையில்தான், தற்போது அவரின் கைவசம் இருக்கும் பங்கின் மொத்த மதிப்பு ரூ.1,448 கோடி எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது.

சிக்கலும், இருதரப்பு நியாயமும்!

மேலே குறிப்பிட்டது போல, வாளவி விவகாரத்தில், `மேவார் ஆயில் அண்ட் ஜெனரல் மில்ஸ்’ என்ற நிறுவனத்தின் பெயர் `பி.ஐ.இண்டஸ்ட்ரீஸ்’ எனப் பெயர் மாற்றப்பட்டிருக்கிறது. புரமோட்டர்கள் மாறியிருக்கிறார்கள். நிறுவனத்தின் செயல்பாடுகளில் மாற்றம் வந்திருக்கிறது. அந்த நிறுவனம் பங்குச் சந்தையிலும் பட்டியலிடப்பட்டிருக்கிறது.

பங்குச்சந்தை

அந்தக் காலத்தில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனத்தின் பங்குகள் ஃபிசிக்கல் பங்குப் பத்திரங்களாக மட்டுமே விநியோகம் செய்யப்பட்டன. அதனால் அவரிடம் தற்போதிருக்கும் `மேவார் ஆயில் அண்ட் ஜெனரல் மில்ஸ்’ நிறுவனத்தின் ஃபிசிக்கல் பங்கு பத்திரங்களை முதலில் டிமேட் பங்குகளாக மாற்ற வேண்டும். தன்னிடம் உள்ள பங்குச் சார்ந்த ஆவணங்களை உண்மை எனவும், அந்தப் பங்குகளை 1989-ம் ஆண்டு அவர் விற்கவில்லை எனவும் அவர் நிரூபிக்க வேண்டும்.

அதே நேரத்தில், பி.ஐ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தரப்பில், 1989-ம் ஆண்டு பங்குகள் விற்பனையானதற்கான ஆவணங்கள் மற்றும் இந்தப் பங்கு வர்த்தகம் தொடர்பான ஆவணங்களையும் அவர்கள் சமர்ப்பித்து அதன் உண்மைத்தன்மையை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். அப்போதுதான் இந்த பிரச்னை ஒரு முடிவுக்கு வரும். இன்று, நேற்றைக்கான சமாசாரம் இது இல்லை என்பதால் நிச்சயமாக இதற்கு நேரம் எடுக்கும்” என்றார் அவர்.

பங்கு முதலீட்டில் பணத்தை முதலீடு செய்வது எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு முக்கியம் அது தொடர்பான விவரங்களை சரியாக கண்காணிப்பது. பங்கு முதலீட்டாளர்கள் அனைவரும் தாங்கள் வாங்கி வைத்திருக்கும் பங்குகள் குறித்து கவனமாக இல்லாவிட்டால், வாளவிக்கு நேர்ந்த கதி நமக்கும் ஏற்படலாம் என்பதே இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.