வட கொரியாவில் என்ன நடக்கிறது? அங்குள்ள மக்களின் வாழ்க்கை சூழல் என்ன? அதிபர் கிம் என்ன செய்கிறார் என்பதில் எப்போதும் ஆர்வம் உண்டு. ஆனால் அந்நாடு குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிந்து கொள்ள அந்நாட்டின் அரசு ஊடகத்தை தவிற வேறு வழியில்லை. அதிலும் உலக நாடுகளுக்கு எதை தெரிவிக்க வேண்டும் என்று அதிபர் கிம் விரும்புகிறாரோ அது மட்டுமே அரசு ஊடகத்தில் ஒளிபரப்பப்படும்.

அரிதான ஒரு நிகழ்வாக வட கொரியாவின் அரசு ஊடகம் அதிபர் கிம்மின் உடல் எடை குறைந்திருப்பது குறித்த ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. அதில் வட கொரியாவை சேர்ந்த ஒருவர் கிம் உடல் மெலிந்து இருப்பதை கண்டதும் தங்களுக்கு பெருந்துயர் ஏற்பட்டது என்றும், அனைவரும் அழ தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்தார்.

மெலிந்த கிம்மின் வீடியோ!

வட கொரியாவின் ஊடகமான கொரியா சென்ட்ரல் தொலைக்காட்சி, கிம் உடல் எடை குறைந்த நிலையில், வழக்குத்துக்கு மாறாக தொள தொளவென இருக்கும் வெள்ளை சட்டை ஒன்றில் இசை நிகழ்ச்சி ஒன்றுக்கு வருவதை போன்றும் வட கொரிய மக்கள் அதனை பெரிய திரைகளில் பார்ப்பது போன்றும் காணொலி ஒன்றை வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக அந்த வீடியோவில் கிம் உடல் எடை மெலிந்து இருப்பதை கண்டு தாங்கள் பெருந்துயர் உற்றதாக ஒருவர் கூறுகிறார்.

வட கொரியா என்பது மர்மம் சூழந்த ஒரு நாடாக கருதப்படுகிறது. அந்நாட்டு அதிபரின் உடல்நிலை குறித்த தகவல்கள் அங்கு ரகசியமாக காக்கப்படுகின்றன. இந்நிலையில் இந்த வீடியோக்கள் ஏன் ஒளிபரப்பப்பட்டன என்பது குறித்து பலதரப்பட்ட ஊகங்கள் வெளியே வந்து கொண்டிருக்கின்றன.

அதில் முக்கியமான ஒன்று, வட கொரியாவை பொறுத்தவரை அதிபர் கிம்மை தவறாக சித்தரிக்கும் எந்த ஒரு செய்தியும் வெளியே வராது. எனவே இது திட்டமிடப்பட்டு ஒளிபரப்பப்பட்ட காணொளி என்பது.

சில தினங்களுக்கு முன் நடைபெற்ற ஆளுங்கட்சி கூட்டத்தில் நாட்டில் உணவு பஞ்சம் இருப்பதாக கிம் ஒப்புக் கொண்டிருந்தார். அதுவும் அரிதான ஒரு நிகழ்வாகவே பார்க்கப்பட்டது. நாட்டில் ஏற்பட்ட சூறாவளியால் உணவு உற்பத்தி பெரிதும் பாதிப்பட்டதாக கிம் தெரிவித்திருந்தார். இந்நிலையில்தான் இந்த இரு நிகழ்ச்சிகளுக்கும் தொடர்பு உள்ளது என்கின்றனர் சில ஆய்வாளர்கள்.

ஆம், கடும் பஞ்சம் குறித்து பேசிய அதிபர், இரவும் பகலும் மக்களுக்காக அயராமல் உழைக்கிறார் என்பதை காட்டதான் இந்த ஒளிபரப்பு என்கின்றனர் ஒரு சிலர். மேலும் சிலர் அவர் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

இந்த ஆண்டு, ஒரு மாதத்திற்கு பிறகு, ஜூன் மாதம் கிம் தொலைக்காட்சியில் தோன்றியபோது, அவர் கையில் இருந்த கைக்கடிகாரம் வழக்கத்தை காட்டிலும் இறுக்கமாக கட்டுப்பட்டிருந்ததை நிபுணர்கள் கவனித்திருந்தனர். அப்போதே அவரின் உடல் எடை குறித்த ஊகங்கள் எழுந்தன.

இந்நிலையில்தான் கிம் திடீரென உடல் எடை மெலிந்து காணப்படுவது அவர் உடல்நிலை குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

முந்தைய கால கதைகள்..!

இதற்கு முன்னர் கிம்மின் உடல்நிலை குறித்து பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு ஊகங்கள் வெளியிருந்தன. கடந்த ஆண்டு நாட்டின் நிறுவனரும் கிம் ஜாங் உன்னின் தாத்தாவுமான கிம் இல் சங்கின் பிறந்தநாள் ஆண்டு நிகழ்ச்சியில் கிம் கலந்து கொள்ளவில்லை.

இதுகுறித்து வட கொரிய ஊடகம் எந்த ஒரு விளக்கத்தையும் அளிக்கவில்லை. ஆனால் சர்வதேச ஊடகங்கள் பல்வேறு ஊகங்களை எழுப்பின. இதுகுறித்து பல்வேறு ஆய்வு செய்திகளும் வெளியாகின. நீண்ட நாட்களுக்கு கிம் பொது வெளியில் காணப்படவில்லை என்பதால் அவர் இறந்திருக்கலாம் என்றும் அடுத்த ஆட்சியாளர் யாராக இருக்ககூடும் என்ற பேச்சுக்களும் எழுந்தன.

ஆனால் அவரின் உடல்நிலை காரணமாகதான் அவர் பொதுவெளியில் காணப்படவில்லை என தென் கொரிய ஊடகங்கள் தெரிவித்திருந்தன. கிம் தொடர்ச்சியாக புகைப்பிடிக்க கூடியவர், மது பழக்கமும் உண்டு அவரின் உடல்நிலை குறித்த பேச்சுக்கள் எழுவதற்கு இதுவும் ஒரு காரணம்.

அதேபோன்று 2014-ம் ஆண்டும் கிம் சில நாட்களாக பொதுவெளியில் தோன்றாமல் இருந்தார். அப்போது அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் இறந்திருக்கலாம் என்றும் ஊகங்கள் வெளியாகின. ஆனால் அவர் பொது வெளிக்கு மீண்டும் வந்தபோது காலை ஊன்றி நடந்தார். அதன்மூலம் அவருக்கு கணுக்கால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கலாம் என ஊகங்களை கிளப்பியவர்கள் ஒரு முடிவுக்கு வந்தனர்.

வட கொரியா அவ்வபோது ஏவுகணை அணிவகுப்புகளை நிகழ்த்திருந்தாலும், அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகள், கோவிட் சூழலை கட்டுப்படுத்த எல்லைகள் மூடப்பட்டது, இயற்கை பேரழிவுகள் என அந்நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதித்து வருகிறது. எல்லைகள் மூடப்பட்டிருந்தால் இறக்குமதிகளுக்கும் பெரிதான வாய்ப்பில்லை. தொண்டு நிறுவனங்கள் உணவு உதவிகளை செய்யும் சூழலும் கடினம்தான். இம்மாதிரியான இக்கட்டான சூழலில்தான் கிம்மின் உடல் எடை குறித்த இந்த செய்திகள் வெளியாகியுள்ளன.

– திலகவதி

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.