ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வரலாறு இருக்கும். அது குடும்ப வழிமுறையான தாய், தந்தை, தாத்தா, பாட்டி, பாட்டன், பூட்டன் என்ற அடிப்படையிலோ, வழிவழியாய் வாழ்ந்த இடத்தை மையப்படுத்தியோ அமைந்தவையாக இருக்கும். தனிநபர்களுக்கு இப்படியென்றால், ஒரு நாட்டின் வரலாறு எதை மையப்படுத்தி இருக்கும் என்ற ஆராய்ந்தபோது, நாட்டின் வரலாறு என்பது அதன் இலக்கியம், கலாசாரம், திருவிழாக்கள், வரலாற்றுக் கட்டிட அமைப்புகள் முதலானவற்றை மையப்படுத்தி அமைந்திருப்பது தெரியவந்தது. இதில் மிக முக்கியமாக இருப்பது வரலாற்று கட்டிட அமைப்புகள். காரணம், ஒரு கட்டிடம் கட்டப்பட்ட காலம் மற்றும் அமைப்பின் மூலம் மட்டுமே அதை கட்டியவரையும், அந்தக் காலத்தில் கொண்டப்பட்ட திருவிழாக்கள், பின்பற்றபற்ற கலாசாரம், கொண்டாடப்பட்ட இலக்கியம் ஆகியவற்றை நம்மால் அடையாளம் காணமுடியும். அங்குதான் இருக்கிறது நாட்டின் வரலாறு!

image

இதனடிப்படையில் பார்த்தால், நம் இந்தியா பல்லாயிரம் வரலாற்றைத் தன்னுள் கொண்ட நாடென்பது நமக்கு புரியும். உலகில் எங்கும் கண்டிராத அளவுக்கு பல்லாயிரக்கணக்கான பழமையான கட்டிடங்களும், கோயில்களும் இந்தியாவில் ஏராளமாக நிறைந்து காணப்படுகின்றன. வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங்களையும், நினைவுச் சின்னங்களையும் காண்பதற்காக, உலகம் முழுவதிலும் இருந்து ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வருகின்றனர். அந்த வகையில்,

‘யுனெஸ்கோ’ முகமையால் அங்கீகரிக்கப்பட்ட 40 பாரம்பரிய இடங்கள் இந்தியாவில் உள்ளன.

சரி, ‘யுனெஸ்கோ’ ஏன் இந்திய வரலாற்று சிறப்புமிக்க சூழலை அங்கீகரிக்க வேண்டுமென நீங்கள் கேட்கலாம். ஒரு நாட்டின் எழில் மற்றும் பொருளாதார செல்வமாகக் கருதப்படுவது, அதன் இயற்கை வளம். இப்படிப்பட்ட இயற்கை எழிலோவியங்களையும், கல்லோவியங்களையும் பாதுகாக்கும் பொறுப்பை குறிக்கோளாய் கொண்டு செயல்பட்டு வருகிறது யுனெஸ்கோ. இந்த இயற்கை வளங்கள் யாவும், நம் பாரம்பரிய கட்டிடங்களில் ஒளிந்திருப்பவை என்பது மறுப்பதற்கில்லை. யுனெஸ்கோவின் குறிக்கோளே இதை பாதுகாப்பதுதான் என்பதாலேயே, இந்த இடங்களை அவர்கள் அங்கீகரிக்கின்றனர். யுனெஸ்கோ அங்கீகரித்த பாரம்பரிய இந்திய இடங்கள் குறித்தும், அதன் சிறப்பம்சம் என்ன என்பது குறித்தும் இந்தத் தொடர் வழியாக நாங்கள் உங்களோடு பேசவுள்ளோம்.

image

அதற்கு முன்னர், இந்த முதல் அத்தியாயத்தில், யுனெஸ்கோ எப்படி பாரம்பரிய இடங்களை பாதுகாக்கத் தொடங்கியது, எப்போது முதல் இந்த வழக்கம் தொடங்கியது என்பதை ஒரு குட்டி ஸ்டோரியாக பார்ப்போம்.

1954-ல் எகிப்து அரசு புதிய அஸ்வான் உயர் அணையைக் கட்ட முடிவு செய்தது. அதன் விளைவாக ஏற்படும் நீர்த்தேக்கம் நைல் பள்ளத்தாக்கின் பண்டைய எகிப்து மற்றும் பண்டைய நுபியாவின் கலாசார பொக்கிஷங்களை மூழ்கடிக்கும் நிலை ஏற்பட்டது. என்ன செய்யலாம் என்ற எகிப்து மற்றும் சூடானின் அரசுகள் 1959-ல் யுனெஸ்கோவிடம் இவ்விடங்களைப் பாதுகாக்கவும் மீட்கவும் உதவுமாறு கோரின. 1960-ல் யுனெஸ்கோவின் டைரக்டர் ஜெனரல், நுபியாவின் நினைவுச் சின்னங்களைக் காப்பாற்றுவதற்கான சர்வதேச பிரசாரத்தைத் தொடங்கினார். இதன்மூலம் நூற்றுக்கணக்கான இடங்களை அகழ்வாராய்ச்சி மற்றும் பதிவு செய்தல், ஆயிரக்கணக்கான பொருட்களை மீட்பது, முக்கியமான கோயில்களை மீட்பது, இடமாற்றம் செய்வது ஆகியவை பற்றி தெரியப்படுத்தினார். பிரசாரம் 1980-ம் ஆண்டில் முடிவடைந்தது.

இவரின் முயற்சிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தெண்டூர் கோவில் நியூயார்க் நகரத்தில் உள்ள பெருநகர கலை அருங்காட்சியகம், டெபோட் கோவில் மாட்ரிட்டில் உள்ள பார்க் டெல் ஓஸ்டே, தஃபே கோவில், ரிஜ்க்ஸ்மியூஸம் வான் ஒஹெடென், லைடனில் உள்ள ஆலேசியா கோவில் மற்றும் மியூசியோ எகிசியோ டூரின் ஆகிய நான்கு கோவில்களை யுனெஸ்கோவிற்கு நன்கொடையாக அளித்தது எகிப்து. இப்படித்தான் யுனெஸ்கோவில் பாரம்பரிய இடங்களை பாதுகாக்கும் பணி தொடங்கியது.

UNESCO World Heritage Convention Logo Vector - (.SVG + .PNG) -  SearchVectorLogo.Com

இத்திட்டத்தின் வெற்றியினால் இத்தாலி, பாகிஸ்தான், இந்தோனேசியா போன்ற பல்வேறு நாடுகளுடன் சேர்ந்து, நினைவுச் சின்னங்கள் மற்றும் பாரம்பரிய இடங்களை பாதுக்காக்க சர்வதேச கவுன்சிலுடன் சேர்ந்து, யுனெஸ்கோ கலாசார பாரம்பரிய வரைவு மாநாட்டைத் தொடங்கியது. இந்த உலக பாரம்பரியக் குழுவின் பணிக்கு வழிகாட்டும் மாநாடு 1965-1972 காலகட்டங்களில் உருவாக்கப்பட்டது.

இதையடுத்து கலாசார மற்றும் இயற்கை முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாக்கும் யோசனையை அமெரிக்கா தொடங்கியது. அதன்படி 1968-ம் ஆண்டு இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியம், 1972-ம் ஆண்டு ஸ்டாக்ஹோமில் மனித சூழல் பற்றிய ஐக்கிய நாடுகள் மாநாடு ஆகியவை நடைபெற்றது. இறுதியாக “உலக கலாசார மற்றும் இயற்கை பாரம்பரியத்தை பாதுகாப்பது தொடர்பான மாநாடு” யுனெஸ்கோவின் பொதுமாநாட்டால் 16 நவம்பர் 1972-ல் திட்டமிட்டு, 17 டிசம்பர் 1975-ல் நடைமுறைக்கு வந்தது. அன்று முதல் யுனெஸ்கோ அதிகாரபூர்வமாக பாரம்பரிய இடங்களை பாதுகாக்கத் தொடங்கியது.

யுனெஸ்கோ முதன்முதலாக 1978-ல் பாதுகாக்கப்பட்ட இடங்களின் பட்டியலை வெளியிட்டபோது, வெறும் 12 உலக பாரம்பரிய இடங்களே இருந்தன. தற்போது 2021-ம் ஆண்டு ஜூலை மாத கணக்கின்படி, உலகம் முழுவதும் 1,154 பாரம்பரிய இடங்களாக உயர்ந்துள்ளது. அந்த அளவுக்கு பாதுகாக்கப்பட்ட இடங்களின் பட்டியலில் சேர்த்துள்ளன. இதில், 897 கலாசார இடங்கள், 218 இயற்கை சார்ந்த இடங்கள், 39 பிற இடங்களும் அடங்கும். இதில் அதிகபட்சமாக இத்தாலியில் 58 இடங்களும், சீனாவில் 56 இடங்களும், ஜெர்மனியில் 51 இடங்களும் உள்ளன.

image

பல உலக பாரம்பரிய இடங்கள் போர், வேட்டையாடுதல், பூகம்பங்கள், கட்டுப்பாடற்ற நகர்ப்புறமயமாக்கல், கனரக சுற்றுலா போக்குவரத்து, காற்று மாசுபாடு போன்ற பல்வேறு சுற்றுச்சூழல் காரணிகளால் அழிந்து வரும் நிலையில் உள்ளன. ஒரு இடம் முதலில் உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டப் பின், அதனின் பண்புகளை இழந்துவிட்டால், உலக பாரம்பரியக் குழு பட்டியலிலிருந்து நீக்கப்படுகிறது.

யுனெஸ்கோ தேர்வு செய்வது எப்படி?

பாதுகாக்கப்பட்ட இடங்களின் பட்டியலில் ஓர் இடத்தை சேர்க்க யுனெஸ்கோ சில கோட்பாடுகளை வகுத்துள்ளது. அதன்படி, யுனெஸ்கோ தங்களுக்கு கிடைக்கும் பரிந்துரைகளிலிருந்தே, பாரம்பரிய இடத்தை தேர்வு செய்கிறது. இந்தப் பரிந்துரைகளில் ஒரு பாரம்பரிய இடம் வரவேண்டுமென்றால், அதற்கென சில கோட்பாடுகள் வகுப்பட்டிருக்கும். அப்படி ‘பாரம்பரிய இடங்களுக்கான பரிந்துரைக்குத் தகுதியான இடங்கள்’ என யுனெஸ்கோ பட்டியலிடும் ஐந்து அம்சங்கள் இங்கே:

1. அரசு தரப்பில் தங்கள் நாட்டின் எல்லைகளுக்குள் அமைந்துள்ள முக்கியமான இயற்கை மற்றும் கலாசார பாரம்பரிய இடங்களை அப்போதைக்கு பட்டியலிட்டுக்கொள்ள வேண்டும். இது, தற்காலிக / உத்தேசப் பட்டியல் என அழைக்கப்படும். இதைத்தொடர்ந்து, அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளில், ‘கல்வெட்டுக்காக சமர்ப்பிக்கப்படவுள்ள’ மற்றும் ‘எந்த நேரத்திலும் புதுப்பிக்கப்படக்கூடிய வகையிலுள்ள’ இடங்களின் சொத்து விவரங்கள் பற்றிய முன்னறிவிப்பை அரசு தயார் செய்ய வேண்டும். இந்த இடங்களும், தற்காலிக பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும். ஒருவேளை சேர்க்கப்படவில்லையெனில், உலக பாரம்பரிய பட்டியலில் கல்வெட்டுக்கான பரிந்துரையை உலக பாரம்பரியக் குழு பரிசீலிக்காது. எனவே, இதை தவிர்க்கக் கூடாது. யுனெஸ்கோவின் பாரம்பரியப் பட்டியலில் இடம்பிடிக்க ஒவ்வொரு நாடும், இந்தப் பட்டியலைத் தயார் செய்து, அதற்கான ஆவணங்களை யுனெஸ்கோ கமிட்டிக்கு அனுப்ப வேண்டும். இந்த ஆவணங்களை யுனெஸ்கோ கமிட்டி ஆய்வு செய்யும்.

2. தற்காலிக பட்டியலைத் தயாரித்து பிறகு, அதை எப்போது நாமினேஷனுக்கு (தேர்வுக் குழுவுக்கு) அனுப்ப வேண்டும் என்று திட்டமிட்டு, அதற்கேற்ப நாமினேஷன் செய்யலாம். இதற்கு உலக பாரம்பரிய மையம், உரிய ஆலோசனை மற்றும் உதவியை வழங்கும். தேவையான ஆவணங்கள் மற்றும் வரைபடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை மட்டும் நாடுகள் உறுதி செய்ய வேண்டியிருக்கும். இந்தப் பட்டியல், உலக பாரம்பரிய மையத்தில் பரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்பட்டு, அது முழுமையாக உள்ளதா என சரிபார்க்கப்படும். நியமனக் கோப்பு முடிந்தவுடன், உலக பாரம்பரிய மையம் அதை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்லும். அதாவது, இந்த உத்தேசப் பட்டியலை மதிப்பீடு செய்ய பொருத்தமான ஆலோசனை அமைப்புகளுக்கு அனுப்பும்.

3. அடுத்தகட்டமாக, பரிந்துரைக்கப்பட்ட சொத்துகள் அனைத்தும், உலக பாரம்பரிய மாநாட்டின் கீழ் இயங்கும் இரண்டு ஆலோசனை அமைப்புகளால் மதிப்பீடு செய்யப்படும். அந்த ஆலோசனை அமைப்புகள் – சர்வதேச நினைவுச் சின்னங்கள், இடங்கள் (ICOMOS) மற்றும் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) மற்றும் மூன்றாவது ஆலோசனைக் குழுவான ‘கலாசார சொத்துக்களைப் பாதுகாத்தல் மற்றும் மீட்டெடுப்பதற்கான சர்வதேச மையம் (ICCROM)’ என்ற அமைப்பு, கலாசார இடங்களைப் பாதுகாப்பது மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் குறித்த நிபுணர் ஆலோசனைகளை வழங்கும்.

4. இவை அனைத்துக்கும் பிறகு, அவ்விடத்தை பாரம்பரிய இடமாக அறிவிக்கலாம் என யுனெஸ்கோ முடிவெடுக்கும். ஒரு இடம் பரிந்துரைக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர் எடுக்கப்படும் இறுதி முடிவானது, உலக பாரம்பரியக் குழுவை சேர்ந்தது. வருடத்திற்கு ஒரு முறை, உலக பாரம்பரிய பட்டியலில் எந்தெந்த இடங்கள் இடம்பெற வேண்டும் என்பதை முடிவு செய்ய குழு கூடுகிறது. இது அதன் முடிவை ஒத்திவைக்கலாம் அல்லது நாடுகளிடம் கேட்டு கூடுதல் இடங்களைப் பற்றிய தகவலையும் கோரலாம்.

5. இப்படி உலக பாரம்பரிய பட்டியலில் ஒரு இடத்தை சேர்க்க, இடங்கள் சிறந்த உலகளாவிய மதிப்பைக் கொண்டிருக்க வேண்டும். மேலும் குறைந்தது பத்து தேர்வு அளவுகோல்களையாவது அவ்விடம் சந்திக்க வேண்டும். இந்த அளவுகோல்கள் உலக மரபு மாநாட்டை செயல்படுத்துவதற்கான செயல்பாட்டு வழிகாட்டுதல்களில் அமையும்.

உலக பாரம்பரியத்தைப் பொறுத்தவரை, யுனெஸ்கோவின் நோக்கம் எட்டு இலக்குகளைக் கொண்டுள்ளது. பல்வேறு வழிகளில் உலக பாரம்பரிய நாடுகள் மற்றும் உள்ளூர் மக்களின் அர்ப்பணிப்பை ஊக்குவித்தல், ஆபத்தில் உள்ள இடங்களுக்கு அவசர உதவி வழங்குதல், தொழில்நுட்ப உதவி மற்றும் தொழில்முறை பயிற்சி அளித்தல், மாநிலங்களுக்கான பொது விழிப்புணர்வு கட்டமைப்பு செயல்பாடுகளை ஆதரித்தல் ஆகியவை இதில் அடங்கும்.

இந்தியாவின் முதல் இரண்டு பாரம்பரிய இடங்களாக ஆக்ரா கோட்டையும், அஜந்தா குகைகளும் 1983-ஆம் ஆண்டு நடந்த உலகப் பாரம்பரியத்தின் ஏழாவது மாநாட்டில் ஏற்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து இதுவரை இந்தியாவில் 40 இடங்கள் உலக பாரம்பரிய இடமாக ஏற்கப்பட்டுள்ளன. உலக பாரம்பரிய இடங்களைப் பற்றி மேலும் அறிய, உலக பாரம்பரிய மையத்தின் whc.unesco.org வலைதளத்தில் பார்க்கலாம்.

இந்தியாவில் உள்ள 40 இடங்களின் எழிலாடல்களையும், வரலாறுகளையும் வரும் வாரங்களில் அடுத்தடுத்த அத்தியாயங்களில் பார்க்கவும் படிக்கவும் தயாராகுங்கள். யுனெஸ்கோ பாரம்பரியங்கள் உங்கள் பார்வைக்காக வருகிறது.

(உலா வருவோம்…)

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.