கண்ணுக்கெட்டும் தூரம் வரை அகப்படும் தலைகளுக்கிடையில், சிறிய தீப்பொறியின் உந்துதலால் கிளம்பிய பட்டாசுத் திரி ஒன்று தெறித்து வெடிக்கிறது. உறிஞ்ச மறுத்து தன் மீது ஊற்றப்படும் பாலை உந்தித்தள்ளிக் கொண்டிருக்கிறது அந்த பேனர். மத்தள சத்தங்கள் காதைக் கிழிக்க, கால்கள் நடனமாட, எதையோ சாதித்துவிட்டதைப்போல டிக்கெட்டை ஏந்திக்கொண்டு நிற்கிறது ஒரு கூட்டம். அங்கு குழுமியிருக்கும் கூட்டம் உரைக்கும் ஒரேயொரு வார்த்தை… ‘தல’. அஜித் பட ரீலிஸின்போது, திரையரங்களில் நிகழும் காட்சிகள்தான் இவை. ’30 இயர்ஸ் ஆஃப் அஜித்திசம்’ என்பது எளிதில் நிகழ்ந்துவிட்ட ஒன்றல்ல!

திரைத்துறையில் 30-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி அஜித் வெளியிட்ட மெசேஜில், “ரசிகர்கள், வெறுப்பாளர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் ஆகிய மூவரும் நாணயத்தின் 3 பக்கங்கள். ரசிகர்களின் அன்பையும், வெறுப்பாளர்களிடமிருந்து வெறுப்பையும், நடுநிலையாளர்களின் விமர்சனங்களையும் நான் மனதார ஏற்றுக்கொள்கிறேன். வாழு… வாழ விடு! எப்பொழுதும் என் நிபந்தனையற்ற அன்பு அனைவருக்கும் உண்டு” என்று குறிப்பிட்டிருந்தார்.

image

90-ஸின் நாயகன்

காலம் மாயங்களை நிகழ்த்தும் மாயக்கண்ணாடி என்பதற்கு அஜித் கடந்து வந்த பாதையே எளிதான சான்று. ஹைதராபாத்தில் மே 1, 1971-ல் பிறந்த அஜித், சென்னை ஆசான் மெமோரியல் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். ஆந்திரா மெட்ரிக்கில் தனித்தேர்வராக 10-ம் வகுப்பு படித்தார். அதன் பிறகு, உயர் கல்வி படிக்காமல் இடை நின்றவர், வாழ்க்கைக் கல்வியில் வேகமாக ஓடத் தொடங்கினார். ஒரு எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் சூப்பர்வைசர் வேலை, பைக் – கார் மீது தீராக் காதல், ஈரோட்டில் டெக்ஸ்டைல் ப்ராசஸிங் பிசினஸ், மாடலிங் மற்றும் விளம்பரப் படங்களில் நடிப்பு என நீண்ட அந்தப் பயணம் சினிமாவில் ஐக்கியமாகவைத்தது.

விளம்பரப் படங்களில் நடித்துக்கொண்டே சினிமாவில் வாய்ப்புத் தேடி வந்த அஜித்துக்கு திரையில் தோன்ற கிடைத்த முதல் வாய்ப்பு 1990-ல் வந்தது. சுரேஷ் – நதியா நடித்த ‘என் வீடு… என் கணவர்’ என்ற திரைப்படத்தில், ஒரு பள்ளி மாணவராக தலைகாட்டியிருப்பார் அஜித். எதிர்கால ரெக்கார்டு பிரேக்கரை தன்னுள் வரவு வைத்துக்கொண்டது தமிழ் சினிமா. தொடர்ந்து 1993-ம் ஆண்டு ‘பிரேம புஸ்தகம்’ தெலுங்கு படத்தில் வாட்டசாட்டமான, ஹீரோவைக் கண்டது டோலிவுட்.

image

அப்போது, வேறொரு ஹீரோவை வைத்து ‘அமராவதி’ படத்தை இயக்கிக்கொண்டிருந்த செல்வா கைகளில் அஜித் புகைப்படங்கள் சென்று சேர, அதில் ஈர்க்கப்பட்டவர், உடனே ‘அமராவதி’க்கு அஜித்தை நாயகனாக்கினார். படத்தில் விக்ரமின் பின்னணி குரல், அஜித்துக்கு ஒத்துப்போயிருக்கும். பாலபாரதி இசையில் பாடல்கள் எல்லாமே ஹிட்டடித்தன. ஆனால், படம் எதிர்பார்த்த அளவு வெற்றியடையவில்லை. படத்தை பார்த்துவிட்டு ‘யார்ரா இது புதுசா இருக்கு’ என்று ரசிகர்களின் முணுமுணுக்கத் தொடங்கினர். தொடர்ந்து ‘பாசமலர்கள்’, ‘பவித்ரா’, ‘ராஜாவின் பார்வையிலே’ போன்ற படங்களில் நடித்தார். இந்த காலக்கட்டத்தில் டிவி சீரியல்களுக்கான வாய்ப்புகள் தேடி வர, அதை மறுத்து திரைத்துறைக்கே முக்கியத்துவம் கொடுத்தார் அஜித்.

ஆரம்ப காலத்தில் அஜித் நடித்த, வேஷ்டி விளம்பரம் ஒன்றைப் பார்த்து பிரமித்து போயிருந்தார் இயக்குநர் வசந்த். ‘நம்ம படத்துல கமிட் பண்ணிடனும்’ என்று நினைத்துக் கொண்டிருந்தவர் ‘ஆசை’ படம் மூலம் அதை நிறைவேற்றினார். அதுவரை அஜித்தின் படங்கள் பெரிய அளவில் வெற்றிபெற்றிருக்காத நிலையில், 1995-ம் ஆண்டு வெளியான ‘ஆசை’ எதிர்பார்த்த வெற்றியை கொடுத்தது. ‘ஆசை நாயகன் அஜித்’ பட்டமும் அவருக்கு தேடி வந்தது. துறுதுறு இளைஞன் ஜீவா கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் அஜித்.

image

ஆசை நாயகன் டூ ஆக்ஷன் ஹீரோ

‘காதல் கோட்டை’, ‘காதல் மன்னன்’ படங்கள் அஜித்தின் சினிமா கரியரில் முக்கியத்துவம் வாய்ந்த படங்களாக அமைந்தன. அஜித் ஆக்‌ஷன் ஹீரோவாக தன்னை பரிணமித்தது இந்த காலத்தில்தான். 1995-ல் இருந்து 2000-ம் ஆண்டுக்குள் ஏறக்குறைய 18 படங்களை நடித்து முடித்துவிட்டார் அஜித்.

‘முகவரி’, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘உன்னைக்கொடு என்னைத்தருவேன்’ படங்கள் ஃபேமிலி ஆடியன்ஸ்களை கவர, 2001-ல் வெளியான ‘தீனா’ படத்தின் மூலம் வேறொரு அஜித்தை ரசிகர்கள் கண்டனர். இளம் தலைமுறையினரை வெகுவாக கவர்ந்த படத்தில், லோக்கலான ரவுடி கேரக்டரில் நடித்து அசத்தியிருப்பார் அஜித். ‘நீ ஆடு தல’ என்று மகாநதி ஷங்கர் சொல்ல, அடுத்தடுத்த படங்களில் இறங்கி அடித்தார் அஜித். ‘தல’ என்பதை தாரகமந்திரமாக கொண்டாடித் தீர்த்தனர் அவரது ரசிகர்கள்.

உடைந்து போகாத உறுதி

‘மங்காத்தா’ படத்தில் செஸ் விளையாடிக்கொண்டே அடுத்து என்ன செய்யப்போகிறேன் என்று திட்டம் தீட்டிக்கொண்டிருப்பார் அஜித். தன் வாழ்க்கையை தானே செதுக்கிக்கொண்டவர். ஒருகட்டத்தில் அஜித் நடித்த படங்கள் தடுமாறின. தொடர் தோல்விகளை சந்தித்தன. 2002-ம் ஆண்டு வெளியான ‘வில்லன்’ படத்துக்குப் பின்னால் வந்த ‘ஆஞ்சநேயா’, ‘ஜனா’, ‘அட்டகாசம்’, ‘ஜி’, ‘பரமசிவம்’, ‘திருப்பதி’ படங்கள் தோல்விப் படங்களாக அமைந்தன.

துவண்டுபோகாமல் தன்னை மீளாய்வு செய்துகொண்டார். ‘நடனம் ஆடத் தெரியவில்லை’ என்ற விமர்சனங்களுக்கு ‘வரலாறு’ படத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைத்தார். முதுகுத் தண்டில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகளால் உடல் பருமன் அதிகரித்தது. பிட்னஸ் கேள்விக்குறியானபோது, ‘மங்காத்தா’, ‘பில்லா 2’ படங்களில் எடையை குறைத்தார். தொடர்ந்து, ‘என்னை அறிந்தால்’ ‘விஸ்வாசம்’ படத்தில் அன்பான தந்தையாக பேமிலி ஆடியன்சை கவர்ந்தார். அதேபோல ‘நேர்கொண்ட பார்வை’ படம் பெண்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதயங்களை வென்றவர்

நடிகன் என்பதற்காகவா அஜித் கொண்டாடப்படுகிறார் என்றால் நிச்சயம் இல்லை. அதையும் தாண்டிய ஆட்டிடியூட் தான் ரசிகர்களிடம் அவரை கொண்டுபோய் சேர்த்திருக்கிறது. தன்னுடைய ஆரம்ப கால படங்களின் மூலம் உதவி இயக்குநர்களாக இருந்தவர்களுக்கு பாதை அமைத்து கொடுத்தவர். கடனிலிருந்த இயக்குநர்கள் – தயாரிப்பாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டியவர்.

image

படைப்பாளிகளுக்கு முழு சுதந்திரம் கொடுப்பவர். உதாரணமாக, ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்துக்காக இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் சில மாற்றங்களை செய்தபோது, ‘நீங்க இப்படி செய்ய மாட்டீங்களே… உங்க ஒரிஜினல் ஸ்கிரிப்ட்லயே பண்ணுங்க’ என்று முழு சுதந்திரம் கொடுத்தவர். அதேபோல, ஒரு படம் தோல்வியடைந்தாலும், சம்பந்தப்பட்ட இயக்குநர் மீது நம்பிக்கை வைத்து அடுத்தடுத்து பட வாய்ப்பை கொடுக்கும் பேரன்பு, பலரையும் ஈர்க்க வைத்தது.

அஜித்தும் ரசிகர்களும்

அதேபோல, திரைக்கு வெளியே அவர் செய்த செயல்கள் அசாதாரணமானது. ரசிகர் மன்றங்களை கலைப்பது என்பது எந்த நடிகரும் எளிதில் செய்யத் துணியாத காரியம். ‘உன் குடும்பத்தை பாரு’ என்று ரசிகர்களுக்கான அட்வைஸ்கள் அஜித் மீதான மதிப்பைக் கூட்டியது. ‘எங்களுக்கு அரசியல் வேண்டாம்’ என அன்றைய முதல்வர் கருணாநிதி முன்னிலையில் பேசியது திரையுலகினரை திரும்பி பார்க்க வைத்தது.

இன்றைய தேதிக்கு அதிக அளவில் ரசிகர்களை கொண்டுள்ள நடிகர்களில் ஒருவர் அஜித். ‘வருடத்துக்கு இரண்டு படமே அதிசயம்’ என்று இருந்தாலும், அஜித்துக்கான ரசிகர் பட்டாளம் துளியும் குறைந்ததில்லை. எத்தனையோ தோல்விகளை கொடுத்து சினிமாவில் போராடிக்கொண்டிருந்த வேளையிலும் அஜித்தை அவர் ரசிகர்கள் கொஞ்சம் கூட விட்டுக்கொடுக்கவில்லை. படம் வெற்றியோ, தோல்வியோ திரையில் அஜித்தை பார்த்தாலே அவரது ரசிகர்களுக்கு திருவிழாதான்.

image

‘நான் நடிகன்; அது என் தொழில்’ என்பதன் மூலம் தன் ரசிகர்களுக்கு படத்தை பார்த்து கொண்டாடிவிட்டு குடும்பத்தை கவனியுங்கள் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார். ஒருவேளை அஜித் நடிப்பதை நிறுத்திவிட்டாலும் அவருக்கான ரசிகர்கள் கூட்டம் குறைய வாய்ப்பில்லை.

இந்த 30 ஆண்டுகளில் அவர் சாத்தியப்படுத்தியது ஏராளம். இழந்ததும் எக்கச்சக்கம். வலிகள், விமர்சனங்கள், அவமானங்கள், தோல்விகளைக் கடந்து திரைத்துறையில் 30வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் அணுகுமுறைகள் நிச்சயம் இன்ஸ்பிரேஷன்தான்… எப்படி?

யாரையும் சார்ந்திருக்காமல், தனியா கெத்தா நிற்கணும்; புரொஃபஷனல் வாழ்க்கையையும், ப்ரைவட் வாழ்க்கையையும் அதனதன் இடத்தில் பக்குவமாக வைத்துக் கையாளணும்; புகழ் எனும் போதைக்கு அடிமையாகமல் வாழப் பழகணும்; நாம் தீராக் காதலுடன் செய்யும் வேலைகளில் மிகத் தீவிரம் காட்டணும்; சொல்வது ஒண்ணு, செய்வது ஒண்ணு என இல்லாமல், போலித்தனமின்றி தன்னோட இயல்பில் இருந்து துளியும் விலகாமல் இருக்கணும், அஜித் போல.

– கலீலுல்லா

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.