நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் 1965-ம் ஆண்டு பிறந்தவர். கடந்த 1991-ம் ஆண்டில் தனது சட்டப்படிப்பை முடித்தார். அதே ஆண்டு தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்டார். மூத்த வழக்கறிஞர் கே.துரைசாமியின் கீழ் பணியாற்றிவந்த சுப்பிரமணியம் 1992-ம் ஆண்டு தனி அலுவலகம் அமைத்து பணிபுரிந்து வந்தார். வழக்கறிஞராக பணியாற்றியபோது பல்வேறு சட்டக் கிளைகளுடன் தொடர்புடைய பல வழக்குகளில் ஆஜராகியுள்ளார். மேலும் பல்வேறு அரசு அதிகாரிகள் சங்கங்களின் சார்பிலும் ஆஜராகியுள்ளார். 2016-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றுக்கொண்டார்.

உயர் நீதிமன்றம்

இவர் வழக்கறிஞராக இருந்த சமயத்தில், கடந்த 2004-ம் ஆண்டில் 2 லட்சம் அரசு ஊழியர்கள் சேவையிலிருந்து நீக்கப்பட்ட எஸ்மா மற்றும் டெஸ்மா வழக்கில் ஆஜராகியிருந்தார். 10,000 நெடுஞ்சாலைத் துறை சார்ந்த சாலைப் பணியாளர்கள் வேலையிலிருந்து நிறுத்தப்பட்ட வழக்கில் ஆஜராகியிருந்தார். உச்ச நீதிமன்றத்திலும் பல்வேறு வழக்குகளில் இவர் ஆஜராகி வாதாடி வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிபதியான பின்னர், இவர் எண்ணற்ற வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளார். அவர் முன் விசாரணைக்கு வந்த சில வழக்குகளில் அந்த வழக்கில் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் வழங்கிய தீர்ப்புகளும் பின்வருமாறு.

தி.மு.க அரசில் கட்டப்பட்ட புதிய தலைமைச்செயலகத்தில் முறைகேடு நடந்திருப்பதாக அன்றைய அ.தி.மு.க அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் ஆணையம் அமைத்தது. இந்த ஆணையத்திற்கு எதிராக தி.மு.க சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் கண்துடைப்பிற்காகவே இந்த விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார். மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதாக மிகவும் கடுமையாக விமர்சனம் செய்தார்.

நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம்

2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு அதிகாரி ஒருவர் மீது அதே துறையைச் சார்ந்த ஒரு பெண் காவலர் பாலியல் புகார் தெரிவித்து வழக்குத் தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மேற்கொண்டு தகவல்களை விசாரிக்க உத்தரவிட்டிருந்தார். அதோடு மட்டும் இல்லாமல், இதேபோன்ற பாலியல் புகார்கள் எழாமல் இருக்க காவல்துறை, நீதித்துறை போன்ற அரசு உயர் அதிகாரிகளின் அறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த பரிந்துரைத்தார். பரிந்துரைத்ததோடு மட்டுமல்லாமல் சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைந்திருக்கும் தனது அறையில் கண்காணிப்பு கேமரா பொருத்த நீதிமன்ற நிர்வாகத்திற்கு உத்தரவிட்டிருந்தார். உத்தரவிட்டு நீண்டநாட்கள் ஆகியும் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தது. இதுகுறித்து நீதிமன்ற பதிவாளரிடம் விளக்கம் கேட்டிருந்தார். அந்த வழக்கு மேல்முறையீட்டில் நிலுவையில் இருப்பதால் உத்தரவை அமல்படுத்தத் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று பதில் அளித்தார். இதனையடுத்து, தனது அறைக் கண்ணாடியிலிருந்த கருப்பு ஃப்லிம்களை அகற்றி, வெளியிலிருந்து பார்த்தால் தெரியும் வண்ணம் அமைக்க பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டார்.

கடந்த 2018-ம் ஆண்டு மாநகராட்சி சார்பில் நடைபெற்ற ஒரு வழக்கில், “சென்னை மாநகராட்சியில் லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடுகிறது. சென்னையில் விதிமீறல் கட்டடங்கள் தாராளமாகக் கட்டப்படுகிறது. சாலையோரங்களில் ஆக்கிரமிப்புகள் கண்மூடித்தனமாக நடைபெறுகின்றன. ஊழல் நடவடிக்கையில் ஈடுபடும் மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கச் சென்னை மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை இருக்கிறார்கள். இதுவரை அவர்கள் எந்த ஒரு உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ‘இவர்களும் குற்றவாளிகளுடன் கை கோர்த்துச் செயல்படுகின்றனரோ’ என்ற சந்தேகம் மக்களிடம் உள்ளது.

சென்னை மாநகராட்சி

எனவே, சென்னை மாநகராட்சியில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி முதல் காவலர்கள் வரை அனைவரையும் கூண்டோடு இடமாற்றம் செய்ய வேண்டும். தமிழக டி.ஜி.பி. நேர்மையான காவல்துறையினரை, மாநகராட்சி ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளாக நியமிக்க வேண்டும். அந்த அதிகாரிகள், சட்ட விரோதமான கட்டடங்களுக்கு ஒப்புதல் அளித்த மாநகராட்சி பொறியாளர்கள் மீது ஊழல் வழக்குபதிவு செய்து, அவர்களைக் கைது செய்ய வேண்டும். ஊழல் செய்த அதிகாரிகள் யாரையும் விட்டுவிடக்கூடாது. அவர்கள் அனைவர் மீதும் சட்டப்படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

காவல்துறை நடத்தை விதியில் பரிசுப் பொருட்கள், வெகுமதி, வரதட்சணை பெறுவது தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள காவல் துறை அதிகாரிகள் பூங்கொத்துகள், பரிசுப்பொருட்கள், வரதட்சணை பெறக்கூடாது என்பதை உறுதி செய்ய டி.ஜி.பி உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டிருந்தார்.

“நீதிமன்ற தீர்ப்பை மக்கள் விமர்சிக்கும் போது அதை ஏற்றுக்கொண்டால்தான் நீதித்துறை வளரும். வரும் விமர்சனங்களை ஆராய்ந்து திருத்திக்கொள்ள வேண்டும்!” – நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம்

சமீபத்தில் நடிகர் சூர்யா, “கொரோனா தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில்கூட மாணவர்கள் தேர்வு எழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்ப்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது. கொரோனா அச்சத்தால்‌ ‘வீடியோ கான்பிரன்ஸிங்‌’ மூலம்‌ நீதி வழங்குகிறது நீதிமன்றம்‌. ஆனால் மாணவர்களை அச்சமில்லாமல்‌ போய்‌ தேர்வு எழுத வேண்டியுள்ளது” என்று பேசியிருந்தார். இதற்கு எதிராக, இந்த கருத்தை நீதிமன்ற அவமதிப்பாகக் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி சுப்பிரமணியம், தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய், 2012-ல் தான் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கின் விசாரணை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ‘’சமூக நீதிக்குப் பாடுபடுவதாகச் சொல்லும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது. வரி என்பது நன்கொடையல்ல; கட்டாய பங்களிப்பு. நடிகர்களுக்கு வானத்திலிருந்து பணம் வரவில்லை. ஏழைமக்களிடம் இருந்துதான் அவர்களுக்குப் பணம் கிடைக்கிறது” என்றார். அதோடு, ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து இந்த தொகையை இரண்டு வாரங்களுக்குள் முதல்வரின் நிவாரண நிதியாகச் செலுத்திட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

விஜய் ரோல்ஸ் ராய்ஸ்

நடிகர் தனுஷ் கடந்த 2015-ம் ஆண்டு சொகுசு கார் ஒன்றை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்திருந்தார். இந்த காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்ட வழக்கும் சமீபத்தில் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. தனுஷ் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், ஏற்கெனவே வரித்தொகையில் பாதியைச் செலுத்திவிட்டதாகவும், மீதமுள்ள தொகையையும் செலுத்தத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், இந்த வழக்கை முடித்து வைக்குமாறும் கூறினார். இதற்கு நீதிபதி, “இத்தனை ஆண்டுகள் வழக்கு நிலுவையில் இருக்கிறது. அப்போதெல்லாம் வழக்கைத் திரும்பப்பெற வேண்டும் என்று முடிவு செய்யவில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் வழக்கை முடித்துக் கொள்ள நீங்கள் எந்த முன்னெடுப்பும் செய்யவில்லை. இந்த வழக்கை இழுத்தடிக்க நினைப்பதன் நோக்கம் என்ன?” என்றார். தொடர்ந்து “நீங்கள் எத்தனை கார் வேண்டுமென்றாலும் வாங்குங்கள். ஆனால் செலுத்த வேண்டிய தொகையை முழுமையாகச் செலுத்துங்கள்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.