தமிழ்த் திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. திரையரங்குகள் மூடப்படும் இந்த சூழலில் திரையரங்கை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இந்நிலையில் திரையரங்குகளின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்

கொரோனா பொதுமுடக்கத்தால் அனைத்து விதமான பொழுதுபோக்கு சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்ட நிலையில் திரையரங்குகளும் மூடப்பட்டன. தற்போது, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும், திரையரங்குகள் திறப்பது பற்றி இன்னும் எந்த அறிவிப்பும் வராமலேயே இருக்கிறது. இதனால் முடங்கிக் கிடந்த சினிமா ரசிகர்கள் தியேட்டருக்கு செல்ல முடியாத ஏக்கத்தை ஓடிடி மூலம் போக்க தொடங்கினர். எனவே முன்பிருந்த ஒடிடி எனப்படும் ‘ஓவர் தி டாப் மீடியா ப்ளாட்ஃஃபார்மை’ப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

image

கடந்த ஆண்டில் ‘பொன்மகள் வந்தாள்’, ‘நிசப்தம்’, ‘கணவர் பெயர் ரணசிங்கம்’, ‘சூரரைப் போற்று’, ‘மூக்குத்தி அம்மன்’ உள்ளிட்ட 24 தமிழ்ப் படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளிவந்துள்ளன. விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்தாலும், 50 சதவீத இருக்கைக் கட்டுப்பாடு காரணமாக வெளியான 15 நாட்களுக்குள்ளாகவே ஓடிடியிலும் வெளியானது.

இதே போல் ‘கர்ணன்’, ‘சுல்தான்’ ஆகிய திரைப்படங்களும் திரையரங்கில் வெளியான சில நாட்களிலேயே ஓடிடிக்கு வந்தன. இதற்கிடையே, கொரோனா இரண்டாம் அலை மீண்டும்வர தமிழ் சினிமா, ஓடிடி தளங்களை கெட்டியாக பிடித்துக்கொள்ள ஆரம்பித்தது. இதன் தொடர்ச்சியாக தனுஷ் நடிப்பில் உருவான ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம், நேரடி ஓடிடி வெளியீடாக 190 நாடுகளில், 17 மொழிகளில் வெளியானது. இப்போதைக்கு திரையரங்குகள் திறக்கப்படுவது சாத்தியமில்லாத ஒன்றாக பார்க்கப்படுவதால் நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’, விஜய் சேதுபதியின் ‘கடைசி விவசாயி’, என 6க்கும் மேற்பட்ட படங்கள் அடுத்தடுத்து ஓடிடியில் வெளிவர இருக்கின்றன.

image

அந்த வகையில் தற்போது ஞானவேல் இயக்கத்தில், தான் நடித்து வரும் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிட இருப்பதாக நடிகர் சூர்யா அறிவித்துள்ளார். இந்தப் படம் தற்போதுதான் எடுக்கப்பட்டே வருகிறது. இப்படி, தனது நடிப்பிலும், தயாரிப்பிலும் உருவாகும் நான்கு திரைப்படங்களை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளதாக சூர்யா அறிவித்துள்ளார். இதுபோக மணிரத்னம் தயாரித்துள்ள ‘நவராசா’ வெப் தொடரும் ஓடிடியிலேயே வெளிடயிடப்பட்டுள்ளது. இதனால் நாளுக்கு நாள் ஓடிடியில் தமிழ் சினிமாவின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன?

கொரோனா பரவல் குறைந்ததையடுத்து மாநிலங்கள் பல்வேறு தளர்வுகளை அளித்து வருகின்றன. அந்த வகையில் பல மாநிலங்கள் திரையரங்குகள் செயல்பட அனுமதி அளித்துள்ளன. டெல்லியில் ஜூலை இறுதியிலிருந்து திரையரங்குகள் திறக்கப்பட்டன.டெல்லியில் 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்கி வருகின்றன. மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஹரியானா, ராஜஸ்தான், கர்நாடகா மாநிலங்களிலும் திரையரங்குகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. தவிர, ஆந்திரா, தெலுங்கானாவில் திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், திறக்கப்பட்ட திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் 50% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்கி வருகின்றன.

image

தமிழ்நாடு திரையரங்க மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சங்கத்தைச் சேர்ந்த இளங்கோ கூறுகையில்,“ கொரோனா பெருந்தொற்றால் அனைத்து தொழில்களும் முடங்கி கிடக்கின்றன. குறிப்பாக திரையரங்க உரிமையாளர்கள், தொழிலாளர்களும் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். பேருந்து, ஜவுளி கடைகள் என அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. அதனால் திரையரங்குகளையும் திறக்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

நாங்கள் அனைத்து விதிமுறைகளையும் கடைபிடிக்க தயாராக இருக்கிறோம். திரையரங்கை திறப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மீட்கப்படும். மாற்று ஏற்பாடு இல்லாத காரணத்தால் ஓடிடியில் படங்கள் வெளியாகின்றதே தவிர, எல்லா படங்களும் ஓடிடியில் வெளிவரும் என்பது கிடையாது. ஆயிரம் தான் ஓடிடி இருந்தாலும், தியேட்டர்களில் பார்க்கும் அனுபவத்தை ஒருபோதும் ஓடிடியில் பெற முடியாது. ரசிகர்களும் அதைத்தான் விரும்புகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

image

திரைப்பட விமர்சகர் பிஸ்மி பேசுகையில், “ஓடிடியில் படம் பார்ப்பது பார்வையாளனுக்கு வசதியை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. ஓடிடி தளத்துக்கு மக்கள் பழக்கப்பட்டுவிட்டனர். அதேவேளையில், தியேட்டரில் படம் பார்ப்பது என்பது பேரலாதியான அனுபவம். அதை மறுப்பதற்கில்லை. இந்த கொரோனா சூழலில், படம் பார்த்து பழக்கப்பட்டவர்களுக்கு ஓடிடி வரப்பிரசாதமாக இருக்கிறது. விரைவில் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், கொரோனா பீதி, அச்சத்தை மீறி எத்தனை பேர் திரையரங்களுக்கு வருவார்கள் என்பது கேள்விக்குறிதான். குடும்பத்துடன் திரையரங்குக்கு வருவது சந்தேகம் தான்.

அவர்களை தியேட்டர்களுக்கு வரவைப்பதற்கான சூழலும் இங்கு இல்லை. அவர்கள் விரும்பும் நடிகர்களின் படங்கள் தியேட்டர்களில் மட்டும் தான் ரிலீஸாகும் என்ற நிலை இருந்தால் தான் அவர்கள் வருவார்கள். ஓடிடி இருப்பதால் பார்வையாளன் வீட்டை விட்டு வெளியே வரவேண்டிய அவசியம் எழவில்லை. தொடர்ந்து, ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு வாரமும் புதுப்படங்கள் ஓடிடிடியில் வெளிவர ஆரம்பித்தால் திரையரங்குக்கான பார்வையாளர்கள் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. தியேட்டர், பார்க்கிங் கட்டணம் இவற்றின் விலை ஏற்றமும் மற்றொரு காரணமாக அமையும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கும் ஓடிடி பயன்பாடு

ஓடிடி தளங்களை பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக புள்ளவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் பொதுமுடக்கத்தால் 1,049 திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால், திரையரங்க உரிமையாளர்களுக்கு ரூ.1,100 கோடி அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இதன்காரணமாக, 1,000க்கும் அதிகமான திரையரங்க ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது

அதேசமயம் ஸ்மார்ட் போன்கள் வாயிலாக ஓடிடி தளங்களில் திரைப்படங்களை பார்ப்பது அதிகரித்துள்ளது. ஆன்லைன் வீடியோ பயன்பாட்டில் உலக அளவில் இந்தியா 2ம் இடத்தில் உள்ளது. 2020 நிலவரப்படி இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 70 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேம்பட்ட ஸ்ட்ரீமிங் சேவைகள், சிறந்த சந்தா திட்டங்கள் ஓடிடின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்துள்ளன. குறிப்பாக 2021 ஆம் ஆண்டு ஓடிடி தளங்கள் மூலம் ரூ.11,250 கோடி வருவாய் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதே 2025ஆம் ஆண்டு ஓடிடி தளங்கள் மூலம் ரூ.30,000 கோடி வருவாய் கிடைக்கும் எனவும், 2030ம் ஆண்டு ரூ1,12,500 கோடி வருவாய் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.