திருப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவருகிறது ‘வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையம்.’ இந்த ஆய்வு மையத்தைச் சேர்ந்த பொறியாளர்கள் ரவிக்குமார், பொன்னுசாமி மற்றும் சக்தி பிரகாஷ் ஆகியோர் ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டத்தில் நொய்யல் ஆற்றின் மேற்குக் கரையில் அமைந்துள்ள அஞ்சூர் கிராமத்தில் சமீபத்தில் கள ஆய்வு மேற்கொண்டிருக்கின்றனர். அஞ்சூர் கிராமத்திலுள்ள பாண்டீஸ்வரர் மற்றும் கொற்றவை கோயிலின் பின்பகுதியில் முட்புதர்களுக்கு இடையே நடந்த இந்தக் கள ஆய்வில், 1,500 ஆண்டுகள் பழைமையான இரண்டு வெண்சாமரம் வீசும் பெண் சிற்பங்களைக் கண்டுபிடித்து ஆச்சரியப்பட வைத்திருக்கின்றனர்.

முட்புதர்களுக்கு இடையே கிடந்த சிற்பங்கள்

வலது பக்கம் வெண்சாமரம் உள்ள சிற்பம்:

150 செ.மீ உயரமும், 45 செ.மீ அகலமும் கொண்ட இச்சிற்பத்தில் உள்ள பெண், தனது இடது காலை ஊன்றி வலது காலைச் சிறிது மடக்கியும் வலது கையை மடக்கியும் இருக்கும் தோற்றத்தில் உள்ளார். வலது கையை மடக்கி, பிடித்துள்ள வெண்சாமரம் வலது தோளில் சாய்ந்து காணப்படுகிறது. தன் இடது கையை ஊருஹஸ்த நிலையில் தன் தொடையின் மீது பதித்து இச்சிற்பம் காணப்படுகிறது. மேலும், சிற்பத்தின் இடையில் இடைக் கச்சை ஆடை காணப்படுகிறது. இடைக் கச்சையின் வலதுபுறத்தில் தொங்கிய நிலையில் பசும்பை என்னும் மங்கலப் பொருள்கள் வைக்கும் சுருக்குப்பை காணப்படுகிறது. காதில் குழைவகைக் காதணியும், கழுத்தில் கண்டிகை மற்றும் சரப்பளி வகை அணிகலன்களும் காணப்படுகின்றன. தலையில் மகுடம் அணிந்து காணப்படும் இச்சிற்பம் தனிச்சிறப்புடன் திகழ்கிறது.

1500 ஆண்டுகள் பழைமையான வெண்சாமரம் வீசும் பெண் சிற்பம்

Also Read: உடம்பில் 9 தசைகளை அரிந்து நவகண்டச் சிற்ப சடங்கு! – சோழவந்தான் சிற்ப பின்னணி

இடது பக்கம் வெண்சாமரம் உள்ள சிற்பம்:

இடதுபக்கம் வெண்சாமரம் உள்ள சிற்பமானது 120 செ.மீ உயரமும், 60 செ.மீ அகலமும் கொண்டதாக இருக்கிறது. இச்சிற்பத்தில் உள்ள பெண் தன் வலது மற்றும் இடது காலை சிறிது மடக்கி சதுர நடன அமைப்பில் உள்ளது. தன் வலது கையை மடக்கிப் பிடிந்திருக்க வெண் சாமரம் இடது தோளில் சாய்ந்து காணப்படுகிறது. இடது கையைத் தொடையின் மேல் வயிற்றுப்பகுதியில் ஏந்தி அர்த்த சந்திர முத்திரையில் இருக்கிறது. காதில் பத்திர குண்டலமும், கழுத்து மற்றும் கைகளில் அணிகலன்கள் அணிந்து காணப்படும் இச்சிற்பங்கள் சாத்விகத் திருவுருவ அமைப்பில் நின்ற கோலத்தில் காணப்படுகின்றன.

இடது பக்கம் வெண்சாமரம் உள்ள சிற்பம்

இதுகுறித்து ஆய்வு மையப் பொறியாளர் ரவிக்குமார் கூறுகையில்,

“கொடுமுடி அருகேயுள்ள அஞ்சூர் கிராமத்தில் 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டீஸ்வரர் என்னும் சிவன் கோயிலும், அதனருகே சிங்கத்தை வாகனமாகக் கொண்ட வனபத்ரகாளியம்மன் கோயில் ஒன்றும் இருக்கின்றன. கொங்கு மண்டலத்தில் சிங்கத்தை வாகனமாகக் கொண்ட அம்மன் மிகவும் குறைவு. அதைப் பார்க்கச் சென்றபோதுதான் இந்தச் சிற்பங்களைக் கண்டோம். முதலில் இதனை நடுகல் என்றுதான் நினைத்தோம். அதன்பிறகு அதனை ஆய்வு செய்ததில், கொங்கு மண்டலத்தில் வடிக்கப்பட்ட சிற்பங்களில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில் இதுதான் காலத்தால் முற்பட்டது எனத் தெரியவந்திருக்கிறது. இச்சிற்பங்கள் கி.பி 5, 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கக்கூடும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.