‘’Shane do you understand how spin works…’’

சமீபத்தில் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து ப்ளேயிங் லெவனில் ஸ்பின்னர் யாரையும் சேர்க்காதது குறித்துக் கேள்வி எழுப்பியிருந்தார் ஷேன் வார்னே. ஸ்பின்னரை சேர்க்காதது தவறு என விமர்சித்து ட்விட்டரில் எழுதியிருந்தார். அதற்கு ஒருவர் கமென்ட்டாக எழுதியிருந்ததுதான் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் இருக்கும் ஆங்கில வரி.

உங்களுக்கு சுழற்பந்து எப்படி வேலை செய்யும் எனத் தெரியுமா என்கிற கேள்வியை எதிர்கொண்ட ஷேன் வார்னேதான் 90’களில் உலகின் நம்பர் 1 லெக் ஸ்பின்னர். இன்றுவரை லெக் ஸ்பின்னர்களுக்கு அவர்தான் ரோல் மாடல். சர்வதேச கிரிக்கெட்டில் 1,000 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கும் கிரிக்கெட்டின் எக்காலத்துக்குமான மிகச்சிறந்த வீரர்.

ஷேன் வார்னே

2003… தென்னாப்பிரிக்காவில் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடங்க ஒரே ஒரு நாள்தான் இருக்கிறது. நடப்பு சாம்பியானகத் தென்னாப்பிரிக்கா போய் இறங்கியிருக்கிறது ஆஸ்திரேலியா.1999-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பையில் அதிகபட்ச விக்கெட்களாக 20 விக்கெட்கள் வீழ்த்தி ஆஸ்திரேலியா உலகக்கோப்பையை வெல்லக்காரணமாக இருந்தவராக ஷேன் வார்னே 2003 உலகக்கோப்பை அணியிலும் இடம்பிடித்திருக்கிறார். ஆனால், திடீரென போட்டி தொடங்குவதற்கு முந்தைய நாள் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்துகிறது ஆஸ்திரேலிய அணி நிர்வாகம். தென்னாப்பிரிக்காவில் இருந்து உடனடியாக ஷேன் வார்னே ஆஸ்திரேலியாவுக்குத் திருப்பி அனுப்பப்படுகிறார் என்றது. யாருக்கும் என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை!

தடை செய்யப்பட்ட மருந்தை உட்கொண்டதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட ஷேன் வார்னேவுக்குத் தடை விதித்தது. ‘’2003 உலகக்கோப்பைதான் எனது கடைசி ஒருநாள் தொடர், அத்தோடு ஓய்வுபெறப்போகிறேன்’’ என ஏற்கெனவே அறிவித்திருந்த உலகின் நம்பர் 1 ஸ்பின்னருக்கு இப்படி ஒரு முடிவா என ஒட்டுமொத்த ரசிகர்களும் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள்.

‘’என்னுடைய அம்மா உடல் எடையைக் குறைப்பதற்காகக் கொடுத்த மருந்தைத்தான் உட்கொண்டேன். அது தடை செய்யப்பட்டது என்பது தெரியாது’’ என்றார் ஷேன் வார்னே. ஆனால், அவரது பதிலை ஏற்றுக்கொள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் தயாராகயில்லை. வீட்டுக்கு அனுப்பப்பட்டார் ஷேன் வார்னே. டெஸ்ட்டில் 400-க்கும் மேற்பட்ட விக்கெட்கள், ஒருநாள் கிரிக்கெட்டில் 290 விக்கெட்கள் எடுத்திருந்த ஒரு மாவீரனின் கிரிக்கெட் வாழ்க்கை அத்துடன் முடிந்தது என்றுதான் எல்லோருமே நினைத்தார்கள். ஏனென்றால் அப்போது அவருக்கு வயது 34-ஐ நெருங்கிக்கொண்டிருந்தது.

கொண்டாட்டத்தோடு முடிந்திருக்க வேண்டிய, ஆஸ்திரேலியாவின் ஆல் டைம் கிரேட்டாக ஓய்வுபெற்றிருக்கவேண்டியவர் இப்படி வீணாகப் போய்விட்டாரே என மீடியாக்கள் தொடர்ந்து கட்டுரைகள் எழுதின. ‘’ஏன் அந்த மருந்துகளை வார்னே உட்கொண்டார், நடந்தது என்ன?’’ டிவிக்கள் வார்னேவின் கதையை தலைப்புச் செய்தியாக்கிக்கொண்டிருந்தன. வார்னேவின் கரியர் முடிந்துவிட்டதாக எல்லோரும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஷேன் வார்னே அந்த செய்திகளில் தன்னுடைய கவனத்தை செலுத்தி நேரத்தை வீணடிக்கவில்லை. கிளப் கிரிக்கெட் ஆட ஆரம்பித்தார். மீடியாக்களும், தன்னுடைய விமர்சகர்களுக்கும் தன்னுடைய ஆட்டத்தின் மூலம் மட்டுமே பதில் சொல்லவேண்டும் என முடிவெடுத்தவர் சரியாக ஓர் ஆண்டு தடைக்குப் பிறகு மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்குள் வந்தார்,

இலங்கைதான் வார்னேவின் ரீ- என்ட்ரிக்கான முதல் களம். இலங்கைக்கு வந்திருக்கும் ஆஸ்திரேலிய அணி பற்றியும், ஷேன் வார்னேவின் ரிட்டன் பற்றியும் இலங்கையின் முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்காவிடம் கேள்வி கேட்கப்பட்டது. ‘’முன்புபோல ஆஸ்திரேலிய அணிக்கு ஷேன் வார்னேவால் அவ்வளவு பயன் இருக்காது. அவர் நிறைய எடை போட்டு விட்டார். ஃபிட்டாக இல்லை’’ என்றார் அர்ஜுனா ரணதுங்கா. அர்ஜுனாவின் இந்தக் கருத்து பற்றி ஷேன் வார்னேவிடம் கேட்கப்பட்டது. ‘’உடல் எடை பற்றியெல்லாம் அர்ஜுனா ரணதுங்கா பேசுவதுதான் வியப்பாக இருக்கிறது. ஒரு முழு ஆட்டை வயிற்றுக்குள் விழுங்கியவர் போல இருந்து கொண்டு அவர் என்னை இப்படிச் சொல்லியிருக்கிறார்’’ என்று சொன்னார் ஷேன் வார்னே. இது அப்படியே அர்ஜுனாவிடம் சொல்லப்பட்டது. அதற்கு அர்ஜுனா ‘’நான் ஒரு ஆட்டைக்கூட அப்படியே விழுங்குவேன். ஆனால், நான் வார்னே போல விழுங்கக்கூடாத மாத்திரைகளை எல்லாம் விழுங்கிவிட்டு அம்மா மேல் பழிபோட மாட்டேன்’’ என்றார்.

ஷேன் வார்னே

மீண்டும் களத்துக்குள் திரும்பியவருக்கு ரணதுங்காவுடனான இந்த வார்த்தைப்போர் இன்னும் அழுத்ததைக் கூட்டியிருக்க வேண்டும். ஆனால், வார்னே தான் யார் என்பதை அர்ஜுனாவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்துக்குமே நிரூபித்தார். வார்னேவின் பெஸ்ட் பெர்ஃபாமென்ஸ்கள் எல்லாமே இதன்பிறகு நிகழ்ந்தவைதான்.

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கால்(Galle) மைதானத்தில் நடந்தது. முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியாவை 220 ரன்களுக்கு ஆல் அவுட் செய்துவிட்டது இலங்கை. முரளிதரன் 6 விக்கெட்கள் எடுத்தார். இப்போது இலங்கைக்கு முரளிதரன் செய்ததை, ஆஸ்திரேலியாவுக்கு எடைகூடி, தடைமீண்டு வந்திருக்கும் ஷேன் வார்னே செய்யவேண்டும். வார்னேவின் பந்து பழையபடி சுழலுமா என்பதைக் காண உலகமே காத்திருந்தது. வார்னேவின் விரல்கள் மாயாஜால சுழலை மீண்டும் நிகழ்த்திக்காட்டின. ஜெயசூர்யாவில் தொடங்கி முரளிதரன் வரை ஐந்து விக்கெட்களை வீழ்த்தி இலங்கையின் வீழ்ச்சியை தொடங்கிவைத்தார் ஷேன்.

இரண்டாவது இன்னிங்ஸில் 154 ரன்களுக்கு இலங்கை ஆல் அவுட். வெறும் 15 ஓவர்களே வீசி அட்டப்பட்டு, ஜெயவர்தனே, தில்ஷன், திலகரத்னே என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை எல்லாம் பெவிலியனுக்கு அனுப்பி இரண்டாவது இன்னிங்ஸிலும் ஃபைஃபர். ஆஸ்திரேலியா வென்றது. ரணதுங்கா அமைதியானார்.

இரண்டாவது டெஸ்ட் கண்டியில் நடந்தது. முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியாவை இந்தமுறை 120 ரன்களுக்கே ஆல் அவுட் செய்தது இலங்கை. வந்தார் ஷேன் வார்னே. மீண்டும் 5 விக்கெட்டுகள். இலங்கை 211 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கைக்கு கொடுக்கப்பட்ட டார்கெட் 352 ரன்கள். ஜெயசூர்யாவின் சதத்தால் வெற்றியை நெருங்கிக்கொண்டிருந்தது இலங்கை. ஆனால், மீண்டும் ஃபார்முக்கு வந்தார் ஷேன் வார்னே. மீண்டும் 5 விக்கெட்கள். ஆஸ்திரேலியா வென்றது. ரணதுங்கா மீடியாக்கள் முன் வருவதை நிறுத்திக் கொண்டார்.

மூன்றாவது டெஸ்ட் கொழும்புவில் நடந்தது. இந்த டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இரண்டு விக்கெட்கள், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்கள் என மூன்று டெஸ்ட்களில் மொத்தம் 26 விக்கெட்கள் வீழ்த்தி ஆஸ்திரேலியா 3-0 என தொடரை வெல்வதற்கும் காரணமாக இருந்தார் ஷேன் வார்னே. ரணதுங்கா தொடர் தொடங்குவதற்கு முன்பு தான் பேசிய பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது என்றார். 500 டெஸ்ட் விக்கெட்டுகள் என்கிற மைல்கல்லை எட்டினார் ஷேன் வார்னே. அந்த ஆண்டு மட்டும் 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 70 விக்கெட்கள் எடுத்ததோடு 5 முறை 5 விக்கெட் ஹால் மற்றும் இரண்டு முறை 10 விக்கெட் ஹால் என மிகப்பெரிய கம்பேக் கொடுத்தார் ஷேன் வார்னே.

இதுதான் ஷேன் வார்னேவின் தனித்துவம். எல்லாம் முடிந்துவிட்டது என நினைக்கும்போது அப்படி நினைத்தவர்களை எல்லாம் முடித்துக்காட்டுவார்.

2006… ஆஷஸ் தொடரோடு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவிக்கிறார் ஷேன். இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் பிரிஸ்பேனில் நடக்கிறது. முதல் இன்னிங்ஸில் ஷேன் வார்னேவுக்கு விக்கெட்டே விழவில்லை. ஆனால், இரண்டாவது இன்னின்ஸில் அலஸ்டர் குக், இயான் பெல், பால் காலிங்வுட், ஆண்ட்ரூ ஃபிளின்டாப் என நான்கு விக்கெட்களை வீழ்த்தி இங்கிலாந்தின் இன்னிங்ஸின் முடித்தார் வார்னே.

மெல்போர்னில் நடந்த பாக்ஸிங் டே ஆஷஸ் டெஸ்ட்டில் மீண்டும் 5 விக்கெட் ஹால். அந்த டெஸ்ட்டில்தான் 700 விக்கெட்கள் என்கிற சாதனையைப் படைத்தார். 2007-ம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதி தொடங்கிய கடைசி ஆஷஸ் டெஸ்ட்டில் தன்னுடைய கடைசிப் போட்டியில் விளையாடினார் ஷேன் வார்னே. பெளலராக முதல் இன்னிங்ஸில் 1 விக்கெட்தான் எடுத்தார். ஆனால், பேட்ஸ்மேனாக மூழ்கிக்கொண்டிருந்த ஆஸ்திரேலிய பேட்டிங்கை காப்பாற்றி கரை சேர்த்தார் வார்னே. வெறும் 65 பந்துகளில் 71 ரன்கள் என ஒருநாள் போட்டி போல ஆடி ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை உயர்த்தினார். ஆஸ்திரேலியாவின் டாப் ஸ்கோரர் வார்னேதான். இந்த டெஸ்ட்டின் இரண்டு இன்னிங்ஸிலும் தலா 1 விக்கெட்கள்தான் எடுத்தார் வார்னே. ஆனால், இவர் முதல் இன்னிங்ஸில் எடுத்த மான்ட்டி பனேசரின் அந்த ஒற்றை விக்கெட்தான் ஷேன் வார்னேவின் சர்வதேச கிரிக்கெட்டில் 1,000-ஆவது விக்கெட்.

ஷேன் வார்னே

இதே சிட்னி மைதானத்தில் சரியாக 15 ஆண்டுகளுக்கு முன்னர் ஷேன் வார்னேவின் கிரிக்கெட் வாழ்க்கைத் தொடங்கியது. அதுவும் இந்தியாவுக்கு எதிராக! அன்று இரட்டை சதம் அடித்து மிரட்டிக்கொண்டிருந்த ரவி சாஸ்திரியின் விக்கெட்தான் ஷேன் வார்னேவின் முதல் சர்வதேச விக்கெட்.

ஆரம்பகாலத்தில் சச்சின் டெண்டுல்கர் சதம் அடிக்க திணறியதுபோல ஷேன் வார்னே விக்கெட் எடுக்க முடியாமல் திணறினார். 40 ஓவர் போடுவார், 150 ரன்கள் கொடுப்பார், 1 விக்கெட் எடுப்பார் என கரியர் இப்படித்தான் போய்க்கொண்டிருந்தது. அணிக்குள் வருவதும் போவதுமாக இருந்தவருக்கு வாழ்வளித்தது வெஸ்ட் இண்டீஸ். 1992 இறுதியில் ஆஸ்திரேலியா வந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஷேன் வார்னே இல்லை. இந்த முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய பெளலர்கள் விக்கெட் எடுக்க முடியாமல் திணற ஆட்டம் டிராவில் முடிந்தது. அதனால் இரண்டாவது பாக்ஸிங் டே டெஸ்ட்டுக்கு மீண்டும் வார்னேவை ப்ளேயிங் லெவனுக்குள் கொண்டுவந்தார் கேப்டன் ஆலன் பார்டர். இரண்டாவது இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸுக்கான டார்கெட் 359 ரன்கள். கேப்டன் ஃபில் சிமன்ஸும், ரிச்சர்ட்ஸனும் பார்ட்னர்ஷிப் போட்டு வெஸ்ட் இண்டீஸை வெற்றியை நோக்கி அழைத்துப்போகிறார்கள். 142 ரன்கள் வரை ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தது வெஸ்ட் இண்டீஸ். ஆனால், அரை சதம் கடந்து ஆடிக்கொண்டிருந்த ரிச்சி ரிச்சர்ட்சனின் விக்கெட்டை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸின் சரிவைத் தொடங்கிவைத்தார் வார்னே. அந்த இன்னிங்ஸில் மட்டும் 7 விக்கெட்கள். ஆஸ்திரேலிய ப்ளேயிங் லெவனுக்குள் வார்னேவுக்கு நிரந்தர இடம் உறுதியானது.

ஒரு வருடத்தில் அதிக டெஸ்ட் விக்கெட்கள் எடுத்தவர் என்கிற சாதனை இன்னமும் ஷேன் வார்னேவிடம்தான் உள்ளது. 2005-ல் 15 டெஸ்ட்டில் விளையாடி 96 விக்கெட்கள் எடுத்திருந்தார் வார்னே. இன்னும் 4 விக்கெட்கள் எடுத்திருந்தால் ஓர் ஆண்டில் 100 விக்கெட்கள் எடுத்தவர் என்கிற சாதனை சொந்தமாகியிருக்கும். முத்தையா முரளிதரனுக்கு அடுத்தபடியாக 708 விக்கெட்கள் வீழ்த்தி அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர் என்கிற பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார் வார்னே.

ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற 5 ஆண்டுகளுக்குப்பிறகு முதன்முறையாக ஆரம்பிக்கப்பட்ட இந்தியன் பிரிமியர் லீகின் மூலம் டி20 கிரிக்கெட்டுக்குள் நுழைந்தார் ஷேன் வார்னே. அதுவும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக, பயிற்சியாளராக. சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் தொடரின் முதல் சாம்பியன் ஆனது. அடுத்த நான்கு ஆண்டுகள் ஷேன் வார்னேதான் ராஜஸ்தான் ராயல்ஸை வழிநடத்தினார்.

ஷேன் வார்னே

700 விக்கெட்கள் வீழ்த்தி உலகின் நம்பர் 1 லெக் ஸ்பின்னராக வலம் வந்த ஷேன் வார்னே ஏன் பெரிதாகக் கொண்டாடப்படவில்லை?! சர்ச்சைகள்தான். வார்னேவின் பர்சனல் வாழ்க்கை தொடங்கி கிரிக்கெட் கரியர் வரை சர்ச்சைகள் சூழ்ந்திருந்தது. பல பெண்களுடன் தொடர்பு, குடிப்பழக்கம், புக்கிகளுடன் நட்பு, போதை மருந்து உட்கொண்டது, களத்தில் பேட்ஸ்மேன்களுடன் மோதியது என ஷேன் வார்னேவின் பெயர் தொடர்ந்து சர்ச்சைக்குரிய செய்திகளிலேயே இடம்பிடித்துக்கொண்டிருந்தது. உலகம் வகுத்து வைத்திருக்கும் ஒழுக்கவிதிகளுக்குள் வார்னே சரியாக பொருந்தி வரராததால் அவரை ஆல் டைம் கிரேட்டாக ஒப்புக்கொள்வதில் இன்னும் சர்ச்சை நீடிக்கிறது. ஆனால், 90களில் கிரிக்கெட் பார்த்த ஒவ்வொரு ரசிகனுக்கும் ஷேன் வார்னே யார் என்பது தெரியும்.

‘’நான் செய்யாத தவறுகளே இல்லை. இப்போதும் தவறுகள் செய்கிறேன். ஆனால், என்னால் மக்களின் முகத்தில் சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டுவர முடிந்திருக்கிறது. மக்கள் என்னை அவர்களோடு பொறுத்திப் பார்த்துக்கொள்ளலாம். ஏனென்றால் நான் யாருக்காகவும் நடித்ததில்லை. நான் யார், என் குணம் என்ன, என் சந்தோஷங்கள் என்ன என்பதை யார் முன்பாகவும் நான் மறைத்ததில்லை. நான் ஒரு நல்ல என்டர்டெய்னராக இருந்திருக்கிறேன். பல கிலோமீட்டர் தொலைவில் இருந்து, பல நாடுகள் கடந்து, பணம் கொடுத்து என்னுடைய பந்துவீச்சை ரசிக்கப் பல ஆயிரம் ரசிகர்கள் பின் தொடர்ந்திருக்கிறார்கள். அவர்களை ஒருபோதும் நான் ஏமாற்றியதில்லை என்கிற திருப்தியே எனக்குப் போதும்’’ என்று தன்னுடைய கரியர் குறித்துப் பேசியிருக்கிறார் வார்னே! சர்ச்சைகளின் நாயகன் என ஊடகங்கள் தலைப்பிட்டாலும் ரசிகர்களுக்கு அவர் எப்போதும் கிங் ஆஃப் ஸ்பின்.

சுழற்பந்து வீச்சின் சக்கரவர்த்திக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.