தஞ்சாவூர் அருகே உள்ள டீ கடை ஒன்றில் மன்னார்குடியை சேர்ந்த திமுக நிர்வாகிகள் சிலர் குடிபோதையில் கடையில் வேலை செய்த பெண்ணிடம் ரகளை செய்ததால் கடையின் ஊழியர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்களும் எதிர்த்து கேட்டுள்ளனர். இதில் இரு தரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் இரு தரப்பை சேர்ந்த ஏழு பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் நடந்த பேக்கரி

தஞ்சாவூர் அருகே உள்ள சூரக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (45) இவர் தஞ்சை அருகே பட்டுக்கோட்டை-மன்னார்குடி பிரிவு சாலையில் ஐயங்கார் கேக் ஷாப் என்ற பெயரில் பேக்கரி மற்றும் டீ கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி திமுக நகர அமைப்பாளரான சுதாகர், தொண்டரணி அமைப்பாளரான பாண்டவர், மாணவரணி துணை துணை செயலாளர் முருகேசன் உள்ளிட்ட ஆறு பேர் நேற்று மாலை கந்தர்வக்கோட்டையில் நடைபெற்ற கறி விருந்திற்கு சென்று விட்டு கார் மூலம் திரும்பி பிரிவு சாலை வழியாக மன்னார்குடி சென்றுள்ளனர்.

அப்போது பிரிவு சாலைக்கு அருகில் இருந்த காவிரி கிளை ஆற்றில் குளித்துள்ளனர். பின்னர் பேக்கரியுடன் ஒட்டியுள்ள பெட்டிக் கடையில் சிகரெட் வாங்கியுள்ளனர். எட்டு பேரும் நல்ல குடி போதையில் இருந்ததால் கடையில் இருந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் பேசியதாக சொல்லப்படுகிறது. இதில் பயந்து போன அந்த பெண் அருகில் இருந்தவர்களை அழைத்து இதனை கூறியுள்ளார். பேக்கரியின் உரிமையாளர் ஆனந்தன் மற்றும் ஊழியர்கள், `ஏன் இப்படி செய்றீங்கனு?’ கேட்டதற்கு அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது.

மோதல் நடந்த பேக்கரி

இதில் வார்த்தைகள் முற்றிய நிலையில் திமுக நிர்வாகிகள் கடையில் இருந்த டேபிள், கண்ணாடி போன்றவற்றை அடித்து நொறுக்கினர். இதனையறிந்த சூரக்கோட்டை கிராமத்தை சேர்ந்த சிலர் சம்பவ இடத்துக்கு வந்து விட்டனர். பின்னர் இரு தரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் திமுக நிர்வாகிகள் சிலருக்கு மண்டை உடைந்து ரத்தம் வழிந்தது. இதையடுத்து போலீஸ் வந்து இரு தரப்பிலும் காயம் அடைந்தவர்களை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். காயம் பட்டவர்களுக்கு சிகிச்சை தொடர்ந்து வருகிறது. மேலும் இரு தரப்பின் மீதும் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து சிலரிடம் பேசினோம், “மன்னார்குடியை சேர்ந்த திமுகவில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்வர்களான சிலர் கடைக்கு வந்த போது நல்ல குடி போதையில் இருந்தனர். பெட்டிக்கடையில் உள்ள பெண்ணிடம் சிகரெட் கேட்டு விட்டு பாட்டிலில் வைக்கப்பட்டிருந்த பொருள்களை அவர்களாகவே எடுத்துள்ளனர். அதற்கு அந்த பெண், `ஏன் அவசரப்படுறீங்க நானே எடுத்து தர்றேனு’ சொல்லியுள்ளார். அதற்கு தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். அவர்கள் சரியில்லாத நிலையில் இருப்பதை அறிந்த அந்த பெண் அருகில் இருந்தவர்களை யாராவது உதவிக்கு வாங்களேனு கூப்பிட்டுள்ளார்.

சேதமடைந்த பொருள்கள்

பின்னர் அவர்கள், `நாங்க என்ன உன் கைய பிடிச்சா இழுத்தோமுனு?’ கேட்டு பிரச்னை செய்துள்ளனர். துப்பட்டாவையும் இழுத்துள்ளனர். பதறிய அந்த பெண் கூச்சலிட்டு கத்தியுள்ளார். இதனை தொடர்ந்து கடையில் வேலை செய்த ஊழியர்கள் வந்து கேட்டுள்ளனர். அதன் பிறகும் அடங்காத அந்த நபர்கள் கடைக்கு வெளியில் இருந்த பொருள்களை அடித்து நொறுக்கினர்.

Also Read: சென்னை: `எங்ககிட்டேயே பணம் கேக்குறியா?’ – 1,000 ரூபாய் டீசலுக்கு நடந்த ரகளை; வலைவீசும் போலீஸ்

இந்த தகவல் சூரக்கோட்டைக்கு பரவி விட்டது. இதையடுத்து ஊரை சேர்ந்த சிலரும் வந்து விட்டனர். தாங்க முடியாத அட்டகாசத்தை பார்த்து அவர்களும் எதிர்த்து கேட்டுள்ளனர் அப்போது இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் சிலருக்கு கடுமையாக அடிப்பட்டது. மண்டை உடைந்து ரத்தம் வழிந்த நிலையில் சட்டையெல்லாம் ரத்தக் கறையானது. ஒரு கட்டத்தில் அவர்கள் காரில் தப்பியோட முயன்றுள்ளனர் முடியவில்லை.

மருத்துவமனையில் சிகிச்சை

பேக்கரி தரப்பினருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸ் வந்து காயம்பட்ட இரு தரப்பை சேர்ந்தவர்களையும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இரு தரப்பிலும் வழக்கு பதிவு செய்துள்ளனர். குடி போதையில் ரகளை செய்தவர்கள் திமுக நிர்வாகிகள் என்பதால் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்துயுள்ளது” என்றனர்.

Also Read: ராஜ்ய சபா எம்.பி பதவி: திமுக-வில் கிடுகிடு ரேஸ் ஆரம்பம்; காங்கிரஸ் மூத்த தலைவருக்கு வாய்ப்பா?!

இப்பிரச்னையை அறிந்த மன்னார்குடியை சேர்ந்த முக்கிய திமுக நிர்வாகி ஒருவர் பேக்கரி தரப்பை சமாதானம் செய்வதற்காக பேசி வருவதாக சொல்லப்படுகிறது. போலீஸ் தரப்பில் பேசினோம், “இரு தரப்புக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு வார்த்தைகள் முற்றிய நிலையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பு மீதும் வழக்கு பதிவு செய்திருக்கிறோம். சிகிச்சைக்கு பிறகு இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும்” என்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.