மாநில அரசுகள் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் போடும் வழக்குகளை ஆட்சி மாறினால் நீர்த்துப்போய்விடும். அப்படியான வழக்குகளைக் கூட அமலாக்கத்துறை கையிலெடுத்து பல ஆண்டுகளுக்குப் பிறகும் வழக்குப்பதிவு செய்யும் என்பதற்கு லேட்டஸ்ட் உதாரணம்தான் செந்தில் பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்குகள்.

செந்தில் பாலாஜி மீது, வேலை வாங்கித் தருவதாக ஒன்னரை கோடி ஏமாற்றியதாக வழக்குப்பதிவானது. 81 பேரிடமும் வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டதாக செந்தில் பாலாஜி தரப்பில் சொன்னதைக் கேட்டு, நீதிமன்றமும் வழக்கை முடித்துவைத்துவிட்டது. ஆனால், அமலாக்கத்துறை இதனை விடவில்லை. 2021 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் நடந்த ஐ.டி ரெய்டிலும் செந்தில் பாலாஜி தொடர்பான ஆவணங்கள் சிக்க, சுமார் 5 கோடி ரூபாய் பணம் கைமாறியதாக சட்டவிரோத பணப்பறிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி மீது வழக்குத் தொடர்ந்துள்ளது.

செந்தில் பாலாஜி

இதுகுறித்து ஆகஸ்ட் 22 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் கவர் ஸ்டோரி வெளியிடப்பட்டுள்ளது. இச்செய்தி தி.மு.க-வுக்குள் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது. செந்தில் பாலாஜியின் பதவி தப்புமா? என்ற விவாதமும் தொடங்கியுள்ளது. இந்த சூழலில், இன்னொரு தமிழக அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணன் மீதும் அமலாக்கத்துறை வழக்குத் தொடர்ந்துள்ளது. அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் அவருடைய குடும்பத்தை சேர்ந்த 6 பேர் என மொத்தம் 7 பேருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதில், ஆகஸ்ட் 26 -ம் தேதி முதல் செப்டம்பர் 1 -ம் வரை 7 நாட்கள் தனித்தனியாக விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

2001 – 2006 காலகட்டத்தில் அதிமுக தலைமையிலான அமைச்சரவையில் கால்நடை மற்றும் வீட்டு வசதி, நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் பதவி வகித்தபோது வருமானத்துக்கு அதிகமாக 4 கோடியே 90 லட்சம் ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்ததாக 2006-ம் ஆண்டு தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு தொடர்ந்திருந்தது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், “யார் மீது எந்த வழக்காக இருந்தாலும் அதுகுறித்த ஆவணங்களை நாங்கள் சேகரித்து வைத்துக்கொள்வோம். அதனை மொத்தமாகத் தொகுத்து அரசுக்கு அறிக்கையாக அனுப்பும்போது அதை ஒரு காப்பி எடுத்து மத்திய அரசின் சி.பி.ஐ., அமலாக்கத்துறைக்கு அனுப்பிவிடுவோம். அதனால்தான் அரசியல் மாற்றத்தால், ஆட்சி மாற்றத்தால் ஒருவர் மீதான வழக்கை மாநில அரசு ரத்து செய்தாலும், மத்திய அரசின் சி.பி.ஐ., அமலாக்கத்துறை கையிலெடுத்து விசாரிக்க முடிகிறது.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

செந்தில் பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன் மட்டுமல்ல, எடப்பாடி மீது முன்பு தி.மு.க கொடுத்த புகார்கள் என அத்தனை பேருடைய ஃபைலும் ஒரு காப்பி டெல்லிக்குச் சென்றுவிடும். இன்றில்லை என்றாலும், ஒருநாள் அது கழுத்தை நெரிக்கும். அனிதா ராதாகிருஷ்ணன் மீதும் அப்படித்தான் 2006-ம் ஆண்டு பதியப்பட்ட வழக்கை இப்போது அமலாக்கத்துறை கையில் எடுத்துள்ளது” என்றனர்.

எடப்பாடி -பன்னீர்- மோடி

தி.மு.க அமைச்சர்கள் டார்கெட் செய்கிறதா பா.ஜ.க அரசு? என அக்கட்சி சீனியர் ஒருவரிடம் பேசியபோது, “சில விஷயங்களில் தி.மு.க பேச்சை கேட்டு செயல்படுகிறது, சில விஷயங்களில் அப்படியே எதிர்மறையாக செயல்படுகிறது. ராஜ்யசபா தேர்தலை தனித்தனியாக நடத்திட வேண்டும் என தி.மு.க வைத்த கோரிக்கையை பா.ஜ.க அரசு ஏற்றுக்கொண்டதன் விளைவுதான் தேர்தல் ஆணையம் ஒரு சீட்டுக்கு மட்டும் தேர்தலை அறிவித்தது. எப்படி கடந்த ஆட்சியில் அமைச்சர்கள் செய்த ஊழல் குறித்த ஃபைலை நாங்கள் ஆளுநரிடம் கொடுத்தோமோ, அதுபோல அ.தி.மு.க-விலிருந்து தி.மு.க சென்று அமைச்சராகி, அ.தி.மு.க-வுக்கே எதிராகச் செயல்படும் அமைச்சர்கள் பற்றி அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்கள் டெல்லியில் ஃபைல் ஒன்றைக் கொடுத்திருக்கிறார்கள். தமிழ் பழமொழி வாயிலாகச் சொல்ல வேண்டுமென்றால், ஆடு உறவு, குட்டி பகை போன்றதுதான் இச்செயல். ஆம், தலைவர் ஸ்டாலினுடன் நல்ல தொடர்பை வைத்துக்கொள்ள விரும்பும் டெல்லி பா.ஜ.க., அமைச்சர்கள், நிர்வாகிகளிடம் கெடுபிடியாக நடந்து கொள்கிறது” என்றனர்.

Also Read: ராஜ்யசபா: தங்க.தமிழ்ச்செல்வன்… கார்த்திகேய சிவசேனாதிபதி… அப்துல்லா! -திமுக-வில் முந்துவது யார்?

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.