கடந்த மாதம் 21-ம் கவர்னர் உரையுடன் துவங்கிய தமிழக 16-வது சட்டசபையின் கூட்டத்தொடரில் வெளியான ‘முதல்வருக்கான பொருளாதார ஆலோசனை குழு’ குறித்த அறிவிப்பு தற்போது வரையிலும் ஹாட் டாபிக்காகவே இருந்து கொண்டிருக்கிறது. ரகுராம் ராஜன், எஸ்தர் டஃப்ளோ, அரவிந்த் சுப்ரமணியன், ஜீன் ட்ரெஸ், மற்றும் நாராயணன் உள்ளிட்ட தலைசிறந்த பொருளாதார நிபுணர்கள் அந்த குழுவில் நியமிக்கப்பட்டிருந்தது அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்திருந்தது. பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள தமிழகத்தை மேம்படுத்தி மீட்டெடுக்க இந்த குழு சிறப்பாக செயல்படும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ‘முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு’க் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. அதில், அக்குழுவின் உறுப்பினர்கள் எஸ்தர் டஃப்லோ, ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியன், ஜீன் டிரீஸ், திரு.எஸ்.நாராயண், தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ். கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் தமிழகத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்துவது தொடர்பாகக் குழு நிபுணர்கள் அனைவரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர்.

ஸ்டாலினின் பொருளாதார ஆலோசனைக் குழு

இந்நிலையில், தமிழக அரசு ‘முதல்வருக்கான பொருளாதார ஆலோசனை குழுக் கூட்டம்’ தொடர்பாகச் செய்திக் குறிப்பினை வெளியிட்டிருக்கிறது. அதில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கூட்டத்தில் பேசியவை குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல்வரின் உரைக் குறிப்பினை விரிவாகப் பார்க்கலாம்:-

“தமிழ்நாட்டைத் தன்னிகரற்ற மாநிலமாக உருவாக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் இடம்பெற்றுள்ள அனைவருக்கும் வணக்கம். உங்களது அறிவு உலகளாவியது; உங்களது திறமை உலகத்தவர் அனைவராலும் போற்றப்படுவது; உங்களது செயல்கள், உலகம் முழுவதும் பயன்பட்டு வருவது – இவை அனைத்தையும் இந்த அரசு அறியும். இத்தகைய நெருக்கடி மிகுந்த சூழலில் தமிழ்நாடு அரசின் அழைப்பை ஏற்றுப் பொருளாதார ஆலோசனைக் குழுவில் இடம்பெற ஒப்புக்கொண்ட உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதலமைச்சர் என்பது ஸ்டாலின் என்ற தனிநபர் மட்டுமல்ல, அது ஒரு கூட்டுப் பொறுப்பு என்று நினைப்பவன் நான். அந்த அடிப்படையில் அந்தக் கூட்டுப் பொறுப்புக்குள் உங்களையும் சேர்த்துள்ளேன். உங்கள் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் நேரடியாக அறிந்து பேசிப் பழகும் சூழ்நிலை இதுவரையில் அமையாவிட்டாலும் உங்களைத் தூரத்திலிருந்து அறிவேன். இந்த குழுவில், இடம்பெற்றுள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் தனித்தன்மை வாய்ந்தவர்கள்.

பேராசிரியர் ரகுராம் ராஜன் – இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தவர். எஸ்தர் டஃப்லோ உலகத்தின் உயரிய நோபல் பரிசு பெற்றவர். அரவிந்த் சுப்ரமணியன் – ஒன்றிய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்தவர். ஜீன் டிரீஸ் பொருளாதார வல்லுநர், அமர்த்தியா சென்னுடன் இணைந்து புத்தகம் எழுதியவர். எஸ்.நாராயண் ஒன்றிய அரசின் நிதிச் செயலாளராக இருந்தவர். கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு துறைகளைத் திறம்பட வழிநடத்தியவர். போபாலில் பிறந்திருந்தாலும் ரகுராம் ராஜனின் பெற்றோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். அரவிந்த் சுப்ரமணியன் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர். சென்னையில்தான் படித்துள்ளார்.

எஸ்.நாராயண் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்தான். மேலும், இக்குழுவில் இடம்பெற்றுள்ள ஐந்து பேரில் மூவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருப்பதும், அவர்கள் உலகப் புகழ்பெற்ற ஆளுமைகளாக வளர்ந்திருப்பதும் நம் மாநிலத்துக்குக் கிடைத்த பெருமையாகும். எஸ்தர் டஃப்லோவாக இருந்தாலும் ஜீன் டிரீஸாக இருந்தாலும் அவர்களுக்கு இந்தியா புதிதல்ல. இப்படி இந்தியாவை அறிந்தவர்கள் நீங்கள். தமிழ்நாட்டை அறிந்தவர்கள் நீங்கள். தமிழ்நாட்டைப் புரிந்து வைத்திருப்பவர்கள் நீங்கள். எனவே தமிழ்நாட்டின் களநிலவரம் குறித்து உங்களுக்கு நான் அதிகம் விளக்கிச் சொல்லத் தேவையில்லை. இக்குழுவில் இடம்பெற்றுள்ள உங்களைத் தமிழ்நாடு நன்கு அறியும். சமூக நலன் சார்ந்த வளர்ச்சிதான் தமிழ்நாட்டை இந்தளவுக்கு முன்னேற்றி இருக்கிறது என்பதை இந்த குழுவைச் சேர்ந்த நிபுணர்கள் நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் புத்தகங்களில் குறிப்பிட்டுள்ளது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

முதல்வர் ஸ்டாலின்

திராவிட மாடல்:-

அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, இது தான் ‘திராவிட மாடல்’ என்பது. அந்த நோக்கத்துடன் தமிழ்நாடு வளர வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை..!!

இந்த குழு உருவாக்கப்பட்டதற்கான முக்கிய நோக்கமாக இங்கே சிலவற்றை குறிப்பிட விரும்புகிறேன்:-

* பொருளாதாரம் மற்றும் சமூகக் கொள்கைகளில் பொதுவான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.

* சமூகநீதி மற்றும் மனிதவள மேம்பாடுகள் குறித்த ஆலோசனைகள் தர வேண்டும்.

* பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோருக்குச் சமமான வாய்ப்புரிமை வழங்க ஆலோசனைகள் வழங்க வேண்டும்.

* மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தி மேம்பாடு தொடர்பான ஆலோசனைகள் வழங்க வேண்டும்.

* மாநிலத்தின் மொத்தமான நிதி நிலையைப் பாதுகாப்பதற்கான ஆலோசனைகள் தர வேண்டும்.

* மக்களுக்குச் சேவை செய்வதற்கான மாநிலத் திறனை மேம்படுத்த ஆலோசனை வழங்க வேண்டும்.

* புதிய திட்டங்கள் மற்றும் நிறைவேற்றக் கூடிய தீர்வுகளுக்கான ஒரு வலுவான ஆலோசனை மையமாக நீங்கள் திகழ வேண்டும்.

* எவ்வித பிரச்னைகளுக்கும் ஆராய்ந்து சாத்தியப்படக்கூடிய சிறந்த சமூகப் பொருளாதாரத் தீர்வுகளை வழங்க வேண்டும்.

உங்களது ஆலோசனைகளை உடனுக்குடன் எங்களுக்குத் தெரிவியுங்கள். இப்படி ஒரு குழுவை அமைத்ததன் மூலமாகத் தமிழ்நாட்டின் பெருமை உலகளாவியதாக ஆகிவிட்டது. இந்தியாவின் மிக முன்னணி இதழ்கள், இக்குழுவையும் இதில் இடம்பெற்றவர்களையும், தமிழ்நாடு அரசையும், என்னையும் பாராட்டி எழுதினார்கள்.இந்தப் பாராட்டுகள் அனைத்தையும் மக்களின் மேம்பாட்டுக்குப் பயன்படுத்த வேண்டும். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகமாக வேண்டும். வேலைவாய்ப்புகள் அதிகமாக வேண்டும். தனிநபர் வருமானம் அதிகமாக வேண்டும். மக்களின் சமூக மரியாதை உயர வேண்டும். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக அது அமைய வேண்டும். இக்கனவுகள் சாதாரணமாக நிறைவேறி விடாது என்று எனக்கும் தெரியும்.

நமது வளங்களைக் கொண்டு நம்மை வளப்படுத்திக் கொள்ளும் நிலைமையில் இருக்கிறோம்!

தமிழ்நாடு அரசு 5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கடனில் இருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள் 2 லட்சம் கோடி ரூபாய்க் கடனில் இருக்கின்றன. நிதி ஆதாரம் என்பது விரல் விட்டு எண்ணத்தக்க ஒரு சில துறைகளின் மூலமாக மட்டும்தான் வருகிறது. வரி வசூலிலிருந்த மாநில உரிமைகளை ஒன்றிய அரசு ஜிஎஸ்டி மூலமாகப் பறித்துவிட்டது. அதனால் வரி வசூலை நம்ப முடியாது. நமது வளங்களைக் கொண்டு நம்மை வளப்படுத்திக் கொள்ளும் நிலைமையில் இருக்கிறோம். அதற்கென உள்ள வழிமுறைகளைத் தமிழ்நாட்டு அரசுக்குக் காட்டுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

Also Read: ஸ்டாலினின் பொருளாதார ஆலோசனைக் குழு… யார் இவர்கள்? பின்னணி என்ன? | Vikatan Tv

சமூகநீதி – சமத்துவம் – சுயமரியாதை – மொழிப்பற்று – இன உரிமை – மாநில சுயாட்சி ஆகிய தத்துவங்களின் அடிதளத்தில் நிற்கும் இயக்கம் தான் திமுக. நமது வளர்ச்சி என்பதும் அதன் அடிப்படையில் இருக்க வேண்டும். தொழில் வளர்ச்சி – சமூக மாற்றம் – கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல, சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும். பொருளாதாரம் – கல்வி – சமூகம் – சிந்தனை – செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒரு சேர வளர வேண்டும். அதுதான் தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் கருணாநிதியும் காணவிரும்பிய வளர்ச்சி. அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி!,

நாம் தொடர்ந்து சந்திப்போம். சிந்திப்போம். வளமான தமிழ்நாட்டை உருவாக்குவோம்” என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள முதல்வர் உரைக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.