கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பு பேருந்து மற்றும் ரயில்களில் நீண்ட பயணம் மேற்கொள்ளும்போது குறைந்தது 5 பேராவது கையில் ஏதேனும் ஒரு புத்தகத்தை வைத்து வாசித்துக்கொண்டிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். குறிப்பாக வயதானவர்களும், குடும்பத் தலைவிகளும் வாசிப்பு பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதை அவர்கள் வீடுகளில் அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களே நமக்கு எடுத்துச்சொல்லும். ஆனால் ஸ்மார்ட்போன் கைகளில் தவழத்தொடங்கியதிலிருந்து புத்தகப் புழக்கம் படிப்படியாகக் குறையத் தொடங்கிவிட்டது. யாராவது புத்தகத்துடன் சென்றால் அவர்களை வித்தியாசமாகப் பார்த்தனர் இன்றைய நமது ஸ்மார்ட்போன்வாசிகள்.

ஆனால், கிட்டத்தட்ட ஒருவருட காலமாக கொரோனா பெருந்தொற்றால் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கும்போதுதான் மறந்துபோன பல விளையாட்டுகளையும், பழக்கவழக்கங்களையும் நாம் நினைவுகூர்ந்து வருகிறோம். அந்தவகையில் மறைந்துபோன வாசிப்புப்பழக்கம் மீண்டும் உயிர்பெறத் தொடங்கியிருக்கிறது. தற்போதுள்ள 2K கிட்ஸ்களுக்கும்கூட புத்தகங்களை வாசிக்கவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கிவருகிறது. இளைய தலைமுறையின் வசதிக்கு ஏற்றவாறு, அனைவரின் எதிர்பார்ப்பையும் கருத்தில்கொண்டு பிரத்யேகமாக தமிழ் புத்தக செயலியை உருவாக்கி இருக்கிறது நோஷன் பிரஸ் பதிப்பகம். குறிப்பாக இந்த செயலி முழுக்க முழுக்க இலவசமாகக் கிடைக்கிறது.

BYNGE என பெயரிடப்பட்டுள்ள இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலும் டவுன்லோட் செய்துகொள்ளலாம். இந்த செயலி பற்றி நோஷன் பிரஸ்ஸின் நிர்வாக இயக்குநர் நவீன் வல்சகுமாரை தொடர்புகொண்டு பேசினோம்.

image

BYNGE ஆப்பை உருவாக்க உங்களை ஊக்குவித்தது எது? இந்த எப்படி எண்ணம் தோன்றியது?

கொரோனா காலத்தில் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தபோதுதான் எங்களுக்கு இந்த எண்ணம் உருவானது. ஸ்மார்ட்போன் தலைமுறைக்கு தமிழ் இலக்கியங்களை எடுத்துச் செல்வதே எங்கள் நோக்கம். எனவே கொரோனா முதல் அலையிலேயே இதுகுறித்து திட்டமிட்டோம். இதற்காக நிறைய எழுத்தாளர்களை தொடர்புகொண்டு அவர்களிடமும் கலந்தாலோசித்தோம். தற்போது இரண்டாம் அலையில் இதை செயல்படுத்தி இருக்கிறோம். ஆரம்பித்த சில நாட்களிலேயே செயலிக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இதில் என்னென்ன மாதிரியான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன? இதழ்கள் போன்று எழுத்தாளர்களின் தொடர்கள் எழுதும் எண்ணம் எப்படி வந்தது?

தமிழ் மொழி வாசகர்களுக்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலியில், சாரு நிவேதிதா, ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், இந்திரா சௌந்தர்ராஜன், பவா செல்லத்துரை, பா.ராகவன், காஞ்சனா ஜெயதிலகர் போன்ற இன்றைய பல பிரபலங்களின் கதைகளும், கல்கி, நா.பார்த்தசாரதி, லா.ச.ராமாமிர்தம், சாவி, ராஜம் கிருஷ்ணன், கி.வா.ஜகன்நாதன், வல்லிக்கண்ணன், சு.சமுத்திரம் போன்றவர்களின் காலங்கள் தாண்டியும் பேசப்படும் சரித்திரம், சமூகம் மற்றும் காதல் கதைகளையும் தற்போது இலவசமாக படிக்கமுடியும்.

முன்பெல்லாம் வார, மாத இதழ்களில் வரும் தொடர்கதைகளுக்கென்றே பிரத்யேக வாசகர்கள் இருப்பார்கள். தற்போது கொரோனா பெருந்தொற்றால் பெரும்பாலான இதழ்கள் வருவதில்லை; மேலும் பலருக்கு இதழ்களை வாங்க பொருளாதார வசதி ஒத்துழைப்பதில்லை. அவர்களின் குறையை இந்த செயலி போக்கிவிடும். இதில், பல பிரபல எழுத்தாளர்களும் இளம் எழுத்தாளர்களும் புதுமுகங்களும் BYNGE செயலியுடன் இணைந்து தொடர்கதைகளை அத்தியாயங்களாக கொடுக்கின்றனர். இதில் கூடுதல் ஸ்பெஷல் என்னவென்றால், மனம் கவர்ந்த எழுத்தாளரின் விறுவிறுப்பான தொடர்களை வாசிப்பதோடு, அவர்களோடு கதைகள்பற்றி விவாதிக்கவும் இந்த செயலியில் வசதியை உருவாக்கிக் கொடுத்துள்ளோம்.

image

உங்களுடைய டார்கெட் ரீடர் யாரெல்லாம்? இது இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் என்று நினைக்கிறீர்களா?

கண்டிப்பாக. தற்போது அனைவருக்குமே ஸ்மார்ட்போன் வசதி உள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தவிர மற்ற நேரங்களில் சோஷியல் மீடியாக்கள் மற்றும் கேம்ஸ்களில்தான் நேரத்தை செலவிடுகிறார்கள். ஆனால் அதுவே பலநேரங்களில் சலிப்பைக் கொடுக்கிறது. அவர்களுக்கு புத்தகத்தை கையில் எடுத்து படிப்பதென்பது வசதியாக இருப்பதில்லை. அதுவே கையிலேயே இருக்கிற ஸ்மார்ட்போனில் ஒரு செயலியை திறந்து படிப்பது என்றால் சுலபமாக இருக்கும். மேலும் அவர்களுக்கு எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் வாசிக்கலாம்.

இப்போது வயது வரம்பின்றி அனைவருமே ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் யாருக்கு எந்த genre பிடிக்கிறதோ, அதில் பிடித்த கதைகள் மற்றும் பிடித்த புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து படித்துக்கொள்ளலாம்.

தற்போது இதுபோன்ற செயலிகளை நீண்டநாட்களுக்கு இலவசமாக பயன்படுத்த முடிவதில்லையே. எதிர்காலத்தில் BYNGE செயலி கமெர்ஷியல் ஆக வாய்ப்பிருக்கிறதா?

நிச்சயமாக இல்லை. இந்த செயலி முழுக்க முழுக்க இலவசமாகத்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கவும், புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தவும்தான் இந்த செயலியை உருவாக்கியுள்ளோம். எனவே இதை கமெர்ஷியல் ஆக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை.

செயலியில் என்னென்ன மாதிரியான சிறப்பம்சங்கள் இருக்கிறது? எதிர்காலத்தில் என்னென்ன மாற்றங்களை எதிர்பார்க்கலாம்?

BYNGE செயலியில் கேம்ஸ் செயலிகள் போன்றே காயின்கள் கொடுக்கப்படுகிறது. BYNGE செயலியை நீங்கள் பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு உங்களுக்கு காயின்கள் கிடைக்கும். அமேசான், ஹாட்ஸ்டார் போன்ற செயலிகளில் பணம் செலுத்தி Prime member ஆகிவிட்டால் முன்கூட்டியே படங்களைப் பார்ப்பதுபோல, BYNGE செயலியில் உங்களுக்கு பிடித்த தொடர் மற்றும் அத்தியாயங்களை முன்கூட்டியே படிக்க சேமித்து வைத்திருக்கும் காயின்களை பயன்படுத்திக்கொள்ளலாம். இது வாசிப்போரின் ஆர்வத்தை மேலும் அதிகரிக்கும், அவர்களை ஊக்கப்படுத்தும்.

அதுமட்டுமல்லாமல் வாசகர்களே புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும் வாய்ப்பைக் கொடுக்கிறோம். அதாவது ஒரு வாசகரேகூட எழுத்தாளராக உருவாகலாம். அதிகமான வாசகர்களைப் பெறும் எழுத்தாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தற்போதுவரை 2,00,000 வாசகர்கள் இந்த செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலியில் 2.5 லட்சம் கதைகள் இடம்பெற்றுள்ளன. த்ரில்லர் மற்றும் ரொமான்ஸ் கதைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதுதவிர பழைய கதைகளை மீண்டும் படிப்பதிலும் ஆர்வம்காட்டி வருகின்றனர். எனவே இதில் மேலும் அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொண்டுவர இருக்கிறோம்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.