கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள சாமுண்டி மலைப்பகுதியில், கடந்த 24-ம் தேதி கல்லூரி மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்குப் பிறகு தற்போது அபாய கட்டத்தைத் தாண்டியதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து நபர்களைக் கர்நாடக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை

வெளிமாநிலத்தைச் சேர்ந்த 23 வயதான மாணவி ஒருவர் மைசூரில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.பி.ஏ படித்து வருகிறார். கடந்த 24-ம் தேதியன்று அந்த மாணவி, தனது நண்பரோடு மைசூரில் உள்ள சாமுண்டி மலைக்கு தங்களின் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அங்குள்ள லலிதா திரிபுரா என்ற மலைப் பகுதிக்கு அவர்கள் சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத சிலர் அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

அவர்களை மிரட்டிய அந்த நபர்கள் குடிபோதையிலிருந்துள்ளனர். அந்தப் பெண்ணின் ஆண் நண்பரை அடித்துப் போட்டுவிட்டு, அந்தப் பெண்ணை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்ட அந்த ஆண் நண்பர், அந்தப் பெண்ணை அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளார். மிகவும் ஆபத்தான நிலையிலிருந்த அந்த பெண் தற்போது அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டார் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சிறுமிக்குப் பாலியல் தொல்லை

மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மைசூரு காவல்துறையினர் தனிப்படைகளை அமைத்து விசாரணையை மேற்கொண்டனர். சம்பவ இடத்தில் கிடைத்த பேருந்துப் பயணச்சீட்டு, காலி மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. குற்றம் நடைபெற்ற இடத்தில் அலைபேசி டவர் மூலம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சில விவரங்கள் காவல்துறையினருக்குக் கிடைத்தன. இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை காவல்துறையினர் உறுதிசெய்தனர்.

விசாரணையை விரிவுபடுத்தியதில், ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதி அருகே உள்ள சூசைபுரம் கிராமத்தைச் சேர்ந்த பூபதி (28) என்ற நபர் கர்நாடக தனிப்படை காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார். பூபதியிடம் நடத்திய விசாரணையில் மொத்தம் ஏழு பேர் இந்த குற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அவர் அளித்த தகவலின் அடிப்படையில் கடந்த 28-ம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் தலைமறைவாக இருந்த சூசையபுரத்தைச் சேர்ந்த ஜோசப்(28), லூர்துபுரம் கருவலங்காடு பகுதியைச் சேர்ந்த முருகேசன்(22), தண்ணீர்ப்பந்தல் செல்வ புரத்தைச் சேர்ந்த அரவிந்த்(21), சேவூர் வடுகபாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்து கர்நாடக அழைத்துச் சென்றனர்.

Also Read: ஐந்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை, வீடியோக்கள்! -குட்கா ரெய்டுக்குச் சென்றபோது சிக்கிய கடைக்காரர்

கைது செய்யப்பட்ட நபர்கள்

கைது செய்தவர்களிடம் நடத்திய விசாரணையில், இவர்கள் அனைவரும் கர்நாடக மாநிலத்தில் வேலை செய்யும் கூலித் தொழிலாளர்கள். வார இறுதி நாட்களில் மட்டும் சொந்த ஊருக்கு வருவார்கள். சம்பவம் நடைபெற்ற தினம், இவர்கள் அனைவரும் அந்தப் பகுதியில் மது அருந்தச் சென்றனர். அப்போது அங்கு வந்த அந்த மாணவி மற்றும் அவரின் நண்பரிடம் வழிமறித்து பணம் கேட்டுள்ளார்கள். அப்போது அந்த ஆண் நண்பரைத் தாக்கிவிட்டு அந்த பெண்ணை தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்கள்” என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களும் மைசூரு மூன்றாவது முதன்மை குற்றவியல் நீதிபதியின் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டனர். காவல்துறை தரப்பில் விசாரணை செய்ய அனுமதி கேட்கப்பட்டதை அடுத்து நீதிபதி அவர்களை 10 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து அந்த ஐவரையும் ரகசியமான இடத்தில் வைத்து காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள். கைது செய்யப்பட்ட ஐந்து பேரில் ஒருவர் ஏற்கெனவே கொலை வழக்கில் கைதாகி வெளியே வந்திருக்கிறார். மீதமுள்ளவர்களும் சந்தனமர கடத்தலில் கைதாகி வெளியே வந்தவர்கள் என்பதும். இவர்கள் அடிக்கடி குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

கைது

குற்றத்தில் ஈடுபட ஏழு நபர்களில், ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள இருவரைக் கைது செய்ய காவல்துறை விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. சமீபத்தில் அந்த இருவரில் ஒருவர் அந்த மாணவியின் வீட்டுக்கு போன் செய்து நான்கு லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். விரைவில் இந்த இருவரும் கைது செய்யப்படுவார்கள் என்று கர்நாடக டி.ஜி.பி பிரவீன் சூட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.