தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அரசியலிலிருந்து ஒதுங்கிக் கொள்ளப்போவதாக அறிவித்த சசிகலா, தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, அ.தி.மு.க நிர்வாகிகளுடன் அலைபேசியில் உரையாடுவது போன்ற ஆடியோக்களை வெளியிட்டு வருகிறார். ஆரம்பத்தில் பகுதி அளவிலான நிர்வாகிகளிடம் பேசிவந்த சசிகலா தொடர்ந்து முன்னாள் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மேயர்களோடு உரையாற்றும் ஆடியோக்கள் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தவிர, அதிமுகவின் முன்னாள் அவைத்தலைவர் புலவர் புலமைப்பித்தன், முதல் எம்.பியான மாயத்தேவரின் குடும்பத்தினருடன் சசிகலா பேசும் ஆடியோக்கள் சமீபத்தில் வெளியாகின. இதுவரை வெளியான ஆடியோக்களில் பெரும்பாலும், ” நான் விடமாட்டேன், கட்டாயம் வந்துடுவேன். கட்சியை மீட்பேன். கொரோனா காலம் முடியட்டும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் வருவேன்” போன்ற கருத்துகளே பிரதானமாக இடம் பெற்றிருக்கின்றன.

விளாத்திகுளத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டம்

சசிகலாவின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்வினையாக, முதலில் அ.தி.மு.க தலைமைக் கழக கூட்டத்திலும் பின்னர் ஒவ்வொரு மாவட்டத்திலும் அவருக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தவிர, சசிகலாவுடன் தொடர்பில் இருந்த 20 பேர் அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டனர். இந்தநிலையில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்ற வடக்கு மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், “சசிகலா அ.தி.மு.க-வின் தலைமைப் பொறுப்பை மீண்டும் ஏற்க வேண்டும். அவர் தலைமையிலான அ.தி.மு.கவை ஏற்க வேண்டும், அ.தி.மு.க தொண்டர்களை சசிகலாவைச் சந்திப்பது வரவேற்கக்கூடியது, சசிகலாவுடன் போனில் பேசியவர்களை கட்சியில் இருந்தது நீக்கப்படுவது கண்டிக்கத்தக்கது ” என 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சசிகலாவுக்கு எதிராகப் பேசி வரும் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி இல்லங்கள் முன்பு போராட்டம் நடத்துவது குறித்த தீர்மானமும் அதில் அடக்கம்.

அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்டுள்ள இந்தத் தீர்மானம் அ.தி.மு.கவினர் மத்தியில் பெரும் சலசலப்பை உண்டாக்கியுள்ளது. தவிர, ”சசிகலாவுக்கு ஆதரவாக அடுத்தடுத்த தீர்மானங்கள் இனி ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் வரும்” என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய அதிமுக முக்கிய நிர்வாகி ஒருவர்,

” சிறையில் இருந்து வெளிவந்த நாள்முதலாகவே அதிமுகவில் பலர் சசிகலா அம்மையாருடன் தொலைபேசியில் பேசி வருகிறார்கள். அவர்களில் கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்டவர்கள் மட்டும் இல்லை. கடந்த தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சிலரும் கூட அடக்கம். தொடர்ந்து கட்சியில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி வருவதை சசிகலா அம்மையார் விரும்பவில்லை. அதைத்தான் ஒரு ஆடியோவில்கூட, ‘கொங்கு மண்டல மக்கள் எல்லாருமே தலைவர் மேலும், அம்மா மேலும் ரொம்ப பாசமா இருப்பாங்க… அந்த மக்கள் அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டு பழக்கப்பட்டவங்க… அந்த மக்கள் நம்ம மேல வச்ச பிரியம் எனக்கு பெரிசா பட்டுச்சு… அதனால்தான் கொங்குமண்டல மக்களுக்கு ஒரு நல்ல அங்கீகாரத்தை தரலாம்னு நினைச்சுதான் அந்த வாய்ப்பை கொடுத்துட்டு போனேன். ஆனா, இப்போ இவங்க பண்றத பார்த்தா ரொம்ப கஷ்டமா இருக்கு… என்ன ஆனாலும் சரி இந்த கட்சியை இனிமேலும் விட்டுவிட மாட்டேன். தலைவர், அம்மா காலத்து அ.தி.மு.க.வை மீண்டும் கொண்டுவருவேன்னு பேசியிருக்காங்க.

விளாத்திகுளத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டம்

அவங்ககிட்ட தொடர்புகொண்டு பேசுறவங்ககிட்ட , உங்கப் பகுதிகள்ல நமக்கு ஆதரவா இருக்குற நிர்வாகிகள வச்சு கூட்டம் போடுங்க. அதுல நீங்க விரும்புற மாதிரி, நான் பொதுச்செயலாளரா வரணும்னு தீர்மானம் போடுங்க. தமிழ்நாடு முழுவதும் எவ்வளவு தீர்மானங்கள் வருது, எவ்வளவு பேர் நமக்கு ஆதரவா வர்றாங்கன்னு பார்ப்போம். அதற்குப் பிறகு நான் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சுற்றுப்பயணம் வர்றேன்னு நம்பிக்கை கொடுத்திருக்காங்க. அது முடிஞ்ச உடனே, தஞ்சாவூர் இல்ல திருச்சியில மாநில அளவுல மிகப்பெரிய மாநாடு ஒண்ணு நடத்தவும் திட்டமிட்டிருக்காங்க. அதுனாலதான் கொரோனா காலம் முடியட்டும்னு ஒவ்வொருத்தங்ககிட்டயும் சொல்லிட்டு இருக்காங்க. அந்த மாநாட்டுக்கு தொடக்கமாகத்தான் விளாத்திகுளத்துல போடப்பட்ட தீர்மானம். இனி திருப்பூர், மதுரை, சேலம், திண்டுக்கல் என தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்துலயும் அவங்களுக்கு ஆதரவா தீர்மானங்கள் வரும்” என்றவர் தினகரனின் சைலன்ட் மோடுக்குப் பின்னால் உள்ள காரணத்தையும் விளக்கினார்,

Also Read: சசிகலா விவகாரம்: ஓ.பி.எஸ் அணுகும் விதமும், எடப்பாடியின் திட்டமும்!

”அ.ம.மு.கவில் இருந்து பலர் மீண்டும் அதிமுகவில் இணைந்திருக்கின்றனர். அவர்கள் அனைவருமே சசிகலா மீண்டும் கட்சிக்குள் வந்து தலைமைப் பொறுப்பேற்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். ஆனால், அவர்களுக்கு சசிகலா அம்மையாரின் மீதிருக்கும் அபிப்ராயம் தினகரன் மீது கிடையாது. தற்போது சசிகலாவுக்கு ஆதரவாக வரவிரும்பும் சிலரும்கூட, தினகரனும் பின்னணியில் இருப்பதுபோல தெரிந்தால், வரமாட்டார்கள். அதனால்தான், தினகரன் தற்போது அமைதியாக இருக்கிறார்” என்றார்.

தினகரன் – சசிகலா

இந்தநிலையில், விளாத்திகுளத்தில் நடந்த கூட்டம் குறித்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ

” சசிகலாவுக்கு ஆதரவாக விளாத்திகுளத்தில் அ.தி.மு.க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் என்ற பெயரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக செய்திகள் வந்தது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அ.தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் கிடையாது. அ.தி.மு.கவின் பெயரை தவறாக பயன்படுத்தினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பதற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் வேண்டும். அ.தி.மு.க பொதுச்செயலாளருக்கு இருந்த அதிகாரம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளது” என்றார். ஆனால், ”சசிகலாவுக்கு ஆதரவாக விளாத்திகுளத்தில் நடந்த கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ரூபம் சில மாதங்களுக்கு முன்பாக அமமுகவில் இருந்து அதிமுகவில் இணைந்தவர்” என்கிறார்கள் அந்தப் பகுதி அதிமுக நிர்வாகிகள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.