சென்னை, எம்.கே.பி நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திர குமார் ( 52). இவர் பூக்கடை கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் ஜெயின் கேட்டராலா கெமிக்கல் என்ற பெயரில் உணவுப் பொருள்களுக்கு பயன்படுத்தும் அமிலங்களை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த 13- ம் தேதி ராஜேந்திரகுமார் கடையில் இல்லை. ஊழியர் மனோஜ் மட்டும் இருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர், ஓனர் இல்லையா என மனோஜிடம் கேட்டிருக்கிறார். அதற்கு மனோஜ், வெளியில் சென்றிருக்கிறார் என்று பதிலளித்திருக்கிறார். இதையடுத்து மனோஜிடம் அந்த நபர், நான் உங்க ஓனரின் நண்பர். அவரைப்பார்க்கத்தான் வந்தேன். என்று பேசியிருக்கிறார்.

திருடன்

Also Read: இரவு 10 மணிக்குப் பூட்டிய வீடு; 11 மணிக்குக் கொள்ளை! – சுற்றுலா சென்ற பொறியாளர் வீட்டில் துணிகரம்

பின்னர் எனக்கு தலைவலிக்கிறது, டீ வாங்கித் தரமுடியுமா என்று மனோஜிடம் அந்த நபர் கேட்டிருக்கிறார். அதனால் மனோஜ், டீ வாங்கச் சென்றிருக்கிறார். டீ வாங்கிக்கொண்டு கடைக்கு மனோஜ் வந்தபோது அந்த நபர் கடையில் இல்லை. அதனால் வழக்கம் போல மனோஜ், தன்னுடைய வேலையில் ஈடுபட்டிருக்கிறார். மாலையில் ராஜேந்திரகுமார், கடைக்கு வந்திருக்கிறார். அப்போது அவர், கல்லா பெட்டியை திறந்து பார்த்தபோது அதற்குள் வைத்திருந்த 5 லட்சம் ரூபாய், கலெக்ஷன் பணம், 200 கிராம் எடையுள்ள தங்க கட்டிகள் ஆகியவை மாயமாகியிருந்தன. அதனால் ராஜேந்திரகுமார் அதிர்ச்சியடைந்தார். பின்னர் கடை ஊழியர் மனோஜிடம் விசாரித்தபோது, கடைக்கு வந்த மர்ம நபர் குறித்து கூறியிருக்கிறார்.

மர்ம நபர் மீது சந்தேகமடைந்த ராஜேந்திரகுமார், பூக்கடை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் துணை கமிஷனர் மகேஷ்வரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ராணி தலைமையிலான போலீஸார், சம்பவம் நடந்த கடைக்குச் சென்று விசாரித்தனர். அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது மனோஜ், டீ வாங்கச் சென்ற நேரத்தில் கடையின் கல்லா பெட்டியை கள்ளச்சாவி போட்டுத் திறந்த மர்ம நபர், அதிலிருந்த பணம், தங்கக் கட்டிகளை எடுத்துக் கொண்டு செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அந்தக் காட்சிகள் அடிப்படையில் போலீஸார் விசாரித்தபோது இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது பிரபல திருடன் முகமது சமீர் எனத் தெரியவந்தது.

சிசிடிவி கேமரா

உடனடியாக போலீஸார் முகமது சமீரைத் தேடினர். போலீஸாரின் விசாரணையில் முகமது சமீர் பெங்களூரு, மும்பையில் தங்கியிருக்கலாம் எனத் தகவல் கிடைத்தது. அதனால் தனிப்படை போலீஸார் பெங்களூரு, மும்பைக்குச் சென்றனர். மும்பையில் பதுங்கியிருந்த முகமது சமீரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர், பணம், தங்கக்கட்டிகளைத் திருடியது தெரியவந்தது. கொள்ளையடித்த பணத்தில் முதல் மனைவி, இரண்டாவது மனைவி விரும்பி கேட்ட பொருள்களை முகமது சமீர் வாங்கிக் கொடுத்ததும் தெரிந்தது. பெங்களூருவில் உள்ள மனைவிக்கு வாஷிங் மிஷின், பிரிட்ஜ் என வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கிக் கொடுத்த முகமது சமீர், மும்பைக்குச் சென்றிருக்கிறார். அங்கு வசிக்கும் அவரின் மனைவி, கார் ஒன்று வேண்டும் என கேட்டிருக்கிறார். உடனே புதிய கார் ஒன்றை வாங்க அட்வான்ஸாக பணத்தையும் கார் ஷோரும்பில் கொடுத்திருக்கிறார். இந்தச் சமயத்தில்தான் முகமது சமீர் போலீஸாரிடம் சிக்கிக் கொண்டார்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “பிரபல கொள்ளையன் முகமது சமீர் மீது சென்னை மட்டுமல்லாமல் பெங்களூரு, மும்பை ஆகிய இடங்களிலும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. பூட்டை உடைக்காமல் புத்திச்சாலித்தனமாக கொள்ளையடிப்பதே முகமது சமீரின் ஸ்டைல். ராஜேந்திரகுமாரிடம் பணம் புழக்கம் இருப்பதைத் தெரிந்துக் கொண்ட முகமது சமீர், அவர் இல்லாத நேரத்தில் சென்று நகை, பணத்தைத் திருடியிருக்கிறார். ராஜேந்திரகுமார், தன்னுடைய மகளின் திருமணத்துக்காகத்தான் தங்க கட்டிகளை கல்லா பெட்டியில் வைத்திருந்ததாக போலீஸாரிடம் கூறியிருக்கிறார்.

திருட்டு

திருடிய பணத்தில் வீட்டு உபயோகப் பொருள்களை முகமது சமீர் வாங்கியிருப்பதால் அவற்றை பெங்களூருவிலிருந்து லாரி மூலம் போலீஸார் சென்னைக்கு கொண்டு வந்திருக்கின்றனர். அந்தப் பொருள்களை ராஜேந்திரகுமாரிடம் ஒப்படைக்க போலீஸார் முடிவு செய்திருக்கின்றனர். திருமண வீட்டு சீர்வரிசை பொருளாக அவற்றை ராஜேந்திரகுமார் பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது. மேலும் முகமது சமீரிடம், தங்கக் கட்டிகள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். விசாரணைக்குப்பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.