புனிதா பரத்தின் அறையில் இருந்து வந்ததை தெரிந்து கொண்டபின் அவள் மேல் காயத்ரி கோபமாக இருக்கிறாள். ”வெறும் காதல் என்று நினைத்தேன்… ஆனால், இவ்வளவு தூரம் சென்று விட்டாய், வீட்டுக்கு தெரிந்தால் உன் அம்மா ஏதாவது செய்து கொள்வார்கள்” என்கிற காயத்ரியிடம், ”அதனால்தான் வீட்டில் சொல்லவில்லை” என்கிறாள் புனிதா.

காயத்ரி புனிதாவிடம் ‘’உறவினர்கள் எல்லோருக்கும் உன்னை பிடிக்கும் ஆனால் நீ மாறி விட்டாய்’’ என்கிறாள். புனிதா, ”மாடர்ன் டிரஸ் போட்டுக்கொண்டால் உள்ளிருக்கும் குணம் மாறிவிடுமா?” என்று மறுகேள்வி கேட்கிறாள். இந்த உரையாடல் இப்படியே தொடர்கிறது.

காயத்ரிக்கு புனிதா தவறு செய்திருக்கிறாள் என்பதைவிட புனிதாவிடம் அந்த உறுத்தல் இல்லவே இல்லை என்பது மிகவும் பிரச்னையாக இருக்கிறது. ஒருவேளை புனிதா தான் செய்தது தவறு என்று காயத்ரியிடம் ஒப்புக்கொண்டு வருத்தப்பட்டு பேசி இருந்தால், காயத்ரி சமாதானமாகி இருக்கலாம். புனிதாவின் தெளிவும், தைரியம் காயத்ரியை கோபமூட்டுகிறது.

AKS – 20 | ஆதலினால் காதல் செய்வீர்

தமிழ் திரைப்படங்களில் ஒரு பெண் சுதந்திரமாக இருக்கும்போது நவீன ஆடைகள் அணிந்திருப்பாள். பிறகு அதே பெண் கதாநாயகனின் காதலை ஏற்றுக்கொண்ட பின் (அதாவது பெண்ணின் சுதந்திரம் தவறு என்று கதாநாயகன் அவளை திருத்தி தனக்கு அடிமையாக்கிய பிறகு) சட்டென்று ஒரே நாளில் இடுப்பு வரையிலும் நீளமாக முடி வளர்த்து, சடைப் பின்னி, பூ வைத்து, புடவை கட்டிக்கொண்டு வந்து தலைகுனிந்து அவன் முன்னால் நிற்பாள். அதாவது மார்டனாக, சுதந்திரமாக இருந்த பெண் திடீரென குடும்பப் பெண்ணாக மாறி விட்டாளாம்.

புடவைக் கட்டி, பூ வைத்துக் கொள்பவர்கள் குடும்ப பெண்களாகவும், நவீன ஆடைகள் உடுத்துபவர்கள் குடும்பம் நடத்த ஆகாதவர்கள் என்கிற எண்ணமும் நம் சமூகத்தின் பொது புத்தியில் பல்லாண்டு காலமாக இருக்கின்றது. அதைத்தான் காயத்ரி புனிதாவிடம் எதிரொலிக்கிறாள்.

மாடர்னாக உடுத்துபவர்களுக்கு நேர்மையும், சுய ஒழுக்கமும் இருக்காது என்கிற எண்ணமும் மக்களிடயே உள்ளது. வெளிப்படையாக பேசுவது குறைந்திருந்தாலும் மனதளவில் பெரும்பாலும் இந்த எண்ணம் பலருக்கும் ஊறிப்போய் உள்ளது. அதனால்தான் ’துப்பட்டா போடுங்கள் தோழி’ என்கிற கமென்ட்டை நாம் கேலி செய்தாலும் இன்னமும் முன்பின் தெரியாத பெண்களின் புகைப்படங்களில்கூட இவ்வாறு சீரியஸாக கமென்ட் செய்பவர்கள் இருக்கிறார்கள்.

புனிதா தான் பரத்துடன் ’லிவ்-இன்’ ரிலேஷன்ஷிப்பில் இருப்பதை காயத்ரிக்கு புரிய வைக்க, தாங்கள் இருவரும் கணவன் மனைவி போல் வாழ்ந்து வருவதாக கூறுகிறாள். அதை கேட்டு காயத்ரிக்கு மயக்கம் வருவது போல் இருக்கிறது. புனிதா ஊருக்காக வாழமுடியாது என்றும் தன்னுடைய வாழ்க்கையைத் தீர்மானிக்கும் வயதும், மனமுதிர்ச்சியும் தனக்கு இருக்கிறது என்றும் சொல்கிறாள். காயத்ரிக்கு புனிதாவின்மீது இருக்கும் அக்கறையைவிட ஊரை பற்றிய கவலைதான் அதிகமாக இருக்கிறது என்று புனிதா நேரடியாகக் கேட்கிறாள்.

AKS – 20 | ஆதலினால் காதல் செய்வீர்

இந்த கேள்வி காதல் திருமணத்தை எதிர்க்கும் தன் குடும்பத்தினரிடம் காதலிப்பவர்கள் கேட்க வேண்டிய கேள்வி. பலருக்கும் இன்று தங்கள் பிள்ளைகளைவிட சாதி, மதம், ஊர், உறவினர்கள், கௌரவம் முக்கியமாக இருக்கின்றன. பிள்ளைகளின் மகிழ்ச்சியை எண்ணி அதற்காக காதல் திருமணங்களுக்கு சம்மதிப்பவர்கள் வெகு சிலர்தான்.

நமக்கு ஒருவர்மீது உண்மையான அன்பு இருக்கும்போது அவர்களின் மகிழ்ச்சிதான் முதலில் நினைவுக்கு வர வேண்டும். அப்படியே ஊரில் தவறாகப் பேசுவார்கள் என்று இருந்தாலும் கூட நம்மைச் சார்ந்தவர்கள் நேர்மையான காரியம் செய்யும்போது அவர்களை ஆதரிப்பதுதான் அன்பின்வழி நிற்பதாகும். பெரும்பாலும் போலியான பிற்போக்குத்தனங்களை காரணம் காட்டி உடனிருப்பவர்களின் சுதந்திரத்தை தவறு என்று சொல்பவர்கள் இறுதியாக கையில் எடுக்கும் ஆயுதம், “உன் மேல் இருக்கும் அக்கறையினால் தான் சொல்கிறேன்” என்பது. இங்கே காயத்ரியும் அதையே தான் சொல்கிறாள்.

”புரட்சி செய்கிறேன் என்று உன் வாழ்க்கையை நாசமாக்கி வைத்திருக்கிறாய்” என்று காயத்ரி சொல்லும்போது டி-ஷர்ட் அணிந்த போன நூற்றாண்டு அப்பத்தாவை போல இருந்தாள். ஆரம்பத்தில் புனிதாவின் உடைகளை குறைகூறும் காயத்ரி இன்று தானும் டி-ஷர்ட், ட்ராக் பேன்ட்ஸ் அணிந்துதான் நடைபயிற்சிக்கு வந்திருக்கிறாள். இந்த உடைகள் அவளது கிராமத்தில் அணிவது சாத்தியமில்லை. அது காயத்ரிக்கும் தெரியும்.

AKS – 20 | ஆதலினால் காதல் செய்வீர்

இங்கே முற்போக்கு என்பது அவரவர் வசதிக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளப்படுகிறது. ஒரு காலத்தில் படிக்கும், வேலைக்குச் செல்லும் பெண்கள் ஒழுக்கம் இல்லாதவர்களாக கருத்தில் கொள்ளப்பட்டார்கள். காயத்ரியும்கூட தன் குடும்பத்தில் போராடி அனுமதி வாங்கித்தான் சென்னையில் வேலைக்கு வந்து இருக்கிறாள். ஆனால், அந்த சுதந்திரம் நேர்மையானதாக, சரியானதாகவும், புனிதாவின் சுதந்திரம் தவறானதாகவும் அவளுக்குப் படுகிறது.

பணம் சம்பாதித்து தன் தந்தையை தலைநிமிர்ந்து வாழ வைப்பதே தனது லட்சியம் என்று கூறும் புனிதாவிடம் காயத்ரி, ”அப்படி என்றால் நீ திருமணம் செய்து கொள்ளாமல் உன் அப்பாவுக்குப் பணம் சம்பாதித்துக் கொடுப்பது அவருக்கு விருப்பமா” என்று கேட்கிறாள்.

குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு பொருளாதார ரீதியாக பிள்ளைகளை நம்பியிருக்கும் பெற்றோர்கள் இருக்கிறார்கள். தங்கள் மகளின் வருமானத்தை நம்பி இருக்கும் பலரும், பெண்களை திருமணம் செய்து வைக்காமல் தங்களோடு இறுதிவரை வைத்துக்கொண்டு அன்பின் பெயரால் உழைப்பு சுரண்டல் செய்யும் பெற்றோர்கள் தற்போது பெருகி வருகிறார்கள்.

ஆனால், புனிதாவின் தந்தை காயத்ரி கூறியதுபோல பணத்துக்காக அவளை சென்னையில் வேலைக்கு அனுப்பவில்லை. முற்போக்காளரான அவர் தன் பெண்பிள்ளைகளுக்கு சமத்துவத்தை சொல்லித்தந்து அவர்களது சொந்த காலில் நிற்கவேண்டும் என்பதற்காக வேலைக்கு அனுப்புகிறார்.

தமிழ்நாட்டில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, இலவச கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு எல்லாம் வந்தபிறகு பெண்களும் ஆண்களுக்கு சமமாக கல்வி கற்று, வருமானம் ஈட்ட ஆரம்பித்தாயிற்று. ஆனால், இன்னமும் பெற்றோரை கவனித்துக் கொள்வது ஆணின் கடமை மட்டுமே என்பது போல பேசுகிறார்கள். புனிதாவை அவள் தந்தை கல்லூரி வரை படிக்க வைத்திருக்கிறார். அப்படியிருக்க புனிதா வேலைக்கு சென்ற தன் தந்தைக்கு உதவி செய்யவேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. இதுவே ஒரு ஆண் பிள்ளை இவ்வாறு செய்யும்போது அது மகன் தந்தைக்கு செய்யும் கடமை என சமூகம் சொல்கிறது. அந்த கடமை ஏன் பெண் பிள்ளைகளுக்கு இல்லை? ஆண், பெண் பிள்ளைகளை ஒன்றுபோல வளர்க்கும் பெற்றோர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை இருவருமே சமமாக செய்வதுதான் முறை.

AKS – 20 | ஆதலினால் காதல் செய்வீர்

தொழிலதிபர் ஆவதே தனது லட்சியம் என்றும் இப்போதைக்கு திருமணம், குழந்தை, குடும்பம் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த முடியாது என்றும் புனிதா கூறுகிறாள். இதை கேட்டு காயத்ரி அதிர்ச்சி அடைகிறாள்.

திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு ஆண் தொழிலதிபராக, அரசியல்வாதியாக, நடிகராக இருக்கும்போது அது பெருமையாக புகழ்ந்து பேசப்படுகிறது. திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு பெண் தனக்கு பிடித்த துறையில் சாதிக்க நினைப்பதை இங்கு பெண்களாலேயே கூட சரி என ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் இல்லை என ஒரு பெண் சொல்லும்போது சமூகம் தூக்கத்தில் இருந்து எழுவது போல் பதறி எழுகிறது.

எதையோ கேட்க வந்து பாதியில் நிறுத்திவிடும் காயத்ரியிடம், “குழந்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டு உடலுறவு வைத்துக்கொள்வது மட்டும் சரியா என கேட்க நினைக்கிறாயா” என்று புனிதா கேட்கிறாள். அதோடு ‘’திருமணம், குழந்தை வேண்டாம் என்பதற்காக நான் ஒரு துறவி போல வாழ வேண்டுமா’’ என்றும் கேட்கிறாள்.

நம் சமூகத்தில் ஒரு பெண் திருமண வயதை கடந்து திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும்போது அவள் தனது உடல் சார்ந்த தேவைகளுக்கு என்ன செய்கிறாள் என்பதை தெரிந்துகொள்ள சமூகம் அவளைத் தொடர்ந்து கண்காணிக்கிறது. திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் ஆணுக்கும் இதே பிரச்னை இருக்கின்றது. ஆனாலும், ஒரு ஆண் அப்படி யாருடனும் உறவு வைத்திருந்தால் கூட அது பற்றியெல்லாம் பெரிதாக கண்டுகொள்ளாத சமூகம் பெண் இறுதிவரை துறவியாகதான் இருக்கவேண்டும் என்று வெளிப்படையாகவே எதிர்பார்க்கிறது.

புனிதா சொன்னவற்றை காயத்ரியால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் புனிதாவைப் பற்றிய புரிதல் தனக்குப் போதுமானதாக இல்லை என்கிற முடிவுக்கு காயத்ரி வருவது மகிழ்ச்சியே. அடுத்த எபிசோட் என்ன புது டிவிஸ்ட்டை கொண்டு வரவிருக்கிறது என்கிற ஆவலுடன்…

காத்திருப்போம்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.