ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிடுபவர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, ராஜலட்சுமி உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அதிமுக ஆலோசனைக் கூட்டம்

கூட்டணிக் கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவரான நயினார் நாகேந்திரன் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகையில், “அதிமுக என்பது மாபெரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இயக்கம். அப்படியானால் ஏன் கட்சியை விட்டுப் போனீர்கள் எனக் கேட்கலாம். அது எனக்குத் தெரியாது. ஒருவேளை எடப்பாடியாருக்குத் தெரிந்திருக்குமோ என்னவோ, ஆனால், ஒரு காரணம் இருக்கவே செய்கிறது.

அதிமுக வாழ வேண்டும், வளர வேண்டும் என்பதில் எனக்கு முழு அக்கறையும் நம்பிக்கையும் உண்டு என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். எனக்கு இந்தக் கூட்டத்தைப் பார்க்கும்போது பழைய நினைவுகள் எல்லாம் வருகிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் உருவாக்கிய அற்புதமான இயக்கம் அதிமுக

அதிமுக கூட்டத்தில் பங்கேற்றவர்கள்

இந்தியாவில் இன்று இவரைவிட்டால் ஆளுவதற்கு யாருமில்லை என்கிற அளவுக்கு இரும்பு மனிதராய் பிரதமர் நரேந்திரமோடி இருக்கிறார். அவர், அதிமுகதான் தமிழகத்தை ஆள வேண்டும், எடப்பாடியார் தான் முதல்வராக இருக்க வேண்டும் என்று நான்கு வருடங்கள் பக்கத் துணையாக இருந்தார்.

தமிழகத்தில் மூன்று சதவிகித வாக்குகளில் கடந்த தேர்தலில் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டது. ஆனால், இன்று இங்கிருந்து நிறைய பேர் திமுக-வில் போய் சேருகிறார்கள். அதிமுக என்பது ஒரு காட்டாற்று வெள்ளம். வெள்ளம் அதிகமாக வரும்போது சற்று வழுக்கி ஓடும். அதைப்பற்றி யாரும் கவலைப்படத் தேவையில்லை. அதற்காக அதிமுகவுக்கு எந்தக் குறையும் வராது.

நயினார் நாகேந்திரன்

இன்னும் சிலர் உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சி தான் வெற்றியைக் கைப்பற்றும் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் முடிவை ஆளுங்கட்சிக்குச் சாதகமாக அதிகாரிகள் அறிவித்து விடுவார்கள் என வதந்தியைப் பரப்புகிறார்கள். யாரும் அதிமுக-வின் வெற்றியைக் கைப்பற்றிவிட முடியாது. அதிமுக ஒருநாளும் தோல்வியைத் தழுவாது. வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்” என்று நயினார் நாகேந்திரன் பேசினார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.