டோக்கியோவிலிருந்து இந்தியாவுக்கு வருத்தமளிக்கக்கூடிய செய்தி ஒன்று வந்திருக்கிறது. நேற்று ஒரே நாளில் இந்தியா மூன்று பதக்கங்களை வென்றிருந்தது. அந்த மூன்றில் ஒன்று வினோத் குமார் வென்றது. வட்டு எறிதல் போட்டியில் அவர் வெண்கலம் வென்றிருந்தார். இப்போது அந்த வெற்றி ரத்து செய்யப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வினோத் குமார் அந்த போட்டியில் மிகவும் சிறப்பாக செயல்பட்டிருந்தார். அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த 6 வாய்ப்புகளிலுமே Foul வாங்காமல் சிறப்பாக வீசியிருந்தார். அதில் ஒரு வீச்சு 19.91 மீட்டருக்கு சென்று ஆசிய சாதனையாகவும் பதிவானது. இதுதான் அவருக்கு வெண்கலத்தையும் பெற்றுக் கொடுத்தது.

ஆனால், அந்த போட்டி முடிந்ததுமே சக போட்டியாளர்களாக பங்கேற்றிருந்த சில நாடுகள் ஒலிம்பிக் நிர்வாகிகளிடம் வினோத் குமார் குறித்து ஒரு புகாரை அளித்திருக்கின்றனர். இதனால் கொஞ்ச நேரத்திலேயே வினோத் குமாரின் வெற்றி நிறுத்தி வைக்கப்படுவதாகவும் வினோத் குமார் குறித்து மறுபரிசீலனை செய்யப்போவதாகவும் அறிவிப்பு வந்திருந்தது.

பொதுவாக விளையாட்டு போட்டிகளில் இதேமாதிரியான புகார்களும் மறுபரிசீலனையும் சகஜம். பெரும்பாலான நேரங்களில் வெற்றி பெற்ற வீரருக்கு சாதகமான முடிவே வரும். சில சமயங்களில் மட்டுமே அதிர்ச்சிகரமான முடிவுகள் வரும். வினோத் குமார் விஷயத்தில் ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே அதிர்ச்சியளிக்கும் வகையிலான முடிவு வெளியாகியுள்ளது. அவரது வெற்றி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதனால் பதக்கமும் வழங்கப்படாது.

வினோத் குமார்

இதற்கான காரணமாக ஒரு முக்கியமான விஷயம் குறிப்பிடப்பட்டுள்ளது. வீரர்கள் உடல் பாதிப்பின் அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு பிரிவு பிரிவாக போட்டி நடக்கும். வினோத் குமார் ஆடிய அந்த F52 பிரிவுக்கு ஏற்ற உடல் பாதிப்போடு அவர் இல்லை. அந்த வகைமைப்படுத்துதலுக்குள் அவர் அடங்கமாட்டார் என சொல்லப்பட்டிருக்கிறது.

அந்த F52 பிரிவு தசைகளில் பாதிப்புடையவர்கள், மூட்டுகள் செயலிழந்தவர்களுக்கான பிரிவு. இதையெல்லாம் சரியாக பரிசோதித்துதான் வினோத் குமார் விளையாட அனுமதிக்கப்பட்டிருப்பார். ஆனால், இப்போது புகார் என்று வந்தவுடன் வினோத் குமாரின் வெற்றி பறிக்கப்பட்டுள்ளது.

இதில் வினோத்குமாரின் தவறு என ஒன்றுமில்லை. இந்திய பாராலிம்பிக் அமைப்பு சார்பிலோ இல்லை சர்வதேச பாராலிம்பிக்ஸ் அமைப்பு சார்பிலோ எங்கோ குழப்பம் நடந்திருக்கிறது. அதற்கு வினோத் குமார் இரையாக்கப்பட்டுவிட்டார்.

#Paralympics #Tokyo2020 #Cheer4India #Praise4Para

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.