விஜய் சேதுபதி, டாப்ஸி, ஜகபதி பாபு, யோகி பாபு (கவிதை மாதிரி இல்ல!), தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத், ராதிகா, சேத்தன், தேவதர்ஷினி, சுப்பு பஞ்சு, ஜார்ஜ் மரியான். ஜாங்கிரி மதுமிதா, தெலுங்கு காமெடி நடிகர் வெண்ணிலா கிஷோர் என ஒரு பெரும் பட்டாளத்தைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கின்றனர். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் ‘அனபெல் சேதுபதி’ படத்தின் ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட் இதோ!

அனபெல் சேதுபதி

மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் கதையில் அரண்மனை ஒன்றே பிரதானம். ராஜா வீர சேதுபதிக்கு (விஜய் சேதுபதி) சொந்தமான அந்த அரண்மனை இப்போது ஜகபதி பாபுவின் வாரிசுகள் வசம். ஆனால், அதை விற்கவும் முடியாமல் அனுபவிக்கவும் முடியாமல் அங்கே தங்க முயலும் அனைவரும் இறந்து போகின்றனர். அரண்மனையைச் சுற்றி உலவும் பேய்க் கதைகளைக் காலி செய்ய, பலே திருடர்களான டாப்ஸி குடும்பத்தை அங்கே தங்க வைக்கிறார்கள். அந்த அரண்மனையின் எஸ்டிடி-யை கண்டறிந்து தான் யார் என்ற உண்மையையும் டாப்ஸி உணர்ந்தாரா, அரண்மனையில் இருக்கும் பேய்கள் யார் என அடுக்கடுக்கான கேள்விகளுக்குக் கொஞ்சம் ட்விஸ்ட்கள் சேர்த்து விடைகள் சொல்லியிருக்கிறார்கள்.

‘அனபெல்’ புகழ்பெற்ற ஹாரர் படம், ‘சேதுபதி’ ஹிட்டான தமிழ்ப்படம், அதனால் இந்த காம்போ ஒர்க்அவுட்டாகும் என நினைத்தார்களா, இல்லை விஜய் சேதுபதி இருப்பதால் அப்படி வைத்தார்களா எனத் தெரியவில்லை. ‘அனபெல் சேதுபதி’ என வித்தியாசமாக டைட்டில் வைத்து களத்தில் இறங்கியிருக்கின்றனர்.

அனபெல் சேதுபதி

டைட்டிலில் ஆங்கில – தமிழ்க் கலாசராங்கள் மோதுகின்றன என்றால் பாத்திர வார்ப்பிலும், லிப் சிங்கிலும் தமிழும் தெலுங்கும் போட்டிப் போட்டிருக்கின்றன. தெலுங்கு நடிகர்கள் தமிழ் பேசுவதற்கும் அவர்கள் உதட்டசைவிற்கும் ஏணி வைத்தாலும் எட்டவில்லை. ஒருவேளை படத்தைத் தெலுங்கில் பார்த்தால், அவர்கள் பேசுவது சரியாகவும், தமிழ் நடிகர்கள் பேசுவது சிங்க் இல்லாமலும் இருக்குமோ தெரியவில்லை. (என்ன ஒரு புத்திசாலித்தனம்!)

‘கேம் ஓவர்’ படத்துக்குப் பிறகு தமிழில் டாப்ஸி. அனபெல், ருத்ரா என இரண்டு கதாபாத்திரங்களில் குறைவில்லாமல் நடித்துக் கொடுத்திருக்கிறார். மற்ற அனைத்து நடிகர்களைவிடவும் அவரிடம் மட்டுமே ஓரளவேனும் முதிர்ச்சி தெரிகிறது. குறிப்பாக அனபெல் எனும் பிரிட்டிஷ் பெண்மணியாக வீரவாளெல்லாம் வீசியிருக்கிறார்.

அனபெல் சேதுபதி

ராஜாவாக விஜய் சேதுபதி. ராஜாவுக்கு வீர சேதுபதி எனப் பெயர் வைப்பதற்குப் பதிலாக விஜய் சேதுபதி எனவே வைத்திருக்கலாம் போல! பிரியட் கதையிலும் விஜய் சேதுபதியாகவே வந்து போகிறார். கெட்டப்பில் சிறு மாற்றம் செய்ததைத் தவிர்த்து உடல் மொழியோ, பேசும் விதமோ எதிலும் மாற்றம், முன்னேற்றம் இல்லை.

காமெடி டிபார்ட்மென்ட்டைக் குத்தகைக்கு எடுத்திருக்கிறது யோகி பாபு தலைமையிலான பேய்கள் படை. சேத்தன், ஜார்ஜ் மரியம் ஒரு சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்கள். யோகி பாபு வழக்கம்போல கவுன்ட்டர் கொடுக்கிறார், உருவக்கேலி காமெடி செய்கிறார், இல்லையென்றால் அப்படியான காமெடிக்குப் பலியாகிறார். ராதிகா யோகி பாபுவின் பாடி லேங்குவேஜில் நடிக்கும்போது மட்டும் தன் திறமையை வெளிப்படுத்துகிறார். மற்ற அனைவரும் என்ன போராடினாலும் நம்மை ஒரு மில்லிமீட்டர் கூட சிரிக்கவைக்க முடியவில்லை.

அனபெல் சேதுபதி

படத்தின் பெரும்பலம் அது படமாக்கப்பட்ட அரண்மனைகள். ராஜஸ்தானின் பிரமாண்ட அரண்மனையின் அழகை அப்படியே கவர்ந்து வந்திருக்கிறது கௌதம் ஜார்ஜின் ஒளிப்பதிவு. ஒரு சில இடங்களில் செட் போட்ட சாயல்கள் இருந்தாலும் பல இடங்களில் படத்தின் கலை இயக்கம் ஈர்க்கிறது.

Also Read: பேய் பிடிக்கப்போய் காமெடியையும் சேர்த்தே பிடிக்கும் கதை… Bhoot Police படம் எப்படி?

கதை எப்படியிருந்தாலும் ஒரு பலமான திரைக்கதையுடன் அது படமாக்கப்படும்போது நிச்சயம் கவனம் ஈர்க்கும். ஆனால், இங்கே அது எதுவுமே நடக்கவில்லை. கதாபாத்திரங்களின் நடிப்பு, காமெடி எனச் சொல்லப்படும் வசனங்கள் என அனைத்திலும் யதார்த்தம் என்பது துளியுமில்லை. இறப்பது தொடங்கி, சென்டிமென்ட், மேஜிக் காட்சிகள் என எல்லாவற்றிலும் படு செயற்கைத்தனம். குறிப்பாக, ப்ளாஷ்பேக் போலவே மேக்கிங் என்பதும் பல வருடங்கள் பின்னே சென்று நாம் சிறுவயதில் ரசித்த ‘மை டியர் பூதம்’, ‘மாயாவி மாரிசன்’ போன்ற தொடர்களை நினைவூட்டுகின்றன. ஆனால், அதிலேனும் கதையாவது நம்மைக் கட்டிப்போடும். இங்கே வொய் திஸ் கொலவெறி சாரே என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. ஒருவேளை குழந்தைகள் இந்தப் படத்தைக் கொண்டாடலாம்!

அனபெல் சேதுபதி

தமிழ் ஆந்தாலஜி படங்கள் என்பதை எப்படி இந்த ஓடிடி காலத்தில் வெறுக்கத் தொடங்கியிருக்கிறோமோ, அதே போலத்தான் அவுட்டேட்டட் காமெடி ஹாரர் படங்களையும் பார்க்கவேண்டியிருக்கிறது. நிறுத்தணும், எல்லாத்தையும் நிறுத்தணும்! மாத்தணும், எல்லாத்தையும் மாத்தணும்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.