வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் ஆர்.வி.கோபாலன் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது 7 வயது மகன் நரேஷ், கடந்த 7-ஆம் தேதியன்று காலை 10 மணியளவில், அருகிலுள்ள கடைக்குச் சென்றுள்ளான். பிச்சனூர் டு பலமனேர் சாலையைக் கடக்க முயன்றபோது, ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த லாரிக்கு அடியில் சிறுவன் நரேஷ் சிக்கிக் கொண்டான். அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் லாரியை உடனடியாக நிப்பாட்டினார். ‘சிறுவனுக்கு என்னவாகியிருக்குமோ?’ என்கிற பதற்றத்துடன் ஓடிவந்த பொதுமக்களுக்கும், லாரி ஓட்டுநருக்கும் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. சிறுவன் நரேஷ் சமயோஜிதமாக செயல்பட்டு லாரிக்கு அடியிலிருந்து சிறு காயமுமின்றி உயிர் தப்பி எழுந்து வந்ததைப் பார்த்து, அனைவரும் ஆச்சரியமடைந்து திகைத்துப் போயினர்.

விபத்தில் சிறுவன் சிக்கிய திக்… திக்… காட்சி

இந்த காட்சிகள், அங்குப் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. காவல்துறையினரால் வெளியிடப்பட்ட அந்த வீடியோ, சமூக வலைத்தளங்களிலும் வைலரானது. இதையடுத்து, வேலூர் மாவட்ட எஸ்.பி செல்வகுமார் நேற்று மாலை சிறுவன் நரேஷை அவனது வீட்டுக்கே சென்று பார்வையிட்டார். மன தைரியம் மற்றும் சமயோஜித செயலைப் பாராட்டி பூங்கொத்து கொடுத்தும் மகிழ்வித்தார்.

மேலும், குழந்தைகளை கடைத் தெருவுக்குத் தனியாக அனுப்புவதை தவிர்க்குமாறும், வெளியில் செல்லும்போது குழந்தைகளை கையில் பிடித்துக்கொண்டு சாலை மற்றும் பொதுயிடங்களைக் கடக்குமாறும் சிறுவனின் பெற்றோருக்கு அறிவுரைக் கூறினார், எஸ்.பி செல்வகுமார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.