திருவள்ளூர் மாவட்டம், ஆவடி, பிரகாஷ் நகர் 6-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சேஷாத்திரி (50). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் கடந்த சில வருடங்களாகத் தொடர் நஷ்டத்தைச் சந்தித்து வந்துள்ளார். முதலீடு செய்த பணம் லாபமாகத் திரும்பக் கைக்குக் கிடைக்காத நிலையில், கொரோனா பெருந்தொற்று சூழலின் தாக்கம் சேஷாத்திரியின் குடும்பத்தை மிகுந்த பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளிவிடவே, மாற்றுத் தொழில் ஏதாவது செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்ற முடிவில் அவர் இருந்திருக்கிறார். ஆனால், அதற்கும் வழியில்லாமல் போனதால் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே சண்டை வெடித்திருக்கிறது. ரியல் எஸ்டேட் தொழிலில் நஷ்டம், மாற்றுத் தொழிலுக்கும் வழியில்லை, குடும்பத்தில் நிம்மதியில்லை என்ற நிலையில் சேஷாத்திரி மது போதைக்கு அடிமையாகி விட்டுக் கடந்த சில மாதங்களாக மிகுந்த மன அழுத்தத்திலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

மன அழுத்தம்

இந்நிலையில், நேற்று முன்தினம் மது போதையில் வீட்டில் சண்டை போட்டுவிட்டு, பிரகாஷ் நகர்ப் பகுதியிலுள்ள ஏ.டி.எம் ஒன்றில் பணம் எடுப்பதற்காகச் சேஷாத்திரி சென்றிருக்கிறார். ஆனால், வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் இயந்திரத்தில் பணம் எடுக்க முடியவில்லை. அதனால், ஆத்திரமடைந்த சேஷாத்திரி கையால் ஓங்கி ஏ.டி.எம் இயந்திரத்தை அடித்திருக்கிறார். அதில் இயந்திரத்தின் திரை முழுவதுமாக சேதமடைந்திருக்கிறது. தொடர்ந்து, அந்த இயந்திரத்தை உடைக்க முயன்றிருக்கிறார். ஆனால், சாத்தியப்படாமல் போகவே ஆத்திரம் தணியாத சேஷாத்திரி, வீட்டிற்குச் சென்று கத்தி உள்ளிட்ட பொருள்களை எடுத்துக்கொண்டு, திருநின்றவூர் சி.டி.எச் பகுதியிலுள்ள கனரா வங்கி ஏ.டி.எம் இயந்திரம் மற்றும் அதன் அருகிலுள்ள 4 ஏ.டி.எம் இயந்திரங்களை உடைக்க முயன்றிருக்கிறார். சேஷாத்திரி ஏ.டி.எம் இயந்திரங்களை உடைப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நபர் ஒருவர் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தொடர்பு கொண்டு புகார் அளித்திருக்கிறார்.

Also Read: கோவை: ஏ.டி.எம் மையங்களில் முதியவர்கள் டார்கெட்; சிக்கிய உதவி ஒளிப்பதிவாளர்! – அதிர்ச்சிப் பின்னணி

திருநின்றவூர் காவல் நிலையம்

ஆனால், சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைவதற்குள் அங்கிருந்து கிளம்பிச் சென்ற சேஷாத்திரி, பின்னர் தாமாகவே சென்று நடந்ததைக்கூறி திருநின்றவூர் காவல்நிலையத்தில் சரணடைந்தார். சேஷாத்திரி கைது செய்த போலீஸார் அவரை விசாரித்த போது, “தொழிலில் ஏற்பட்ட தொடர் நஷ்டத்தால், விரக்தியில் செய்வதறியாது செய்துவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். என்னைத் தயவு செய்து சிறையில் அடைத்து விடுங்கள்” என்று அழுது புலம்பியிருக்கிறார். சேஷாத்திரி உடைத்த ஏ.டி.எம் இயந்திரங்கள் மற்றும் அங்குப் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளைச் சிறையில் அடைத்தனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.