சொட்டு மருந்து போல் மூக்கு வழியாக செலுத்தக்கூடிய கோவிட் தடுப்பு மருந்து சோதனை வெற்றிகரமாக நடந்து வருவதாக புதிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று மாநிலங்களவையில் தெரிவித்தார். பாரத் பயோடெக் நிறுவனம் இந்தத் தடுப்பு மருந்தை தயாரித்து தற்போது சோதனைகள் நடத்திக் கொண்டிருக்கிறது. இந்தத் தடுப்பு மருந்து இறுதி ஒப்புதல்களை பெற்றபின் தடுப்பூசிக்கு மாற்றாக பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 வயதுக்கு குறைவானவர்களுக்கு பயன்படுத்தக்கூடிய கொரோனா தடுப்பூசி சோதனைகளும் வெற்றிகரமாக நடந்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மாண்டவியா மாநிலங்களவையில் தெரிவித்தார். எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கத்தால் காலை முழுவதும் முடங்கிய மாநிலங்களவையில், மாலையில் கொரோனா பெருந்தொற்று தொடர்பான விவாதம் நடைபெற்றது.

image

அப்போது எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளித்த மாண்டவியா, விரைவில் 18 வயதுக்கு குறைந்தவர்களுக்கான தடுப்பூசி சோதனைகள் வெற்றிகரமாக முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

பின் “நமது நாட்டு விஞ்ஞானிகள் மற்றும் நிறுவனங்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. கடந்த 24 நாட்களில் 10 கோடி தடுப்பூசிகள் நம் நாட்டில் செலுத்தப்பட்டுள்ளன. உலகிலேயே அதிக தடுப்பூசிகளை உற்பத்தி செய்து, அதை மக்களுக்கு இலவசமாக அளித்து இந்தியா சாதனை புரிந்துள்ளது” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார் அவர்.

image

கோவிட் 3-ஆம் அலையை சமாளிக்க தேவையான முன்னேற்பாடுகள் தற்போது நடந்து வருகின்றன என்றும், ஆனால் மூன்றாம் அலை உருவாகாமல் தடுப்பது நம் அனைவருடைய கடமை என்றும் மாண்டவியா மாநிலங்களவையில் பேசினார்.

கோவிட் விவகாரத்தை அரசியல் ஆக்கக்கூடாது என பிரதமர் மோடி அறிவுறுத்தி வருகிறார் என குறிப்பிட் அவர், பின் “பிரதமர் எந்த நிலையிலும் ‘நான் தான் அனைத்தையும் செய்கிறேன்’ என குறிப்பிட்டதில்லை, அனைவரும் இணைந்து கொரோனவை எதிர்கொள்ளலாம் என மட்டுமே குறிப்பிட்டு வருகிறார்.

image

தடுப்பூசி தொடர்பான திட்டங்களை அமல்படுத்த வேண்டியது மாநிலங்களுடைய கடமை, அதை சில மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டன. ஒரு சில மாநிலங்கள் செயல்பாடு போதுமானதாக இல்லை. ஆனால் இவற்றையெல்லாம் அரசியலாக்க விரும்பவில்லை.

மாநில முதல்வர்களுடன் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தி, பிரதமர் மோடி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தடுப்பூசி தயாரிக்க இந்திய அரசு விஞ்ஞானிகளுடன் ஆலோசனை நடத்தி குழு அமைத்து, பணிகளை தொடங்கியது. அதேசமயத்தில் பாரத் பயோடெக் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி பணிகளை முடித்துவிட்டதால்தான் தற்போது தடுப்பூசி தயாரிக்கும் நம் நாட்டிலேயே நடைபெறுகிறது.

image

இந்தியாவின் ஜனத் தொகைக்கு ஏற்ற வகையிலே அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி தேவை என்பதால் நாம் இறக்குமதியை நம்பியிருக்க முடியாது. கொரோனா தடுப்பூசிகள் வழங்க இந்தியாவுக்கு பல வெளிநாட்டு நிறுவனங்கள் தயாராக உள்ளன. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் அதிக்கப்படியான தடுப்பூசிகள் கொண்டுவரப்படும்” என்றார் மாண்டவியா.

– கணபதி சுப்பிரமணியம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.