விஜய் நடிப்பில் தயாராகும் ‘பீஸ்ட்’ படத்தின் தலைப்பு விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார். தலைப்பு வைக்காமல் தொடங்கப்பட்ட இந்தப் படத்தில் விஜய் உடன் பூஜா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடந்து முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்கு படக்குழுனர் தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ‘பீஸ்ட்’ என்ற தலைப்பை தயாரிப்பு நிறுவனம் அறிவித்து. இந்த தலைப்பை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் . மேலும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விஜய் பட தலைப்பு ட்ரெண்டானது. ஆனால் அந்த தலைப்பே தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

image

தமிழ் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் கேளிக்கை வரி ரத்து என்று 2006ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார். அதன்படி தமிழில் பெயர் வைக்கப்பட்ட படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்பட்டன. குறிப்பாக அந்த சமயத்தில் வேறு மொழி தலைப்பு வைந்திருந்தவர்களும் தலைப்பை மாற்றி வரி விலக்கு பெற்றனர்.

இதைத்தொடர்ந்து 2011ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் அமைந்த போது கேளிக்கை வரி விலக்கிற்கு கூடுதல் விதிகளை வகுக்கப்பட்டது. 27.6.2011 அன்று வெளியிடப்பட்ட ஆணையில் திரைப்படத்தின் தலைப்பு தமிழில் இருக்க வேண்டும், தணிக்கையில் U சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும், கதைக்கரு தமிழ் மொழி மற்றும் பண்பாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்க வேண்டும், ஆபாசம் மற்றும் வன்முறை காட்சிகள் அதிகம் இடம்பெற கூடாது எனக் கூறியது. அதை உறுதி செய்து கேளிக்கை வரி விலக்கு அளிக்க புதிய குழுவும் அமைக்கப்பட்டது.

சுமார் 10 ஆண்டுகள் தமிழ் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்பட்டு வந்தன. அதன் முழு சலுகைகளும் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என மூன்று தரப்பினருக்கும் சென்றடைந்தது. ஆனால் ஜி.எஸ்.டி வரி அமல்படுத்தப்பட்ட பிறகு கேளிக்கை வரி விளக்கிற்கு இடம் இல்லாமல் போனது.

image

இதன்பின் கடந்த சில ஆண்டுகளாக தமிழ் இயக்குனர்கள் திரைப்படங்களுக்கு தமிழ் அல்லாத மொழிகளிலும் தலைப்பு வைத்து வருகின்றனர். இதை இவ்வளவு நாள் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் தற்போது விஜய் படத்திற்கு வைக்கப்பட்டுள்ள பீஸ்ட் என்ற தலைப்பு விவாதத்தை தொடக்கியுள்ளது. குறிப்பாக இதற்கு முன் விஜய் நடித்த சர்கார், பிகில், மாஸ்டர் ஆகிய படங்களுக்கும் தமிழ் அல்லாத மொழியில் தலைப்பு வைத்துள்ளானர் என பொது தளத்தில் உள்ளவர்களும், ரசிகர்கள் அல்லாத நடுநிலையாளர்களும் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும் இந்த விவகாரத்தில் விஜய் தலையிட்டு தலைப்பை தமிழில் வைக்க வலியுறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

விஜய் படம் தவிர சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர், டான், விக்ரம் நடிக்கும் கோப்ரா உள்ளிட்ட பல படங்களுக்கும் தமிழ் அல்லாத மொழிகளில் தலைப்பு வைத்துள்ளனர். அதையும் மாற்ற வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.

அதேசமயம் தன்னுடைய கதைக்கு என்ன தலைப்பு வைக்க வேண்டும், வசனம் வைக்க வேண்டும் என்பது படைப்பாளிகளின் கருத்து சுதந்திரம். அதில் தலையிட்டு தலைப்பை மாற்ற சொல்வது, காட்சிகளை நீக்க சொல்வது கருத்து சுதந்திரத்தை நெரிக்கும் செயல் என்று சினிமா துறையினர் கூறுகின்றனர்.

தமிழ் சினிமாவில் அஜித், சூர்யா உள்ளிட்ட நடிகர்களின் படங்களுக்கு முடிந்த வரை தமிழ் பெயர்களை தலைப்பாக வைக்கப்படுகிறது. இதை அனைத்து படக்குழுவினரும் பின்பற்ற வேண்டும் என்று பலரும் வேண்டுகோள் வைக்கின்றனர்.

-செந்தில் ராஜா

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.