கேரள மாநிலத்தின் பாரம்பர்ய விழாவான ஓணப்பண்டிகை வரும் சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. ஓணப்பண்டிகையின் போது இரண்டு மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளி விட்டு, கைகளை கழுவி பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என மாநிக அரசு அறிவுறுத்தியுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆன்லைன் மூலம் ஓணப்பண்டிகை கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார். தமிழ்நாட்டின் பொங்கல் பண்டிகை போன்று கேரள மாநிலத்தில் ஓணப் பண்டிகைக்கு புத்தாடைகள் அணிந்து ஓண சத்யை எனப்படும் பலவகை கூட்டு, பொரியலுடன் மதிய உணவு உண்பதும், ஓண ஊஞ்சல் ஆடுவதும், மலர்களால் வீட்டு முற்றத்தில் அத்தப்பூ கோலம் போடுவதும் சிறப்பான நிகழ்வாகும்.
பாரம்பர்ய விழாவான ஓணப்பண்டிகையின் போதுதான் கேரளத்தில் அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுகிறது. மிக விமரிசையாக கொண்டாடும் ஒணப்பண்டிகையின்போது கவுன்சிலர்களுக்கு பணம் கொடுத்ததாக புகாரில் சிக்கியுள்ளார் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த நகராட்சி தலைவி ஒருவர்.

எர்ணாகுளம் மாவட்டம் திருக்காக்கர நகராட்சி கவுன்சிலர்களுக்கு ஓணக்கோடி (புத்தாடை) உடன் பத்தாயிரம் ரூபாய் வழங்கியதாக சர்ச்சையில் சிக்கியுள்ளார் நகராட்சி தலைவர் அஜிதா தங்கப்பன். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜிதா தங்கப்பன் தனது நகராட்சியில் உள்ள கவுன்சிலர்கள் 43 பேருக்கு ஓணக்கோடி கொடுத்ததுடன் அவர்களை தனது அறைக்கு அழைத்து தலா பத்தாயிரம் ரூபாய் பணம் அடங்கிய கவரை கொடுத்திருக்கிறார்.
எதிர்கட்சியைச் சேர்ந்த 18 கவுன்சிலர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பத்தாயிரம் ரூபாய் பணத்தை திருப்பி கொடுத்ததுடன் அதுகுறித்து விஜிலென்ஸ் விசாரணை வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். நகரசபையில் நடக்கும் முறைகேடுகள் மூலம் வந்த பணத்தை கவுன்சிலர்களுக்கு கொடுத்ததாக எதிர்கட்சி கவுன்சிலர்கள் புகார் கூறியுள்ளனர். அதுமட்டுமல்லாது நகராட்சி தலைவர் உள்ளிட்ட சிலர் தலா 25 லட்சம் ரூபாய் வரை ஓணப்பண்டிகைக்காக பெற்றிருக்கலாம் என்ற புகாரையும் எதிர்கட்சியினர் முன்வைத்துள்ளனர். அதுமட்டுமல்லாது சுகாதார பணியாளர்களுக்கு வழங்கிய புத்தாடை தரமற்றது எனக்கூறி பணியாளர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த நகராட்சி தலைவி அஜிதா தங்கப்பன், “இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரம் அற்றது. புதிய ஆட்சிமன்றத்தை கலைக்க எதிர்கட்சியினர் திட்டம் தீட்டுகின்றனர். அவ்வளவு பணம் கொடுக்கும் அளவுக்கு என்னிடம் தகுதி இல்லை. அவர்கள் இதுகுறித்து புகார் அளிக்கட்டும். உண்மை என்னவென்று விளக்க நான் தயார்” என்றார்.
ஓணப் பண்டிகைக்காக கவுன்சிலர்களுகு புத்தாடையுடன் தலா பத்தாயிரம் ரூபாய் வழங்கியதாக எழுந்துள்ள சர்ச்சை கேரளத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
Also Read: ஓணம் பண்டிகை – ஆகஸ்ட் 21