“சினிமாக்களில்கூட என் வாழ்க்கையில் நடந்ததைப்போல் ஒரு நிகழ்வைப் பார்ப்பது அரிது!” – ஒரு பேட்டியில் இவ்வாறு பீடிகையுடன் இன்ட்ரோ கொடுத்த நடிகை ஜெயந்தி, மனம்விட்டு சிரித்தபடியே உரையாடலைத் தொடர்ந்தார்.

நடிகை ஜெயந்தி

ஜெயந்திக்குப் பூர்வீகம் ஆந்திரா. நாட்டியம் பயில்வதற்காக, தனது 15 வயதில், காளஹஸ்தியிலிருந்து தாயுடன் சென்னைக்கு வந்தார். ஒருநாள் எதேச்சையாக வாகினி ஸ்டூடியோவுக்குச் சென்றவர், தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பைப் பார்த்துக்கொண்டிருந்தார். படக்குழுவைச் சேர்ந்த ஒருவர், “நீ இந்தப் படத்துல நடிக்குறியா?” என்று ஜெயந்தியிடம் கேட்க, அவருக்கோ பெரும் திகைப்பு.

நடிக்க விருப்பமில்லை என்று அவர் எவ்வளவோ மறுத்தும், விடாப்பிடியாகச் சம்மதிக்க வைத்து, அந்தப் படத்தில் சிறு வேடத்தில் ஜெயந்தியை நடிக்க வைத்தனர். மறுநாளே மற்றொரு தெலுங்குப் பட வாய்ப்பு ஜெயந்தியைத் தேடிவந்தது. அந்த வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்த அப்போதைய பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் சிவராம், ஜெயந்தியை இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்துகொண்டார்.

இளம் வயதில் ஜெயந்தி

பீடிகையுடன் தொடங்கிய அதே பேட்டியில், தனது மண வாழ்க்கை குறித்து நெகிழ்ச்சியாகக் கூறிய ஜெயந்தி, “எங்களுக்குக் கல்யாணமாகி, ஒரு வருஷம் கழிச்சு தன்னுடைய வீட்டுக்குக் கணவர் என்னைக் கூட்டிட்டுப் போனார். கொஞ்சம் பயம் கலந்த உணர்வுடன் போனேன். ஆனா, கணவரின் முதல் மனைவி பிரபாவதி அக்கா, என்னை அணைத்தவாறு உள்ளே அழைச்சுகிட்டுப் போனாங்க. பிறகு, கணவருடன் நாங்க இருவரும் ஒரே வீட்டுல ஒற்றுமையா வாழ்ந்தோம். அக்கா பிரபாவதியின் தியாகப் பண்பை என்றும் மறவேன். சினிமாவுல மட்டுமல்ல… என் வாழ்க்கையும் `இரு கோடுகள்’ கதைதான்!” என்று கூறியிருந்தார்.

1960-களில் கன்னடம் மற்றும் தெலுங்கில் புகழ்பெற்ற நடிகையான ஜெயந்தி, `நீர்க்குமிழி’, `எதிர் நீச்சல்’ உள்ளிட்ட பல்வேறு தமிழ்ப் படங்களில் நடித்திருந்தார். ஆனால், இரண்டு மனைவிகள் கதையான `இரு கோடுகள்’ படம்தான் தமிழ் சினிமாவிலும் அவரை முன்னணி நடிகையாக உயர்த்தியது. திருமணத்துக்குப் பிறகும் ஹீரோயினாகவே நடிகைகள் கலக்குவது அந்தக் காலத்தில் இயல்பான விஷயம்தான். தாயான பிறகும் நாயகியாவே நடித்தார். தேசிய விருது, பல்வேறு மாநில அரசுகளின் விருதுகளை வென்றவர், பல்வேறு மொழிகளிலும் 40 ஆண்டுகளுக்கும் மேல் நடித்தார். உடல்நிலை சரியில்லாமல், பெங்களூருவில் மகன் வீட்டில் ஓய்வில் இருந்த ஜெயந்தியின் மறைவுச் செய்தி, திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

‘இரு கோடுகள்’ படத்தில்…

ஜெயந்தியின் நினைவுகள் குறித்து, அவரது திரையுலகத் தோழிகளில் ஒருவரான நடிகை விஜயகுமாரியிடம் பேசினோம். “எனக்குப் பிறகுதான் ஜெயந்தி சினிமாத்துறைக்கு வந்திருக்கணும்னு நினைக்கிறேன். தமிழ் சினிமாவுலதான் நான் அதிகம் நடிச்சேன். கன்னடத்துல ரொம்பவே பிரபலமா இருந்த ஜெயந்தி, ஒரே நேரத்துல பல மொழிகளிலும் நடிச்சாங்க. அப்போ குணச்சித்திர நடிகையா இருந்த எம்.வி.ராஜம்மா வீட்டுக்கு நானும், வி.என்.ஜானகி அண்ணியும் (எம்.ஜி.ஆர் மனைவி) அடிக்கடி போவோம். அந்த நேரத்துல ஜெயந்தியும் ராஜம்மாவைப் பார்க்க அங்கு வருவாங்க. அப்படித்தான் ஜெயந்திக்கும் எனக்குமான நட்பு வளர்ந்துச்சு.

ஜெமினி, ஏ.வி.எம், வாகினினு ஷூட்டிங் நடக்கும் ஸ்டூடியோவுல, பக்கத்துக்குப் பக்கத்து அரங்கத்துலதான் நாங்க நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு நடக்கும். மதிய உணவுக்கு, பெரும்பாலும் அவங்கவங்க வீட்டுக்குப் போயிடுவோம். அந்த லஞ்ச் டைம்லதான் நாங்க அடிக்கடி சந்திச்சுப் பேசுவோம். எங்க காலத்து நடிகைகள் பலருடனும் நான் இணைஞ்சு நடிச்சிருக்கேன். ஆனா, ஜெயந்திகூட மட்டும் ஒரு படத்துலகூட சேர்ந்து நடிக்கல. அந்த வாய்ப்பு `இரு கோடுகள்’ படத்துல அமைய இருந்துச்சு. அந்தப் பட வாய்ப்பை ஏத்துகிட்டு, நடிக்குறதா கே.பாலசந்தர் சார்கிட்ட சம்மதம் சொல்லிட்டேன். ஆனா, சில காரணங்களால நான் நடிக்க இருந்த ரோல்ல செளகார் ஜானகி அக்கா நடிச்சாங்க.

ஜெயந்தி

Also Read: `சாவித்ரி பயோபிக்குக்கு நடந்தது எனக்கும் நடந்துடக்கூடாது!’ – கொதிக்கும் நடிகை ஜமுனா

கே.பாலசந்தரின் பல படங்கள்ல வித்தியாசமான ரோல்கள்ல சிறப்பா நடிச்ச ஜெயந்தி, முன்னணி நடிகையா உயர்ந்ததுடன், திறமையான நடிகையா பெயர் பெற்றாங்க. நாங்க இருவரும் தி.நகரில் வசிச்சப்போ, அடிக்கடி கோயில்ல சந்திப்போம். என் வீட்டுக்கும் பல முறை வந்திருக்காங்க. சினிமா விஷயங்கள் பத்தி மணிக்கணக்கா பேசியிருக்கோம். ஜெயந்தியின் குரல் மென்மையா இருக்கும். அதை சிறப்பம்சமா எங்க காலத்துல பேசுவாங்க. சினிமாவில் ஹோம்லியான ரோல்ல அதிகம் நடிச்சவங்க, மாடர்ன் டிரஸ் உடுத்த ஆசைப்படுவாங்க. தான் உண்டு தன் வேலை உண்டுனு, சினிமா, வீடுனு அமைதியா இருப்பாங்க.

என்னோட க்ளோஸ் ஃபிரெண்டு சரோஜா தேவிகிட்ட அடிக்கடி போன்ல பேசும்போதெல்லாம், ஜெயந்தியைப் பத்தி தவறாம நலம் விசாரிப்பேன். `ஜெயந்தியை அவரின் மகன் நல்லா பார்த்துக்கிறார்’னு சரோஜா என்கிட்ட பெருமையா சொல்லுவாங்க. போன வருஷம் சரோஜாதேவி வீட்டுக்கு ஜெயந்தி போயிருந்தப்போ, அவங்ககிட்ட போன்ல மனம்விட்டுப் பேசினேன். கடந்த சில வருஷங்களாவே ஜெயந்திக்கு உடல்நிலை சரியில்லைனு கேள்விப்பட்டேன். சிரமம் பார்க்காம, வீல்சேர்ல இருந்தபடியேகூட முக்கியமான சில நிகழ்ச்சிகளுக்கு மட்டும் போயிட்டு வந்தாங்க. கடந்த ஒரு வருஷமாவே ஆஸ்துமா பாதிப்பால அவதிப்பட்டு வந்தவங்க, வீட்டுலயே இருந்திருக்காங்க.

நடிகை விஜயகுமாரி

Also Read: `முடக்கிய விபத்து, விஜய்யின் அன்பு, குடும்பத்தினரின் பாசம்!’ – மகன் குறித்து கமீலா நாசர்

சமீப காலமா சரோஜா தேவிகிட்ட பேசும்போது, `நம்ம காலத்து கலைஞர்கள் அடுத்தடுத்து நம்மள விட்டுப் போயிட்டு இருக்காங்க. ரொம்ப வருத்தமா இருக்கு விஜயா!”னு ஆதங்கத்துடன் சொல்லுவாங்க. இப்போ இன்னொரு நண்பரை இழந்துட்டோம். காலத்துக்கும் நிலைச்சு நிக்குற மாதிரியான நல்ல படங்கள் பலவற்றிலும் ஜெயந்தி நடிச்சிருக்காங்க. அவங்க மறைவு மனசுக்குள்ள பெரிய வெறுமையை ஏற்படுத்தியிருக்கு. ஜெயந்தியின் ஆன்மா சாந்தியடையணும்” என்பவர் குரல் தழுதழுக்க முடித்தார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.