” ‘வீடு முழுக்க ஃபோட்டோ இருந்தா அவர் நினைப்பு வந்துட்டே இருக்கும்; அதனால எடுத்துடுங்க’னு சொந்தக்காரங்க சொன்னாங்க. அவர் என் மனசு முழுக்க இருக்கார். ஒவ்வொரு நொடியும் அவர் நினைவோட தான் பயணப்படுறேன். அதனால நாங்க சேர்ந்து எடுத்த ஒரு ஃபோட்டோவை கூட கழட்டலை’’

நடிகை ராகவியின் முகத்தில் இன்னும் கணவரது நினைவின் வலி தெரிகிறது.

பணிபுரிந்த நிறுவனத்தில் திருட்டுப் பட்டம் கட்டி விட்டார்கள் என்கிற ஆத்திரத்தில் இவரது கணவர் தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்கிறது போலீஸ்.

காதல் கணவர், அன்பான அழகான குடும்பம் என சந்தோஷமாக பயணித்த இவருடைய வாழ்க்கையில் ஒன்றரை ஆண்டுக்கு முன் இடியாய் விழுந்தது அந்த செய்தி. ஆனால், மிகப்பெரிய இழப்பை கடந்து, தற்போது ‘மகராசி’, ‘என்றென்றும் புன்னகை’ ஆகிய தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ராகவியிடம் பேசினேன்.

’’எட்டு வருஷம் காதலிச்சு இருவீட்டார் சம்மதத்துல எங்க திருமணம் நடந்துச்சு. பதிமூணு ஆண்டுகள் வாழ்ந்துருக்கோம். எனக்கு மிகச்சிறந்த நண்பராகவும் இருந்தார்.. அம்மாவுக்கு அப்புறம் எனக்கு எல்லாமே அவர் தான். என்னை அவ்வளவு நல்லா பார்த்துக்கிட்டார். என்ன கஷ்டமானாலும் எங்கிட்டஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். நிச்சயம் அவரை அதிலிருந்து நான் மீட்டு கொண்டு வந்திருப்பேன்.

’வெளியூர் போறேன்’னு சொல்லிட்டு போனார். திடீர்னு ஒரு ஃபோன் வருது. ’உங்க கணவர் தூக்கிட்டு தற்கொலை பண்ணிட்டார்’னு! யோசிச்சு பாருங்க அந்தநேரம் என்னுடைய மனநலை எப்படி இருந்திருக்கும்னு. அவர் அப்படி பண்ணிட்டாருங்கிறதை என்னால இப்பவரை ஏத்துக்கவே முடியலை ரொம்பவே கோபப்பட்டேன். அவருக்கு ஏன் இப்படி நடந்தது, என்ன நடந்ததுன்னு பல கேள்விகள். மூணு நாளைக்கு பிறகுதான் வாட்ஸ்அப், ஃபேஸ்புக்னு எல்லா பக்கமிருந்தும் என் கணவர் குறித்து நடந்த விஷயங்கள் எல்லாம் தெரிஞ்சது. யாரோ ஒருத்தருக்காக அவர் எங்களைப்பத்தி யோசிக்காம முடிவு எடுத்துட்டார். என்னுடைய கடைசி மூச்சு இருக்கிற வரைக்கும் இந்த வலி எனக்கு இருக்கும். என் கணவர் விஷயத்துல யார் தப்பு பண்ணினாங்களோ, அவங்க நிச்சயம் கடவுளுக்கு பதில் சொல்லியே ஆகணும். அந்த மரணத்திற்கு யார் காரணம்னு நான் தேடுறதனால என்ன ஆகிடப் போகுது. அவர் இனிமேல் வரப் போகிறது இல்லை. இந்த வீட்ல நாங்க சிரிச்சு வாழ்ந்த நினைவுகள் மட்டும் தான் இருக்கு. அந்த நினைவுகளுடன் வாழ்ந்துட்டு இருக்கேன். என் கணவருக்கு நான் தான் என் கையால கொள்ளி வைச்சேன். அவர் அடிக்கடி காசியில் சிவனுக்கு நாம அபிஷேகம் பண்ற மாதிரி கனவு கண்டேன்மான்னு சொல்லிட்டே இருப்பார். அவருடைய முதலாமாண்டு நினைவஞ்சலியின் போது அவருக்கு செய்ய வேண்டிய சடங்குகளை நான் காசிக்கு போய் செய்துட்டு வந்தேன்.

அவருக்கு பொண்ணுன்னா உசுரு. அவளுக்கும் அப்பா மேல அவ்வளவு பிரியம். அவளை மீட்டெடுத்தது என்னுடைய அக்காதான். ஆரம்பத்தில் என்னாலயுமே மீண்டு வர முடியலை. என் அம்மா தான்தான், ‘உன்னுடைய கலர்ஃபுல்லான வாழ்க்கை முடிஞ்சு போனதையே யோசிச்சு உன் பொண்ணோட கலர்ஃபுல் வாழ்க்கையை கெடுத்துடாத’ன்னு சொன்னாங்க. என் பொண்ணுக்காக நான் வாழ்ந்தே ஆகணுங்குறதை அத்தனை இயல்பா எனக்கு புரிய வைச்சாங்க.

என்னுடைய இயக்குநர்கள், சேனல்கள், புரொடக்‌ஷன் கம்பெனிகள்னு எல்லோருக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கேன். அவங்க கொடுத்த வாய்ப்புனாலதான் நான் தொடர்ந்து நடிக்க வந்தேன்.

இப்போ கணவருடைய பொறுப்பையும் ஏற்று வாழ ஆரம்பிச்சிருக்கேன். பொண்ணை எப்படி வளர்க்கணும்னு ஆசைப்பட்டாரோ அந்த மாதிரியே நான் வளர்க்கணும்னு நினைக்கிறேன். பொண்ணுக்கு ஸ்போர்ட்ஸ் கத்துக் கொடுக்கணும்னு ஆசை. பேட்மிட்டன், ஸ்கேட்டிங்னு அவளுக்கு பிடிச்ச விளையாட்டை தேர்வு செய்து கத்துட்டு இருக்கா. அம்மாவும், என் சகோதரிகளும் இல்லைன்னா நான் என்ன ஆகியிருப்பேன்னே தெரியலை.

நான் பொதுவா சொல்ற விஷயம், ‘கணவன், மனைவிக்குள்ளே எந்தவித ஒளிவும், மறைவும் இருக்கக்கூடாது. ஒருத்தருக்கொருத்தர் ஈகோ பார்க்காமல் எந்த பிரச்னைனாலும் பகிர்ந்துக்கணும். அவ்வளவுதான்” என ராகவி முடிக்கவும், அங்கே நிலவிய அமைதியை பெருமழை கலைக்கவும் சரியாக இருந்தது!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.