பத்து ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் எப்போதெல்லாம் சட்டப்பேரவை கூட்டப்பட்டதோ, எங்கெல்லாம் வாய்ப்பு கிடைத்ததோ அப்போதெல்லாம் தமிழ்நாட்டின் நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என தி.மு.க தொடர்ந்து கேட்டு வந்தது. தற்போது ஆட்சிக்கு வந்த மூன்றாவது மாதத்திலேயே தமிழ்நாட்டின் நிதி நிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டிருக்கிறார். வெள்ளை அறிக்கை என்பது அரசின் வரவு செலவுகள் குறித்து வெளியிடப்படும் வெளிப்படையான அறிக்கை. உள்ளாட்சி, பொதுப்பணி, மின்சாரம் போக்குவரத்து என ஒவ்வொரு துறை சார்ந்து தனித்தனியாகவோ, அனைத்துத்துறை சார்ந்து ஒட்டுமொத்தமாகவோ இந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். அதேபோல இந்த வெள்ளை அறிக்கை ஆண்டுக்கு ஒன்றோ ஒவ்வொரு ஆட்சிக் காலம் முடிந்த பின்போ வெளியிடப்படும். ஆனால், கடந்த 21 ஆண்டுகளாகப் பல காரணங்களுக்காக இந்த வெள்ளை அறிக்கையைத் தமிழ்நாடு அரசு வெளியிடாமல் இருந்தது. கடைசியாக வெளியான வெள்ளை அறிக்கை தி.மு.க ஆட்சிக்காலத்தில் நிதி நிலை குறித்து அப்போதைய அ.தி.மு.க அரசின் நிதி அமைச்சர் பொன்னையன் வெளியிட்டதுதான்.

பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

தனக்கு முன் ஆட்சியிலிருந்த அரசைக் குறை சொல்வதற்கும், எங்கள் அரசு இந்தத் திட்டங்கள் எல்லாம் மக்களுக்குச் செய்ய வேண்டும் என இருந்தது. ஆனால், மத்திய அரசு ஒத்துழைப்பு தரவில்லை என்பதால் அவற்றையெல்லாம் செய்யவில்லை என ஒரு திட்டம் செயல்படுத்த முடியாததற்கான காரணத்திற்கும் உண்மையிலேயே நிதி நிலைமை மோசமாக இருக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். தற்போது வெளியிடப்பட்டிருக்கும் வெள்ளை அறிக்கை என ரகம் என்பது குறித்து ஒரு பார்வை…

Also Read: Live Updates: தமிழக அரசின் வெள்ளை அறிக்கை: “அதிரடி மாற்றங்களுக்கு தமிழக அரசு தயார்!” – பி.டி.ஆர்

தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த வெள்ளை அறிக்கை பரப்பளவிலும், வளர்ச்சியிலும், நிதி நிலையிலும் தமிழ்நாட்டை ஒத்துள்ள கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் நிதி நிலைமை, சமூக நீதியில் தமிழ்நாட்டை ஒத்துள்ள கேரளாவின் நிதி நிலைமை, தமிழ்நாட்டைப் போலப் பெரிய மாநிலமாக இருந்தாலும் கல்வி, வேலை வாய்ப்பு, வசதி என எல்லாவற்றிலும் தமிழ்நாட்டைவிடப் பின்தங்கிய மாநிலமான உத்திரபிரதேசத்த்தின் நிதி நிலைமை ஆகியவற்றை ஒப்பிட்டு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இதற்கான தரவுகள் 2003-ஆம் ஆண்டிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன என்பதை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிக்கை வெளியிடுவதற்கு முன்பே விளக்கிவிட்டார். 2011-இல் தி.மு.க ஆட்சியிலிருந்து சென்றபோது தமிழ்நாடு உபரி வருமானம் உடைய மாநிலமாகத்தான் இருந்தது.

ஜெயலலிதா – கருணாநிதி

2011-இல் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி அமைத்தார். அதன்பின் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அதாவது 2013 வரை தமிழ்நாடு உபரி வருமானம் உடைய மாநிலமாகத்தான் இருந்தது. ஆனால், அதன்பின் தமிழ்நாட்டின் நிதி நிலைமை மிகவும் மோசமான நிலைமைக்குச் சென்றது. ஜெயலலிதா உடல்நிலை காரணமாக ஆட்சியில் கவனம் செலுத்தாததுதான் இதற்குக் காரணம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் 2017 – 19 வரை உபரி வருவாய் எட்டிய நிலையில் தமிழ்நாடு கிட்டத்தட்ட 1 லட்சம் கோடி வருவாய்ப் பற்றாக்குறையுடன் தவிக்கிறது. தற்போது தமிழ்நாட்டின் மொத்த பொதுக்கடன் 5,70,189 ஆக உயர்ந்திருக்கிறது. மேலும், மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் வாகனம், கனிமங்கள் உள்ளிட்டவை மூலம் அரசுக்கு வரும் வரி வருவாயும் குறைந்துள்ளது. மத்திய அரசின் நிதிக் கொள்கையால் ஏற்பட்ட 2577.29 கோடி இழப்பைக் கேட்டுப் பெறுவதற்காக அ.தி.மு.க அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தமிழ்நாடு அரசின் போக்குவரத்துக் கழகங்கள், மின்வாரியத்தின் ஒட்டு மொத்தக் கடன் 2 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. குடிநீர் வாரியத்தின் கடன் 5,282 கோடி. தமிழ்நாடு பெற்றுள்ள கடனுக்காகச் செலுத்தும் வட்டி ஒரு நாளுக்கு 115 கோடி பொதுத்துறை நிறுவனங்கள், பிற நிறுவனங்கள் பெற்ற கடனுக்காகச் செலுத்தும் வட்டித்தொகை 180 கோடி.

வெள்ளை அறிக்கை

ஒவ்வொரு குடிமகனும் ஓராண்டுக்குச் செலுத்தும் வட்டித்தொகை 7,700 ரூபாய். ஒவ்வொரு குடிமகனுக்கான மொத்தக் கடன் 1,10,000 ரூபாய். ஒரு குடும்பத்தின் மீது 2,63,976 கடன் சுமை இருக்கிறது’ என அ.தி.மு.க மக்கள் மீது மிகப்பெரிய சுமையை ஏற்றிவிட்டுச் சென்றிருக்கிறது என்பதை வெள்ளை அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

‘வெள்ளை அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது எல்லாம் மக்கள் தமிழ்நாட்டின் நிதி நிலைமையை அறிந்துகொள்வதற்காகத்தான். பிரச்னை இருக்கிறது என்பதை நேர்மையாக ஒப்புக்கொள்வதுதான் அதற்குத் தீர்வு காண்பதற்கான முதல் படி. கடந்த ஏழு ஆண்டுகளில் சரியான ஆளுமை அமையாததால்தான் நம்மீது இவ்வளவு கடன் சுமை ஏற்பட்டிருக்கிறது. இவை எல்லாம் சரி செய்யக் கூடிய பிரச்னைகள்தான். என்ன சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது அனைவருக்கும் அறிந்தது. மேலும், அறிஞர்களுடனும் கலந்தாலோசித்து பொருளாதார சீர்திருத்தங்களைச் செய்ய முயன்று வருகிறோம். தேர்தலில் நாங்கள் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளிலிருந்து தப்பித்துக் கொள்ள வெள்ளை அறிக்கையை நாங்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அ.தி.மு.க தமிழ்நாட்டை எந்தளவு சிக்கலில் மாட்டி விட்டிருக்கிறது. மக்கள் மீது எவ்வளவு கடன் சுமையை ஏற்றி வைத்திருக்கிறது என்பதை அறியச் செய்யவே இந்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருக்கிறோம். வாக்குறுதியிலிருந்து தி.மு.க எப்போதும் நழுவிச் சொல்லாது. மக்களுக்கு தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளையும் திருச்சி மாநாட்டில் குறிப்பிட்ட தொலைநோக்குத் திட்டங்களையும் நிச்சயம் நிறைவேற்றுவோம்’ எனவும் வெள்ளை அறிக்கை வெளியீட்டின் போது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியிருக்கிறார்.

சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்

அறிமுகத்தில் சொன்னதுபோல இந்த வெள்ளை அறிக்கை அ.தி.மு.க மீது மக்கள் மத்தியில் இருக்கும் இமேஜை சிதைக்கும் விதமாக இருக்கிறது. எனினும், `இது குற்றச்சாட்டு இல்லை தி.மு.க அரசின் வெளிப்படைத்தன்மையை நிரூபிக்கவே’ என்று அமைச்சர் பேசியதில் இருக்கும் உண்மை அடுத்தடுத்த அரசின் செயல்பாட்டில்தான் தெரியவரும். பொறுத்திருந்து பார்ப்போம்..!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.