இன்று தனது 71வது பிறந்த நாளை கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோடியை பற்றிய 71 சுவராஸ்யமான தகவல்கள்.
 
1. நரேந்திர தாமோதர்தாஸ் மோடி என்ற முழுப்பெயர் கொண்ட மோடி, செப்டம்பர் 17, 1950 அன்று குஜராத் மாநிலம் வட்நகரில் பிறந்தார்.
 
2. மோடியின் தந்தை தாமோதரதாஸ் முல்சந்த் மோடி மற்றும் தாய் ஹீராபென் மோடி.
 
3. மோடியின் உடன்பிறந்தவர்கள் மொத்தம் 5 பேர். அவர்களில் 3வது குழந்தைதான் மோடி.
 
4. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த மோடி தனது சிறுவயதில் இருந்தே வட்நகர் ரயில் நிலையத்தில் தேநீர் விற்று வந்தார். பிறகு தனது சகோதரனுடன் சேர்ந்து ஒரு பேருந்து நிலையம் அருகே தனது தேநீர் கடையை துவங்கினர்.
 
5. ராஜ்கோட்டில், 1966ல் ராமகிருஷ்ணா மடத்தின் ஆத்மஸ்தானந்தா சுவாமியை சந்தித்து, துறவியாக விரும்புவதாக கூறினார். அவரோ, மக்களுக்கு சேவையாற்றும்படி அறிவுறுத்தினார்.
 
6. 8 வயதாக இருக்கும் போது ஆர்எஸ்எஸ் உடன் மோடிக்கு தொடர்பு ஏற்பட்டது.
 
image
7. ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் 1971-ஆம் ஆண்டு சேர்ந்தார்.
 
8. குஜராத் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, அரசியல் அறிவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
 
9. இந்துத்துவ கொள்கையை தீவிரமாக பின்பற்றிய மோடி, 1987-ஆம் ஆண்டு பாஜக கட்சிக்கு பிரவேசித்து பிரதமர் வேட்பாளர் அஸ்தஸ்து வரை உயர்ந்துள்ளார்.
 
10. 1987-இல் நடந்த அகமதாபாத் மாநகராட்சி தேர்தலில் பாஜகவுக்கு வெற்றியை பெற்று தந்தார் மோடி. அதுவே பாஜகவுக்கு கிடைத்த முதல் வெற்றியாகும்.
 
11. பாஜகவின் உறுப்பினராக சேர்ந்த ஒரே வருடத்தில் குஜராத் மாநில பொதுச்செயலாளராக உயர்ந்தார்.
 
12. 1990-ஆம் ஆண்டு அத்வானி நடத்திய ரத யாத்திரையை மோடி முன்னின்று வெற்றிகரமாக நடத்தி முடித்தார்.
 
13. குறுகிய காலத்திற்குள், அத்வானியால் 1998 ஆம் ஆண்டு குஜராத் மற்றும் இமாசலப் பிரதேச தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
 
14. அதன்பின் இமாசலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய 5 நிலங்களுக்கு, பாஜகவின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.
 
15. 1998 -ம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராகப் பதவியேற்றபோது மோடிக்கு தேசிய செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
 
16. 2001-ம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி, குஜராத் முதல்வராக இருந்த கேசுபாய் பட்டேல் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பாஜகவின் தனிப்பெரும்பான்மை ஆதரவுடன் அக்டோபர் 7 ம் தேதி குஜராத் மாநில முதல்வராக பதவியேற்றார்.
 
17. பின்னர், இடைத்தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற அவர், 2002 -ம் ஆண்டு நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். அதே ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் வெற்றிப்பெற்று மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றார்.
 
18. அக்டோபர் 2001 முதல் மே 2014 வரையில் குஜராத் முதல்வராக இருந்தார்.
 
19. குஜராத் மாநிலத்தில் மிக நீண்ட காலம் முதல்வராக இருந்தவர் என்ற தனிச்சிறப்பும் மோடிக்கு உண்டு.
 
20. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பின் 2002 ஆம் ஆண்டு குஜராத் வன்முறைக்காக மிகக் கடுமையாக சாட்டப்பட்டது. இருப்பினும் குஜராத் முதல்வராக இருந்த மோடிக்கும் அவரது அரசுக்கும் கோத்ரா சம்பவத்தில் எந்தத் தொடர்பும் இல்லையென நானாவதி – மெஹ்தா விசாரணை கமிஷன் அறிக்கை தாக்கல் செய்தது.
 
21. குஜராத் கலவரத்தை சுட்டிக்காட்டி மோடிக்கு விசா வழங்க அமெரிக்க அரசு அனுமதி மறுத்தது.
 
22. மோடி பிரதமர் ஆனதை தொடர்ந்து விசா வழங்க அமெரிக்க அரசு விதித்திருந்த தடை நீங்கியது.
 
23. அதன்பின் 2016-ஆம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் மோடி உரையாற்றியது உலக நாடுகளின் கவனத்தை பெற்றது.
 
24. குஜராத் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட தனது பிம்பத்தை மாற்றும் முயற்சியில் தனது எஞ்சிய முதலமைச்சர் காலத்தை பயன்படுத்திக் கொண்டார் மோடி.
 
25. குஜராத்தின் பொருளாதார வளர்ச்சியை விளம்பரப்படுத்திக் கொண்டு, அதற்கு ‘குஜராத் மாதிரி’ என்று பெயரும் வைத்தார்.
 
26. 2007 ஆம் ஆண்டு இந்தியா டுடே பத்திரிக்கை நடத்திய ஆய்வில் நாட்டின் சிறந்த முதலைமைச்சராக மோடி தேர்வானார்.
 
27. இந்தியா சுதந்திரமடைந்த பிறகு பிறந்த ஒருவர் முதன்முறையாக பிரதமர் பதவிக்கு வந்தவர் என்கிற பெருமையைப் பெற்றவர் மோடி.
 
28. 2014 மற்றும் 2019 நாடாளுமன்றத் தேர்தல்களில், பாஜகவை ஆச்சரியமளிக்கும் வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றவர் மோடி.
 
29. 1984 தேர்தலுக்குப் பின் மக்களவையில் பெரும்பான்மை அரசாக பாஜக ஆட்சியமைத்த பெருமை இவரையே சாரும்.
 
30. மோடி முதல்முறையாக எம்.எல்.ஏ. ஆன போதே குஜராத் முதல்வரானவர். அதேபோலவே முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினரான போதே பிரதமர் ஆனார்.
 
31. 1984லிருந்து முதல்முறையாக மக்களவையில் பெரும்பான்மை அரசாக 2014ல் பாஜக அரசு அமைத்த பெருமை இவரையே சாரும்.
 
32. நேரு, இந்திரா காந்தியை தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி ஏற்கும் மூன்றாவது பிரதமர் யார் என்றால் அது அவர் மோடி தான்.
 
33. குல்சாரி‌லால் நந்தா, மொரார்ஜி தேசாயை தொடர்ந்து குஜராத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 3-வது பிரதமர் மோடி ஆவார்.
 
34. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தேர்தல் அரசியலில் இருக்கும் மோடி தோல்வியையும் சந்தித்தது இல்லை, ஆட்சி அமைக்க தவறியது இல்லை. தொடர்ந்து 13 வருட கால குஜராத் முதல்வர் அதனை தொடர்ந்து 6 வருடகால பிரதமர் என தலைமை பொறுப்பில் அவர் இருந்து வருகிறார்.
 
35. அதிக காலம் ஆட்சி புரிந்த பிரதமர்கள் பட்டியலில் மோடி 7வது இடத்தில் உள்ளா‌ர்.
 
36. மோடி தனது 2வது ஆ‌ட்சிக் காலத்தையும் பூர்த்தி செய்யும் பட்சத்தில், அதிக காலம் ஆண்ட பிரதம‌ர்கள் பட்டியலில் 4 அல்லது 5வது இடத்திற்கு முன்னேறுவார்.
 
37. அரசியலைத் தவிர எழுதுவதிலும் ஆர்வம் கொண்டுள்ள மோடி, பல்வேறு புத்தகங்களையும், கவிதைகளையும் அவர் எழுதியுள்ளார்.
 
38. ஒவ்வொரு நாளும் தன்னுடைய நாளை யோகாவுடன் ஆரம்பிக்கிறார் மோடி.
 
39. துாய்மை இந்தியா, திட்டக் கமிஷன் கலைப்பு, அனைவருக்கும் வங்கிக் கணக்கு, ஸ்மார்ட் சிட்டி, மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, சமூக நல திட்டங்களுக்கு ஆதார் பயன்பாடு, சமையல் எரிவாயு மானியத்தை ஒழுங்குபடுத்தியது, உயர்ஜாதியினருக்கு பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு, ஜிஎஸ்டி வரி அமல், பண மதிப்பிழப்பு, முத்தலாக் தடை மசோதா, காஷ்மீர் சிறப்பு அங்கீகாரம் ரத்து உட்பட, பல வரலாற்று திட்டங்களை நிறைவேற்றினார்.
 
40. அண்டை நாடுகளுடனான இந்திய உறவை வலுப்படுத்தவும் உலகின் பிற நாடுகளோடும் இந்தியாவோடு நட்பை மேம்படுத்திகொள்வதற்காக அதிக முயற்சிகளை செய்தார். இதற்காக பல நாடுகளுக்கு அவ்வபோது பயணங்கள் மேற்கொண்டார்.
 
41. உடை விஷயத்தில் அதிகம் கவனம் செலுத்தும மோடி, இந்திய பாரம்பரிய உடைகள் மீது ஆர்வம் கொண்டவர்.
 
42. மோடி சைவ உணவுகளை மட்டுமே உண்பவர்.
 
43. மோடி தனது அலுவலக கோப்புகளில் இந்தியில் மட்டுமே கையெழுத்திடுவார்.
 
image
44. 2014 முதல் 2019 வரை மோடி 96 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
 
45. 2014-இல் 9 நாடுகளுக்கும், 2015-இல் 23 நாடுகளுக்கும், 2016-இல் 17 நாடுகளுக்கும், 2017-இல் நாடுகளுக்கும், 2018-இல் 23 நாடுகளுக்கும், 2019-இல் 15 நாடுகளுக்கும் பயணித்துள்ளார்.
 
46. கொரோனாவால் 2020-ஆம் ஆண்டு பிரதமருக்கு வெளிநாடு பயணம் இல்லாத ஆண்டாக மாறியது.
 
47. கடந்த மார்ச் மாதம் வங்க தேசம் சென்ற பிரதமர் மோடி, இந்தாண்டின் இரண்டாவது வெளிநாட்டு பயணமாக வரும் 24ம் தேதி அமெரிக்க செல்லவுள்ளார்.
 
48. பிரதமர் மோடி, அடிக்கடி வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதுண்டு.
 
49. 17 ஆண்டுகளுக்கு பிறகு நேபாளத்திற்கும், 28 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவிற்கும், 31 ஆண்டுகளுக்கு பிறகு ஃபிஜிக்கும் 34 ஆண்டுகளுக்கு பிறகு செஷல்ஸ்க்கும் பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பிரதமர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
50. காலையில் நான்கு மணிக்கே எழுந்திருக்கும் மோடி, யோகா செய்வார், ஐ-பேடில் செய்தித்தாள்கள் வாசிப்பார்,
 
51. திரைப்படம் பார்க்காதவர், மது அருந்தாதவர், சிகரெட் புகைக்காதவர், காரசாரமான உணவை உண்ணாதவர் என்று பிரபல சமூக அறிவியல் பேராசிரியர் ஆஷீஷ், மோடியை குறிப்பிடுகிறார்.
 
52. டிஸ்கவரி, ‘டிவி’ சேனலை சேர்ந்த, பியர் கிரில்ஸ் உடன், வனத்தில் சாகச பயணம் செய்தார்.
 
53. தனிமை விரும்பியான மோடி மயில், புறாக்களுடன் பொழுதை கழிப்பார்.
 
54. பாக்கெட்டில் எப்பொழுதுமே சீப்பு ஒன்று இருக்கும். அவரது தலைமுடி கலைந்திருக்கும் ஒரு புகைப்படத்தைக்கூட பார்க்க முடியாது.
 
55. இந்து மதம் மீது அதிக பற்று கொண்டவர். நவராத்திரி விரதம் நடைபெறும்போது ஒன்பது நாட்கள் உண்ணாவிரதம் இருந்துள்ளார்.
 
56. உலக தலைவர்களின் தலைமைப் பண்பு, மக்கள் செல்வாக்கு தொடர்பாக அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார்.
 
image
57. உலக அளவில் செல்வாக்கு மிகுந்த தலைவர்களில் பிரதமர் மோடி முதலிடத்தைப் பிடித்துள்ளார் என வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘மார்னிங் கன்சல்ட்’ கருத்துக் கணிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
58. சமூக வலைதளங்களில் பிரதமர் மோடி எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். அதனால் அவரை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
 
59. ஃபேஸ்புக்கில் அதிகம் பேர் பின்பற்றப்பட்ட உலக தலைவர்களின் பட்டியலில் மோடி முதலிடத்தில் உள்ளார்.
 
60. உலக அளவில் அதிக ட்விட்டர் பின் தொடர்பவர்களை கொண்டவர்களின் பட்டியலில் பிரதமர் மோடி 11வது இடத்தில் உள்ளார்.
 
61. உலக தலைவர்கள் தரவரிசை தொடர்பாக வெளியான பட்டியலில் பிரதமர் மோடி 70 சதவீத ஆதரவு பெற்று பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளார்.
 
62. நரேந்திர மோடிக்கும், யசோதா பென்னுக்கும் 1968-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர்.
 
63. 2014 மக்களவைத் தேர்தலின் போது, வடோதராவில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனது மனைவியின் பெயர் யசோதா பென் என்று முதல் முறையாக மோடி வெளிப்படையாக குறிப்பிட்டி ருந்தார்.
 
64. மோடியை பிரிந்ததை குறித்து யசோதா ஒருமுறை கூறுகையில், “இதற்காக நான் கவலைப்படவில்லை. அவர் தேசத்துக்குத் தொண்டாற்றத்தானே என்னை பிரிந்து சென்றார்” என்றார்.
 
65. ஒவ்வொரு முக்கியமான தருணங்களின்போதும் மோடி தனது தாயார் ஹீரா பென்னை சந்தித்து ஆசிர்வாதம் பெறுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
 
66. 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை ராணுவ வீரர்களுடன் இணைந்து கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் மோடி.
 
67. அமெரிக்காவின் ‘டைம்’ இதழ் வெளியிட்ட இந்த ஆண்டுக்கான உலகின் செல்வாக்குமிக்க 100 தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி இடம் பிடித்துள்ளார்.
 
68. கடந்த 2014, 2015, 2017, 2020-ம் ஆண்டுகளில் வெளியான ‘டைம் 100′ பட்டியலிலும் பிரதமர் மோடி இடம்பிடித்தார்.
 
69. கடந்த 20 ஆண்டுகளில் மோடி மீது ஒரு லஞ்ச புகார் கூட இல்லை.
 
70. ‘நரேந்திர மோடி-வளமையின் முன்னோடி மற்றும் உலக அமைதியின் தூதர்’ என்ற பிரதமர் மோடி பற்றிய வாழ்க்கை வரலாற்று நூல், தமிழ் உள்ளிட்ட 10 இந்திய மொழிகளிலும், ஆங்கிலம் உள்ளிட்ட 10 வெளிநாட்டு மொழிகளிலும் நூல் கிடைக்கிறது.
 
71. பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறை விவரிக்கும் ’பி.எம்.நரேந்திர மோடி’ திரைப்படம் 23 மொழிகளில் வெளியானது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.