நெட்டிசன்களின் ‘சார்பட்டா’ ஃபேவரைட் ‘டான்சிங் ரோஸ்’… யார் இந்த ஷபீர்?!

பா.ரஞ்சித் இயக்கத்தில் அமேசான் பிரைமில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்தப் படத்தில் கபிலன், ரங்கன் வாத்தியார் போன்ற ஏரளமான கதாபாத்திரங்கள் இருந்தாலும் ‘டான்சிங் ரோஸ்’ கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. இதனால் ‘டான்சிங் ரோஸ்’ பற்றிய பதிவுகள்தான் நேற்றிலிருந்து தமிழ் நெட்டிசன்கள் மத்தியில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

‘டான்சிங் ரோஸ்’ கதாபாத்திரமானது, இடைவெளி பைட் சீனை தவிர்த்து இந்தப் படத்தில் மொத்தமாக ஒரு சில சீன்களே வரும். மேலும் அந்த கதாபாத்திரத்துக்கான வசனங்களோ பத்து வார்த்தையை தாண்டியிருக்காது. ஆனால், அவருடைய பாடிலாங்குவேஜ், மேனரிசம், தோற்றம் போன்றவையாவும் ரசிகர்களை பெரிய அளவில் ஈர்த்துள்ளது. இதனால் ட்விட்டரில் ரஞ்சித்தை டேக் செய்த நெட்டிசன்கள், ‘டான்சிங் ரோஸை மட்டும் வைத்து தனியா ஒரு படம் பண்ணுங்க’ என வற்புறுத்தி வருகின்றனர்.

image

யார் இந்த டான்சிங் ரோஸ்?

‘டான்சிங் ரோஸ் கிட்ட இருக்குற கால் பலம், மெட்ராஸ்ல யார்கிட்டயும் இல்ல’ என ரங்கன் வாத்தியார் சொல்லி முடிக்கும் காட்சியில் ஸ்கீரின் பிரசன்ஸில் தெறிக்கவிட்டிருப்பார் ஷபீர் கல்லரக்கல். ஆம், ஷபீர்தான் டான்சிங் ரோஸாக நம்மை ஆச்சரியப்படுதியிருக்கும் வித்தைக்காரர். ஷபீர் கேரளாவை பூர்விகமாக கொண்டவர். நாடகக் கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய ஷபீர் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான ‘நெருங்கி வா முத்தமிடாதே’ படம் மூலமாக தமிழ்த் திரையுலக ரசிகர்களுக்கு அறிமுகமானார். அந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

image

அதைத்தொடர்ந்து கார்த்தி, விஷால் மற்றும் சயீஷா நடிப்பில் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ என்ற அதிரடி படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க 2017-ஆம் ஆண்டில் ஷபீர் ஒப்பந்தமானார். அதேபோல 2018-ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘அடங்க மறு’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் ஷபீர் நடித்திருப்பார். பின்னர், 2019-ம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படத்தில் பல சுற்று ஆடிஷன்களை கடந்து தேர்வானார். அதன்பயனாக விஜய் சேதுபதி மற்றும் நவாசுதீன் சித்திக்குடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றார். ஆனால், மேற்கண்ட படங்களில் பார்ப்பதற்கு கொஞ்சம் வயதானவர் போல் தெரிந்தவர், ‘சார்பட்டா’வில் மொத்தமாக உடல் எடையை குறைத்து, அசல் பாக்சிங் வீரராக நடித்து ரசிகர்களின் ஃபேவரைட்டாக மாறியிருக்கிறார்.

‘சார்பட்டா’வில் ஷபீர் கமிட்டானதே ஒரு சுவாரஸ்யம்தான். ‘அடங்க மறு’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது, உதவி இயக்குநர் ஒருவரின் மூலமாக ‘சார்பாட்டா’வில் டான்சிங் ரோஸாக நடிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் ஷபீர். ஆனால், வேறொரு படத்தில் கமிட்டானதால் ‘சார்பட்டா’வில் நடிப்பதை முதலில் மறுத்துள்ளார். பிறகு, பா.ரஞ்சித் அழைப்பின் பேரில் ஆடிஷனுக்கு சென்று மேக்கப் டெஸ்ட் ஓகே ஆன பின்பு, டான்சிங் ரோஸ் கேரக்டரை குறித்து அறிந்து விருப்பப்பட்டு அந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.

image

எது எப்படியிருந்தாலும் ரசிகர்கள் மனதில் ஒரு குறையை மட்டும் வைத்துவிட்டார் பா.ரஞ்சித். ‘ரெண்டே ரவுண்டுல உன்ன முடிக்கிறேன்’ என்று கபிலன் பேசிய வசனத்தால், டான்சிங் ரோஸை சில காட்சிகளில் மட்டுமே பார்க்கவேண்டியதாயிற்று என ஆதங்கப்படுகிறார்கள் நெட்டிசன்கள்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM