ஒல்லியான தேகம், வகுடெடுத்து வாரிய முடி, அப்பாவித்தனமான முகம், அலட்டிக்கொள்ளாத பண்பு, வழிந்தோடும் அன்பு, பார்வையாளர்களை காந்தமாய் ஈர்க்கும் நடிப்பு, தவறு செய்ததும் மாட்டிக்கொள்ளும் குழந்தைக்கு ஒப்பான பாவனை என வகை வகையாய் அந்தர்பல்டி அடிக்கும் இந்திரன்ஸை ரசிக்க ஓராயிரம் காரணங்கள் உண்டு. இந்திரனஸுக்கு ப்ளஸ்ஸே அவரது கடைந்தெடுத்த அப்பாவித்தனம்தான்.

‘ஹோம்’ (#Home) மலையாள படத்தில் ஒரு காட்சி வரும். ஆண்டனி ஆலிவர் ட்விஸ்ட் மும்முரமாக கேரவனில் கதை சொல்லிக்கொண்டிருப்பார். நம்ம இந்திரன்ஸ் குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருப்பார். கதை சொல்லி முடித்து எழுந்ததும், ஜெர்க் கொடுத்து அசத்துவார். எப்பேர்பட்டவரையும் சிரிக்கவைக்கும் முகபாவனை அது. இந்திரன்ஸுக்கான தனிச்சிறப்பும் அதுவே கூட. நடிகர்கள் அழுது வடிந்து முகத்தை சுருக்கி விரித்து கஷ்டப்பட்டு செய்ய வேண்டியதை, மனுஷன் அசால்ட்டாக செய்துவிட்டு சென்றுவிடுவார். அவருக்கு அது இயல்பாக வருகிறது.

ஆம், நிஜத்திலும் இந்திரன்ஸ் அப்பாவித்தனம் கொண்டவர்தான். செயற்கையை விட, இயல்புதானே நம்முடன் எளிதில் கனெக்ட் செய்யும். இயல்பை உருக்கி வார்தெடுத்த இந்திரன்ஸுக்கு காலம் உரிய அங்கீகாரத்தை தற்போதுதான் வழங்கி வருகிறது எனலாம்.

image

யார் இந்த இந்திரன்ஸ்?

திருவானந்தபுரம் அடுத்த குமாரபுரம்தான் இந்திரன்ஸ் பூர்விகம். இந்திரன்ஸ் உடன் சேர்த்து அவரின் குடும்பத்தில் மொத்தம் 7 உடன்பிறப்புகள். 7 பேரில் 3-வது ஆளாக பிறந்த இந்திரன்ஸுக்கு அப்பா, அம்மா வைத்த பெயர் சுரேந்திரன். இதுதான் பின்னாளில் இந்திரன்ஸ் ஆக மாறியது. இந்திரன்ஸ் தந்தைக்கு மரம் வெட்டும் தொழில். இதில் வருமானம் குறைவு என்பதால் குடும்பம் வறுமையில் சிக்கித் தவித்து வந்தது. இது இந்திரன்ஸையும் விட்டு வைக்கவில்லை. நான்காம் வகுப்பு வரை பள்ளியில் நன்றாக படித்துக் கொண்டிருந்த அவரால் ஐந்தாம் வகுப்புக்கு செல்லமுடியவில்லை. காரணம், பள்ளியில் யூனிஃபார்ம் கட்டாயமாக்க, யூனிஃபார்ம் வாங்க பணமில்லாமல் கல்வியை நிறுத்தி வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார்.

மாமாவின் டெய்லர் கடையில் தையல் வேலை. தையல் பணியில் இருக்கும்போதுதான் சினிமா மோகம் எட்டிப் பார்த்துள்ளது. பணியின் மதிய உணவு இடைவேளையின் போது சீக்கிரமாகவே கடையில் இருந்து செல்லும் இந்திரன்ஸ் தினமும் தியேட்டர்களில் மதிய ஷோ காண்பதை வழக்கமாக வைத்துள்ளார். அக்காலத்தில் அப்படி பார்த்த கிளாசிக் திரைப்படங்கள்தான் இந்திரன்ஸின் சினிமா மீதான மோகத்துக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தது. இந்த மோகத்தின் முதல் படியாக, உள்ளூர் கிளப்கள் நடத்தும் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். வேலைக்காரன், வியாபாரி போன்ற வேடங்கள் நாடங்களில் அவருக்கு கிடைத்தன.

image

மற்ற நல்ல வேடங்கள் கிடைக்காததுக்கு காரணம், அவரின் ஒல்லியான தேகம். இதனால் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தவர், ஒருநாள் விடாப்பிடியாக போலீஸ் வேடம் கேட்டு வாங்கி நடித்தார். ஆனால், அந்த நாடகத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லை. குறிப்பாக அவரின் போலீஸ் கதாபாத்திரம், அவரின் உருவத்தை வைத்து எல்லோரும் கிண்டல் செய்தனர். மற்றவர்களின் கேலி, கிண்டல் இந்திரன்ஸை அப்படியே இருக்க விடவில்லை. தனது உடலமைப்பை மேம்படுத்த நினைத்து ஜிம்முக்கு போக முடிவு செய்தார். ஜிம்மில், மாமிசம் சாப்பிட சொல்ல, அது அவரால் முடியவில்லை. ஏனென்றால் ஒருமுறை தன்னால் ஆட்டுக்குட்டி ஒன்று இறந்துபோகும் நிலை ஏற்பட, அதிலிருந்து மாமிசம் சாப்பிடுவதை தவிர்த்து வந்துள்ளார்.

இதனால் ஜிம்மும் கைவிட, காலமும் கடந்தது. வேறு வழியே இல்லாமல் நடிப்புக் கனவை ஏறக்கட்டிவிட்டு சொந்தமாக தையல் கடை ஆரம்பித்து தொழிலை கவனிக்க ஆரம்பித்துவிட்டார். அந்த சமயத்தில்தான் 1981-ல் ரிலீசாகிய ‘சூதாட்டம்’ என்னும் திரைப்படத்தின் ஆடை வடிவமைப்பாளர் லட்சுமணனுக்கு ஓர் உதவியாளர் தேவை என்கிற விவரம் அறிகிறார் இந்திரன்ஸ். தனது கடையை இழுத்து பூட்டிவிட்டு, மீண்டும் சினிமாவை தேடிச் சென்றார். இதே ‘சூதாட்டம்’ அவருக்கு சினிமா வாய்ப்பையும் கொடுத்தது. என்றாலும் பத்தில் ஒருவராக நின்றுச் செல்லும் வேடம். ஆனாலும் அந்த வேடம் கிடைத்தது அவர் ஆடை வடிவமைப்பு உதவியாளராக இருந்ததால்தான். இதனால் அதையே பின்பற்ற ஆரம்பித்தார். லட்சுமணனிடம், தொடர்ந்து வேலாயுதம் என்ற ஆடை வடிவமைப்பாளரின் உதவியாளராக பணிபுரியத் தொடங்கினார்.

1985-ல் ‘சம்மேளனம்’ என்னும் திரைப்படத்தில் முதல்முறையாக தனியாக ஆடை வடிவமைப்பாளரானார். இப்படி ஆடை வடிவமைப்பு, சிறிய வேடங்கள் என சினிமா கனவில் முன்னோக்கிச் சென்று கொண்டிருந்த இந்திரன்ஸ், இயக்குநர் பத்மராஜனின் ஆஸ்தான ஃபேவைரட் காஸ்டியூமராக அவரின் படங்களில் தொடர்ந்து பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. அவர் மூலமும் மற்ற படங்களிலும் வாய்ப்பு. ஒருகட்டத்தில் மலையாள சினிமாவின் பிஸியான காஸ்டியூமர் என்ற நிலைக்கு உயர்ந்தார். என்றாலும் தனக்குள் இருந்த நடிப்பு மோகம் அவரை விட்டு விலகவில்லை.

image

இந்த நிலையில்தான் 1994-ல் வெளியான `சிஐடி உன்னிகிருஷ்ணன்’ என்ற திரைப்படம் இந்திரன்ஸ், சினிமா பயணத்தில் புதிய வழியை ஏற்படுத்தி கொடுத்தது. இந்தப் படத்தில் அவரின் கதாபாத்திரம் பாராட்டப்படவே, நடிப்பதற்கான வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கத் தொடங்கின. இதனால் ஆடை வடிவமைப்புத் துறையில் இருந்து விடைபெற்று, தான் கனவு கண்ட நடிப்புத் தொழிலை முழுநேரமாக பார்க்கத் தொடங்கினார். ஆரம்பம் முதலே சீரியஸான கதாபாத்திரங்கள் செய்ய ஆசைப்பட்டாலும், அவருக்கு கிடைத்தது எல்லாம் காமெடி வேடங்கள்தான். நாடகத்தில் புறக்கணிப்பை சந்தித்த அதே காரணம்தான் இங்கும். அவரின் ஒல்லியான தேகம்.

காமெடி பாத்திரங்கள் மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்தாலும் இந்திரன்ஸ் மனம் விரும்பியது அதுவல்ல. சீரியஸான சீன்களில் மற்றவர்கள் நடிக்கும்போதும், க்ளைமேக்ஸ் சீன்கள் படமாக்கும்போதும் இந்திரன்ஸை செட்டிற்குள் அனுமதிக்கமாட்டார்களாம் அப்போதெல்லாம். அவரின் காமெடி மற்றவர்களை சிரிக்க வைத்துவிடும் என்பதால், வேலை கெட்டுவிடும் என்பதற்காக அப்படி செய்துள்ளனர். மேலும், பொது இடங்களில் செல்லும்போது ரசிகர்கள் படத்தில் இந்திரன்ஸ் நடித்த காமெடி பாத்திரங்களின் பெயர்களான குடைக்கம்பி, நீர்கோழி என்று கூப்பிடுள்ளனர்.

image

இதன் தொடர்ச்சியாக, தனது அடுத்த கனவை நோக்கி விடாமுயற்சியாக பயணிக்கத் தொடங்கினார் இந்திரன்ஸ். 2004-ல் திலீப் நடிப்பில் வெளியானது ‘கதவாசேஷன்’. இந்தப் படத்தில் கள்ளன் கொச்சாப்பி என்கிற கதாபாத்திரம். சொல்லப்போனால், இந்திரன்ஸ் முதன்முதலில் செய்த கேரக்டர் ரோல் இது. இந்தப் படம் மூலமாக காமெடி மட்டுமல்ல, தனக்கு சீரியஸான வேடங்களும் செய்ய வருமென, தன்னை நகையாடியவர்களுக்கு காட்டினார். இதன்பின்னரே அவருக்கு நிறைய கேரக்டர் ரோல்கள் கிடைக்கத் தொடங்கின.

இறுதியாக 2009-ல் ‘சுத்தரில் சுத்தன்’ என்கிற திரைப்படத்தில் முதல்முறையாக நாயகன் வேடம். ஒருகாலத்தில் போலீஸ் வேடமிட்டதற்காக, தன்னை கேலி, கிண்டலுக்கு உள்ளாக்கிய மக்கள் முன்னால் நாயகனாக நிரூபித்தார். இதன்பின் இந்திரன்ஸின் திரைப்பயணத்தில் ஏறுமுகம்தான். மலையாள சினிமாவில் மிகப் பெரிய நடிகர்கள் வென்ற சிறந்த நடிகருக்கான மாநில விருதை 2017-ல் ‘ஆளொருக்கம்’ படத்துக்காக வென்றார். 2019-ல் ஷாங்காய் திரைப்பட விழாவில், இந்திரன்ஸ் நாயகனாக நடித்த ‘வெயில் மரங்கள்’ படத்திற்காகவும், திரைத்துறையில் 38 ஆண்டுகள் கலை சேவை செய்ததற்காக `சிறந்த கலை சாதனை’ விருதும் கொடுக்கப்பட்டது. ஒட்டுமொத்த மலையாள சினிமாவுக்கும் கொடுக்கப்பட்ட கௌரவமாக இந்திரன்ஸை கொண்டாடி தீர்த்தனர் மலையாளிகள்.

40 ஆண்டுகளில் 400 படங்களில் நடித்த பின்பும், இந்திரன்ஸின் கலைப் பயணமும் இன்னும் தொடர்கிறது. இதோ இப்போது ‘ஹோம்’ படம் வரை. ‘ஹோம்’ கதையின் நாயகனாக இந்திரன்ஸ். படத்தின் துவக்கம் முதல் இறுதிவரை அவரே படத்தின் ஆன்மாவாக அச்சு நகராமல் தாங்கிப் பிடிக்கிறார். நான்காம் வகுப்பில் படிப்பை நிறுத்தியதற்காவும், ஒல்லியான தேகத்துக்காகவும் சந்தித்த புறக்கணிப்புகளையும், கிண்டல்களையும் தாண்டி வெற்றி பெற்றதில் முக்கிய பங்கு, இவரது புத்தக வாசிப்புக்கு உண்டு.

படிப்பை நிறுத்தாலும், குமாரபுரத்து நூலகத்தில் சிறுவயதில் தொடங்கிய புத்தகம் வாசிப்பை இன்னும் தொடர்வதாக சொல்கிறார் இந்திரன்ஸ். பல கதாபாத்திரங்களில் நடிக்கவும், புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளவும் வாசிப்பே தனக்கு கற்றுக்கொடுப்பதாகவும் நெகிழ்கிறார்.

இந்திரன்ஸின் வாழ்க்கை நம் அனைவருக்கும் ஒரு பாடம். தன்னுடைய உடல்தோற்றத்தை வைத்து அவமானம் செய்தவர்களை புறம்தள்ளி போகிற போக்கில் அவர் கையாண்ட விதம் உண்மையில் நம் எல்லோருக்கும் தவிர்க்க முடியாத பாடம்தான். ஏனெனில் பலரும் அதுபோன்ற தருணங்களில் உடைந்து போய்விடுகிறார்கள், இந்திரன்ஸ் போன்று இயல்பாக கடப்பவர்கள் வெகு சிலரே. சில நேரங்களில் திறமைகளைத் தாண்டி, தேவையற்ற காரணங்களால் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பது மற்றவர்களில் இருந்து நம்மை வேறுபடுத்தி காட்டுகிறது என்பதை அவரின் வாழ்க்கை தெளிவுபடுத்துகிறது. அப்படி வேரூன்றியவர்களே, இங்கே சாதிக்கிறார்கள் என்பதற்கு இந்திரன்ஸே சாட்சி.

– மலையரசு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.