தூத்துக்குடி மாவட்டத்தில் ’பொங்கல் பண்டிகை’க்கு அடுத்தபடியாக, கோயில் திருவிழாக்களை முன்னிட்டு மாட்டுவண்டிப் பந்தயங்கள் நடத்தப்படுவது வழக்கம். வல்லநாடு பகுதியிலுள்ள மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டிப் பந்தயம் நடத்தப்பட்டது. ’பெரிய மாட்டுவண்டி’, ‘சின்ன மாட்டுவண்டி’, ‘பூஞ்சிட்டு’ என மூன்று பிரிவுகளில் பந்தயம் நடைபெற்றது.

மாட்டுவண்டிப் பந்தயம்

இதில், தென் மாவட்டங்களில் திருநெல்வேலி, தென்காசி, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன. ’பெரிய மாட்டுவண்டி’ பிரிவில் 24 மாட்டுவண்டிகளும், ’சிறிய மாட்டுவண்டி’ 41 மாட்டு வண்டிகளும், பூஞ்சிட்டுப் பிரிவில் 45 மாட்டு வண்டிகளும் என, 110 மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாட்டுவண்டிகளுக்கு 15 கி.மீ தூரமும், சிறிய மாட்டுவண்டிகளுக்கு 9 கி.மீ தூரமும், பூஞ்சிட்டு மாட்டுவண்டிகளுக்கு 7 கி.மீ., தூரமும் பந்தயத்திற்கான ’தொடு’ எல்லைகளாக அறிவிக்கப்பட்டது.

பந்தயம் துவங்குவதற்கு முன்னதாக மாட்டு வண்டிக்காரர்கள், சாமி கும்பிட்டுவிட்டு காளைகளின் நெற்றியில் சந்தனம், குங்குமம் இட்டனர். அனைத்து மாட்டுவண்டியின் காளைகளுக்கும் கற்பூர ஆரத்தி காட்டப்பட்டது. ஊர்ப் பெரியவர், பச்சை துண்டை சுற்றிக்காட்ட பந்தயம் துவங்கியது. முதலில், பெரிய மாட்டுவண்டிப் பந்தயமும், இரண்டாவாதாக சின்ன மாடுவண்டிப் பந்தயமும், மூன்றாவதாக பூஞ்சிட்டு மாட்டுவண்டிப் பந்தயமும் நடைபெற்றது. பெரியமாட்டுவண்டிப் பந்தயத்தைத் தவிர, மற்ற இரு பிரிவு மாட்டுவண்டிப் பந்தயமும், மாட்டுவண்டிகளின் எண்ணிக்கை 40-ஐத் தாண்டியதால், இரண்டு சுற்றுகளாக நடத்தப்பட்டது.

மாட்டுவண்டிப் பந்தயம்

பந்தயத்தைப் பார்ப்பதற்காக சாலையின் இரு ஓரங்களிலும் மக்கள் கூடியிருந்தனர். பந்தயம் துவங்கியதும் சிறுவர்கள், இளைஞர்களின் விசில் சத்தம், கைத்தட்டலைக்கேட்டு காளைகள் சீறிப்பாய்ந்தன. பெரிய மாட்டுவண்டிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்பரிசாக, ரூ.25,000-ம், இரண்டாம் பரிசாக ரூ.20,000-ம், மூன்றாம் பரிசாக ரூ.15,000-ம் பரிசாக வழங்கப்பட்டது.

இதேபோல, சின்னமாட்டு வண்டிப் பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்பரிசாக ரூ. 15,000-ம், இரண்டாம் பரிசாக ரூ.12,000-ம், மூன்றாம் பரிசாக ரூ.10,000-ம், பூஞ்சிட்டு மாட்டுவண்டிப் பந்தயத்தில் முதல்பரிசாக ரூ.10,000-ம், இரண்டாம் பரிசாக ரூ.7,000-ம், மூன்றாம் பரிசாக ரூ.5,000-ம் வழங்கப்பட்டது. பந்தயக் காளைகளுக்கு அளிக்கப்படும் உணவு, பராமரிப்பு முறை குறித்து தூத்துக்குடியைச் சேர்ந்த ராமையாவிடம் பேசினோம்,

மாட்டுவண்டிப் பந்தயம்

“எங்கூரு, மாட்டு வண்டிப் பந்தயத்துக்கு சிறப்பு பெற்றது. கார்த்திகை, மார்கழி மாசத்துலேயே மாடுகளைப் பந்தயத்துக்காக தயார்படுத்துவோம். தினமும் காலையிலயும், மாலையிலயும் காளைகளைக் குளிப்பாட்டிட்டு கண்மாயில நீச்சல் பயிற்சி கொடுப்போம். பிண்ணாக்கு மட்டுமில்லாம, ’உளுந்துக் கரைசல்’, பேரீச்சம்பழம்’, ‘ நாட்டுக்கோழி முட்டை’ ஆகிய சத்தான உணவுகளை சாப்பிடக் கொடுப்போம்.

காளைகள் ஓடும்போது, கால் வலிமையா இருக்குறதுக்காக, ’ஆட்டுக்கால் சூப்’ கொடுக்கிறோம். தினமும் வண்டியில பூட்டி காளைகளுக்கு தீவிர ஓட்டப்பயிற்சியும் கொடுக்கிறோம். ஜல்லிக்கட்டு காளைக்கு இணையாக, இதுங்களையும், பக்குவமான பார்த்துக்குற உணவு முறையுலயும், கண்காணிப்புலயுதான், ’காளைங்க பந்தயக் குதிரைகளைப்போல சீறிப் பாயுதுங்க” என்றனர். மாட்டுவண்டிப் பந்தயத்தில் கலந்துகொண்ட திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த இசக்கிராஜனிடம் பேசினோம்,

மாட்டு வண்டிப் பந்தயம்

“கொரோனா முதலாவது அலைக்குப் பிறகு எந்த கோயில்லயும் திருவிழாக்களே நடக்கலை. திருவிழாவே நடக்காம, எப்படி மாட்டிவண்டிப் பந்தயத்தை நடத்துவாங்கன்னு யோசிச்சிக்கிட்டிருந்தோம். ஆனா, ஒன்றரை வருசத்துக்குப் பிறகு, இந்த மாட்டுவண்டிப் போட்டி நடத்தினதைப் பெருசாப் பாக்குறோம். பொதுவா காளைகளை ’ஜல்லிக்கட்டு’ப் போட்டிக்காக மட்டும் பயிற்சி கொடுப்பதைப் போல, மாட்டுவண்டிப் பந்தயத்திற்காக மட்டும் பயிற்சி கொடுத்துட்டு இருக்கோம். இதுங்க வெறும் காளைகள் இல்ல. எங்க குலசாமிங்க” என்றார்.

Also Read: மெட்ராஸ் வரலாறு: சென்னையில் தமிழக அரசு நடத்திய ஜல்லிக்கட்டு பற்றி தெரியுமா? – பகுதி 6

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.