மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக பவானிபூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பிரியங்கா டிபிரேவால் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார். 

image

சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று மீண்டும் மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சி அமைத்த போதிலும், மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் தோல்வி அடைந்தார். எனவே, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் பவானிபூர் சட்டப்பேரவை உறுப்பினர் சோவேன்தேப் சட்டோபாத்தியாயா தனது பதவியை ராஜினாமா செய்து, தொகுதியை மம்தா பேனர்ஜி போட்டியிட காலி செய்துள்ளார்.

செப்டம்பர் 30-ஆம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், மம்தா பானர்ஜி சென்ற வாரமே வேட்புமனு தாக்கல் செய்துவிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட பாஜக தேர்ந்தெடுத்துள்ள பிரியங்கா டிபிரேவால் வேட்புமனு தாக்கல் செய்தபோது, மம்தா பானர்ஜியை நந்திகிராம் தொகுதியில் தோற்கடித்த சுவேந்து அதிகாரி உடனிருந்தார்.

பிரியங்கா ஒரு வழக்கறிஞர் என்பதும், தேர்தலுக்குப் பிறகு மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற வன்முறை குறித்து பல வழக்குகளை தாக்கல் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

image

காங்கிரஸ் கட்சி மம்தாவுக்கு எதிராக போட்டியிடப் போவதில்லை என முடிவு செய்துள்ள நிலையில், பிரியங்காவை பாஜக களமிறங்கியுள்ளது. இடதுசாரி கட்சிகள் சார்பில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ரீஜிப் பானர்ஜி இந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பவானிபூர் தொகுதியில் தான் மீண்டும் மம்தா பானர்ஜிக்கு எதிராக போட்டியிடத் தயார் என சுவேந்து அதிகாரி தெரிவித்திருந்த நிலையில், முதல்வருக்கு எதிராக பிரியங்கா களமிறங்குவார் என பாஜக முடிவு செய்தது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பிரியங்கா என்டல்லி தொகுதியில் போட்டுயிட்டு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் சுவர்ண கமல் சாகாவிடம் தோல்வியடைந்தார்.

டெல்லியில் படித்த பிரியங்கா 2014 ஆம் வருடத்தில் பாஜகவில் இணைந்தார்.

பவானிபூர் இடைத்தேர்தல் முடிவுகள் அக்டோபர் 3-ஆம் தேதியன்று அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சி இந்த தொகுதியில் மிகவும் வலுவாக இருப்பதால் நிச்சயம் மம்தா பானர்ஜி வெற்றி பெறுவார் என அந்த கட்சியை சேர்ந்தவர்கள் கருதுகிறார்கள். இதனால்தான் பவானி பூர் தொகுதி முதல்வருக்காக காலி செய்யப்பட்டது என்பது அவர்களுடைய கருத்து. 

முதல்வர் பதவியில் நீடிக்க நவம்பர் 5-ஆம் தேதிக்கு முன்னர் சட்டப்பேரவை உறுப்பினராக வேண்டும் என்கிற நிலையில், அக்டோபர் 3-ஆம் தேதியே மம்தா பானர்ஜி பவானிபூர் தொகுதியில் வெற்றி பெற்ற செய்தி அறிவிக்கப்படும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

– கணபதி சுப்ரமணியம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.