அரசு மருத்துவமனையில் காலாவதியான மருந்தை செலுத்தியதால் தன் கணவர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை அமைச்சரிடம் கண்ணீர் விட்டு கதறிய பெண்மணியால் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அமைச்சரிடம் முறையிடும் ராஜேஸ்வரி

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டம் முடித்துவிட்டு வந்தவரிடம், “சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கணவர், காலாவதியான மருந்து செலுத்தியதால் மரணமடைந்துவிட்டார். மருத்துவமனையின் அலட்சியமே இதற்கு காரணம். இதை விசாரித்து நியாயம் வழங்க வேண்டும் ” என்று வயதான பெண்மணி கண்ணீர் விட்டார்.

உடனே பதறிப்போன அமைச்சர், கலெக்டரை அழைத்து “உடனே இந்தப் புகாரை விசாரித்து, அறிக்கை தாருங்கள்” என்று உத்தரவிட்டார்.

புகார் அளிக்க வந்த வெங்கடேஷ்- ராஜேஸ்வரி

புகார் கொடுத்த ராஜேஸ்வரியிடம் பேசினேன், “என் கணவர் ராமதாஸ் வட்டாட்சியராக நேர்மையாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்ததற்காக பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 21-ம் தேதி சேர்த்தோம். அப்போது அவருக்கு சிகிச்சை அளிக்காமல் ஒவ்வொரு வார்டாக இழுத்தடித்தனர். நான்கு நாட்களாக சிகிச்சை அளிக்காமலே இருந்தனர்.

மருத்துவமனைக்கு செல்லும்போது நன்றாக பேசிக்கொண்டிருந்தவர் மருத்துவர்களின் அலட்சியத்தால் 4 வது நாள் இறந்துவிட்டார்.

அவர் மரணமடைய காரணம், மருத்துவமனையில் காலாவதி மருந்தை செலுத்தியதுதான். எங்கள் குடும்பத்தின் ஆணிவேரான அவரை இழந்துவிட்டு இப்போது தவித்துக்கொண்டிருக்கிறோம்.

ராமதாஸ்

கடந்த 27-ம் தேதி முழுவதும் என் கணவர் எழுந்திருக்க வில்லை. கேட்டதற்கு தூங்குவதாக கூறினார்கள். மாலை வரை எழுந்திருக்க வில்லை. சந்தேகப்பட்டு பணியில் இருந்தவர்களிடம் உண்மையை சொல்லுங்கள் என்று கேட்டபோது, அவர் இறக்க போகும் தகவலை இரவு நேரத்தில் கடைசி நிமிடத்தில் கூறினார்கள். முன் கூட்டியே சொல்லி, வேறு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றிருந்தால் பிழைக்க வைத்திருப்போம்.

ஆனால், அவர்கள் சொல்லாதற்கு காரணம், அவருக்கு கொடுத்த காலாவதியான மருந்துதான் பாதிப்பை ஏற்படுத்தியது தெரிந்துவிடும் என்பதால் சொல்லாமல் மறைத்துள்ளார்கள்” என்று அழுதார்.

அமைச்சரிடம் முறையிடும் ராஜேஸ்வரி

என்னிடம் பேசிய அவர் மகன் வெங்கடேஷ், “என் அப்பாவை பொது வார்டில் 4 நாட்கள் வைத்திருந்தார்கள். அப்போது மருத்துவர்களிடம் கேட்டதற்கு ஸ்கேன் எடுத்து பார்பதற்காக வைத்திருக்கிறோம் என்று சொன்னார்கள். அப்போது நர்ஸ் ஒருவர் குளுகோஸ் பாட்டில் வடிவத்தில் இருந்த Textrose injection ip என்ற மருந்தை அவருக்கு ஏற்றினார். அது பாதியளவு என் அப்பாவுக்கு ஏற்றிக்கொண்டிருந்தபோது, அதன் காலாவதியான தேதியை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

இதை நான் கவனிப்பதை பார்த்த நர்ஸ், உடனே அந்த பாட்டிலை கழட்டி எடுத்து செல்ல முயற்சித்தார். உடனே நான் அதை மொபைலில் வீடியோவாக பதிவு செய்தேன். பாட்டிலை எடுத்துக்கொண்டு போய்விட்டார். அங்கிருந்த மருத்துவர், ஊழியர்களிடம் கேட்டதற்கு, வேறு மருந்து ஏற்றுவதாக சொன்னார்கள்.

புகார் அளிக்க வந்த வெங்கடேஷ்- ராஜேஸ்வரி

தொடர்ந்து நான் கேள்வி எழுப்பியதற்கு காலாவதி மருந்தை ஏற்றலாம் ஒன்றும் ஆகாது என்று சமாளித்தார்கள். இது என் அப்பாவுக்கும் தெரிந்து மன சோர்வடைந்தார். அச்சப்பட்டார்.

பின்பு அவரை ஐ.சி.யூ-வுக்கு மாற்றினார்கள். தனக்கு காலாவதியான மருந்தை ஏற்றி விட்டார்கள் என்பதை அறிந்தே அவருக்கு உடல் நலம் மிகவும் மோசமானது. பின்னர் கடந்த 27-ம் தேதி இறந்துவிட்டார்.

Also Read: மீண்டும் புயலைக் கிளப்பும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை விவகாரம்… தி.மு.க-வின் திட்டம்தான் என்ன?

அவசர அவசரமாக மருத்துவமனையில் இருந்த காலாவதி மருந்துகளை அப்புறப்படுத்தி விட்டார்கள். இதுவரை என் அப்பாவுக்கு எடுத்த சோதனைகள், சிகிச்சை பற்றிய விவரங்களை தராமல் இழுத்தடிக்கிறார்கள். நான்கு நாட்களாக சிகிச்சை அளிக்காமல் அலட்சியப்படுத்தியதும், காலாவதியான மருந்தை செலுத்தியதும்தாம் என் அப்பா மரணமடைய காரணம். ஆனால், இதை மருத்துவமனை நிர்வாகம் மறைக்க பார்க்கிறது.

அமைச்சரிடம் முறையிடும் ராஜேஸ்வரி

எங்களுக்கு நியாயம் வழங்குங்கள் என்றுதான் அமைச்சரிடம் மனு அளித்துள்ளோம்” என்றார்.

அவர்களின் புகார் பற்றி விசாரியுங்கள் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் விகடன் சார்பில் கேட்டுக்கொண்டோம். ‘நிச்சயாமாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக’ உறுதியளித்தார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.