நடிகர் மாதவன் கொரோனா காலத்தில் இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் இந்தி சினிமாவைத் தாண்டி மற்ற மொழி சினிமா படைப்புகள் ஏற்படுத்தி வரும் தாக்கம் குறித்தும், ஓடிடி விளைவுகள் பற்றியும் விரிவாகப் பேசியிருக்கிறார்.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து தயாராகி வரும் ‘ராக்கெட்டரி: நம்பி விளைவு’ படத்தை முதல் முறையாக இயக்கி நடித்து வருகிறார் மாதவன். இந்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ், ஆங்கிலம் மற்றும் கன்னட மொழிகளில் இந்தப் படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. 

இந்த நிலையில் ஆங்கில சேனல் ஒன்றுக்கு நடிகர் மாதவன் அளித்த பேட்டியில், இந்தி மொழி சினிமா தவிர்த்து மற்ற மொழி சினிமா படைப்புகள் இந்திய அளவில் பெற்றுவரும் வரவேற்பு குறித்து பேசியிருக்கிறார். 

“ரசிகர்கள் தங்களது தாய்மொழியுடன் மற்ற மொழி திரைப்படங்களை ரசிக்கத் தொடங்கியுள்ளார்கள். ரசிகர்கள் கொடுக்கும் பணத்துக்கு நியாயம் செய்யும் வகையில் சிறந்த நடிகர்கள், சிறந்த கதையம்சங்கள் கொண்டு மற்ற மொழி சினிமா வெளியாகி வருவதால் இந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. 

கொரோனாவுக்கு பிந்தைய நிகழ்வுகள் சினிமாவை அடுத்த நிலைக்கு மாற்றியுள்ளன. இதனால், மற்ற மொழி திரைப்படங்களை ஏற்றுக்கொள்ளும் எண்ணம் உலகம் முழுவதும் காணப்படுகிறது. இந்த வரவேற்பின் காரணமாக மாநில மொழி திரைப்படங்கள் இப்போது ‘பான் – இந்தியா’ (Pan India) சினிமாவாக மாறி வருகின்றன. என்னைப் பொறுத்தவரை, இது மற்ற மொழி திரைப்படங்களுக்கான புதிய தொடக்கமாகும்.

நான் நீண்ட காலமாக திரைத்துறையில், ஓடிடி தளத்தின் பங்கு பற்றி ஆராய்ந்து வருகிறேன். ஓடிடி தளத்தை பொறுத்தவரை நான் ரசிப்பது, அவை சுயாதீனப் படங்களுக்கான வாசலாக அமைந்துள்ளதைத்தான். இதன்மூலம் நிறைய திறமையாளர்கள், புதுவிதமான கதை சொல்லல் பாணியுடன் வருகிறார்கள். ஓடிடி மூலம் இளம் திறமைகளை ஊக்குவிக்கவும், நல்ல கதைகளை மக்களுக்கு சொல்லவும் முடிகிறது என்பதைதான் ஒரு கலைஞனாக நான் பாராட்டுகிறேன். 

சினிமா ரசிகர்கள் தற்போது புதிய அனுபவங்களை நோக்கி நகர்ந்து வருவதால், ஒரு கலைஞனாக என்னுடைய கதையை புதுவிதமாக ரசிகர்களுக்கு சொல்ல வேண்டியது அவசியம். எனவே, இதுபோன்ற புதுத் தளங்கள் வரவேற்கதக்கது. கதைசொல்லல் என்ற அம்சத்தை தாண்டி பொழுதுபோக்கு துறையின் எதிர்காலம் இதுதான் என்று நான் நினைக்கிறேன்” என்று பகிர்ந்துள்ளார் நடிகர் மாதவன்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.