தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் (Tamil Nadu Dr. Ambedkar Law University) சிறப்புச் சட்டப்பள்ளி மற்றும் இப்பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட சட்டக்கல்லூரிகளில், ஏதாவதொரு இளநிலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான மூன்று ஆண்டு கால அளவிலான இளநிலைச் சட்டப்படிப்பில் (L.L.B) 2021-2022 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

சிறப்புச் சட்டப் பள்ளி

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், கற்றலைப் பரப்புதல், சட்ட அறிவை வழங்குதல் மற்றும் சமூகத்திற்கு சிறப்பான சேவை செய்யக்கூடிய வழக்கறிஞர்களை இந்திய அரசின் தேசியச் சட்டக்கல்லூரிகளுக்கு இணையான தரத்துடன் உருவாக்கும் நோக்கத்துடன் 2002 ஆம் ஆண்டில் சிறப்புச் சட்டப்பள்ளி ஒன்றை நிறுவியது. இச்சிறப்புச் சட்டப்பள்ளியில், இளநிலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான மூன்றாண்டு கால அளவிலான இளநிலைச் சட்டப்படிப்பில் (L.L.B (Hons)) மொத்தம் 156 இடங்கள் இருக்கின்றன.

இணைப்புச் சட்டக் கல்லூரிகள்

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பு செய்யப்பட்டிருக்கும் கல்லூரிகளில் இளநிலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான மூன்றாண்டு கால அளவிலான இளங்கலை சட்டப் பட்டப்படிப்புக்கான (LL.B) இடங்களாக மொத்தம் 1781 இடங்கள் இருக்கின்றன. இவற்றில் அரசு சட்டக்கல்லூரிகளில் சென்னை (பட்டறை பெரும்புதூர்) – 321, மதுரை – 181, திருச்சிராப்பள்ளி – 200, கோயம்புத்தூர் – 200, திருநெல்வேலி – 200, செங்கல்பட்டு – 80, வேலூர் – 80, விழுப்புரம் – 80, தருமபுரி – 80, இராமநாதபுரம் – 80, சேலம் – 80, நாமக்கல் – 80, தேனி – 80 என்று மொத்தம் 1742 இடங்கள் இருக்கின்றன.

திண்டிவனத்திலுள்ள தனியார் கல்லூரியான சரஸ்வதி சட்டக் கல்லூரியில் மொத்தமுள்ள 60 இடங்களில் 65% இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களாகவும், 35% இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களாகவும் இருக்கின்றன. இதன்படி இந்தத் தனியார் கல்லூரியில் 39 இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக இருக்கின்றன.

கல்வித் தகுதி

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் சிறப்புச் சட்டப்பள்ளியிலுள்ள இளங்கலை சட்டப் பட்டப்படிப்பு (LL.B) மாணவர் சேர்க்கைக்கு, இளநிலைப் பட்டப்படிப்பில் எஸ்சி / எஸ்டி பிரிவினர் – 55% மதிப்பெண்களுக்குக் குறைவில்லாமலும், மற்ற பிரிவினர் 60% மதிப்பெண்களுக்குக் குறைவில்லாமலும் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பு செய்யப்பெற்ற கல்லூரிகளில் இடம் பெற்றிருக்கும் LL.B இளங்கலை சட்டப் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு, இளநிலைப் பட்டப்படிப்பில் எஸ்சி / எஸ்டி பிரிவினர் – 40% மதிப்பெண்களுக்குக் குறைவில்லாமலும், மற்ற பிரிவினர் 45% மதிப்பெண்களுக்குக் குறைவில்லாமலும் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சட்டம்…

இந்தியப் பார் கவுன்சில் விதிமுறைகள் – 2008 மற்றும் மாநில அரசு விதிகளின்படி மேற்காணும் மாணவர் சேர்க்கைக்குக் கீழ்க்காணும் அடிப்படைத் தகுதிகள் கட்டாயம் இருக்க வேண்டும். அதாவது, 9ஆம் வகுப்பு வரை பள்ளியில் படித்திருக்க வேண்டும். 10 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வினைப் பள்ளியில் படித்தோ அல்லது தனியாக எழுதியோ தேர்வு பெற்றிருக்க வேண்டும். இளநிலைப் பட்டத்தைக் கல்லூரியிலோ அல்லது அஞ்சல் வழியிலோ அல்லது தொலைநிலைக் கல்வி வழியிலோ அல்லது திறந்த நிலைப் பல்கலைக்கழகத்திலோப் படித்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இளநிலைப் பட்டப்படிப்பில் எடுத்த மதிப்பெண்களே தகுதி மதிப்பெண்களாகக் கொள்ளப்படும். பட்டயப்படிப்பு மற்றும் தொழிற்படிப்புச் சான்றிதழ் (ITI) படிப்புகள் மேல்நிலைக்கல்விக்கு (10+2) சமமாகக் கருதப்படாது. வயது வரம்பு ஏதுமில்லை.

இட ஒதுக்கீடு

தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டு முறையினைப் பின்பற்றி ஓசி – 31%, பிசி – 26.50%, பிசி (முஸ்லீம்) – 3.50%, எம்பிசி (வன்னியர்) – 10.50%, எம்பிசி மற்றும் டிஎன்சி – 7%, எம்பிசி – 2.50%, எஸ்சி – 15%, எஸ்சி (அருந்ததியர்) – 3.00%, எஸ்டி – 1% எனும் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். திருநங்கையர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகக் கருதப்படுவர். எனவே, அவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற பிரிவில் விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு தவிர்த்த, பிற மாநில மாணவர்கள் பொதுப்பிரிவினராகவே கருதப்படுவர்.

Also Read: தொலைதூர கல்வி மூலமாகப் பயின்றவர்கள் LLB படிப்பில் சேர முடியுமா? | Doubt of Common Man

சிறப்பு ஒதுக்கீட்டு இடங்கள்

முன்னாள் படைவீரர்கள் குழந்தைகள் 1% இடங்கள், விடுதலைப்போராட்ட வீரர்களின் குழந்தைகள் 1% இடங்கள், மாற்றுத்திறனாளிகள் பிரிவினர், ஐந்து வகையான மாற்றுத் திறனாளிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிற்கும் 1% இடங்கள் வீதம் 5% இடங்களும், விளையாட்டுப் பிரிவில் சிறப்புத் தகுதி பெற்றவர்களுக்கு 10 இடங்கள் எனும் அடிப்படையில் சிறப்பு ஒதுக்கீட்டு இடங்கள் இருக்கும்.

விண்ணப்பப் பதிவு

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் https://tndalu.ac.in/ எனும் இணையதளத்திற்குச் சென்று, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சிறப்புச் சட்டப்பள்ளிக்குத் தனியாகவும், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் இணைப்பு செய்யப் பெற்ற கல்லூரிகளுக்குத் தனியாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சிறப்புச் சட்டப்பள்ளி மாணவர் சேர்க்கைக்கு பொதுப்பிரிவினர் ரூ.1000/- எஸ்சி/எஸ்சிஏ/எஸ்டி பிரிவினர் ரூ.500/- என்றும், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பு செய்யப் பெற்ற கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.500/- எஸ்சி / எஸ்சிஏ / எஸ்டி பிரிவினர் ரூ.250/- என்றும் விண்ணப்பக் கட்டணத்தை இணைய வழியில் செலுத்திட வேண்டும்.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சிறப்புச் சட்டப்பள்ளி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் பதிவு செய்யக் கடைசி நாள்: 30-9-2021, பிற்பகல் 5.45 மணி வரை. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பு செய்யப் பெற்ற கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் பதிவு செய்யக் கடைசி நாள்: 6-10-2021, பிற்பகல் 5.45 மணி வரை.

தரவரிசைப் பட்டியல்

இணையதளம் வழியாகப் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, விண்ணப்பதாரர்களது இளநிலைப் பட்டப்படிப்பில் பெற்ற மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதி வாய்ந்தவர்களது தரவரிசைப்பட்டியல் தயாரிக்கப்பட்டு, இப்பல்கலைக்கழகத்தின் https://tndalu.ac.in/ எனும் முகவரியிலான இணையதளத்தில் வெளியிடப்படும்.

அதன் பிறகு, தரவரிசைப்பட்டியலின்படி இணையவழிக் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர். விண்ணப்பதாரர்களில், ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் சமமான மதிப்பெண்கள் பெற்றிருக்கும் நிலையில், விண்ணப்பதாரர்களின் பிறந்தநாளைக் கொண்டு, மூத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதுவும் சமமாக இருக்கும் நிலையில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவர்.

Also Read: தேசிய நாடகப் பள்ளி அளிக்கும் மூன்றாண்டு கால நாடகக்கலைகள் பட்டயப்படிப்பு… விண்ணப்பிப்பது எப்படி?

மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு

தகுதியுடைய விண்ணப்பதாரர்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு அமர்வுகள் அனைத்தும் இணையம் வழியாகவே நடத்தப்படும். கலந்தாய்வுக்குத் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் அலைபேசிக் குறுஞ்செய்தி வழியாகத் தகவல் தெரிவிக்கப்படும். இக்கலந்தாய்வின் வழியாக, விண்ணப்பதாரர்கள் இளநிலைப் பட்டப்படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையிலும், இனவாரியான இட ஒதுக்கீடு மற்றும் சிறப்பு இட ஒதுக்கீடுகளின் அடிப்படையிலும் வரிசைப்படுத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவர்.

அரசு சட்டக்கல்லூரிகளில் சேர்க்கை கிடைக்கப் பெற்று, சேர்க்கைக்கான ஆணையைத் தரவிறக்கம் செய்யும் பொழுதே, பல்கலைக்கழகத்திற்கு ரூ.1520/- ஐச் செலுத்த வேண்டும். சேர்க்கை ஆணை கிடைக்கப் பெற்ற கல்லூரியில் மாணவர்களின் அனைத்துச் சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டு, கல்விக்கட்டணம் மற்றும் இதர கட்டணங்களைச் செலுத்திய பின்பு மாணவர் சேர்க்கை உறுதிப்படுத்தப்படும். அதன் பிறகு அக்டோபர் மூன்றாம் வாரத்திலோ அல்லது அதன் பின்போ வகுப்புகள் தொடங்கும்.

சட்டம்

கூடுதல் தகவல்கள்

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பள்ளி மற்றும் இணைப்பு செய்யப்பெற்ற கல்லூரிகளில், மூன்றாண்டு கால அளவிலான சட்டப்படிப்புச் (L.L.B) சேர்க்கை குறித்து மேலும் கூடுதல் தகவல்களை அறிய, https://tndalu.ac.in/ எனும் இணைய முகவரியில் இடம் பெற்றிருக்கும் மாணவர்களுக்கான தகவல்கள் மற்றும் வழிமுறைகள் குறிப்பேட்டை முழுமையாகப் படித்துத் தெரிந்து கொள்ளலாம் அல்லது “தலைவர், சட்டப்படிப்புச் சேர்க்கை 2021-2022, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகம், பூம்பொழில், 5, டாக்டர் டி. ஜி. எஸ். தினகரன் சாலை, சென்னை – 600028” எனும் முகவரியிலுள்ள அலுவலகத்திற்கு நேரில் சென்றும் தெரிந்து கொள்ளலாம்.

கோவிட் நோய்த்தொற்று காரணமாக, நேரில் வருவதை தவிர்க்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக அலுவலக வேலை நாள்களில் 044- 24641212, 24641919 24957414 எனும் உதவி எண்களில் தொடர்பு கொண்டும் தகவல்களைப் பெறமுடியும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.