‘விளையாட்டாக அமெரிக்க அதிபர் ஆவேன்’ என்று சொன்ன ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன் எனப்படும் `தி ராக்’-கிற்கு நிஜமாகவே அந்த வாய்ப்பு கிடைக்கும் அளவுக்கு அந்நாட்டு மக்கள் அவருக்கு கருத்துக் கணிப்பு ஒன்றில் ஆதரவளித்துள்ளனர்.

தொழில்முறை மல்யுத்த வீரரும், ஹாலிவுட் சினிமா நடிகருமான டுவைன் ஜான்சனை பலருக்கும் ‘தி ராக்’ என சொன்னால்தான் தெரியும். அவர் அண்மையில் ஒரு பத்திரிகை நிறுவனத்துடனான பேட்டியில், ‘மக்கள் விரும்பினால் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட நான் தயார்’ எனத் தெரிவித்துள்ளார். இருந்தாலும் தனக்கு மக்களின் ஆதரவு அவசியம் எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.

இதுதொடர்பாக மேலும் பேசிய ராக் “அமெரிக்காவைவும், அதன் மக்களையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பது எனது குறிக்கோள். எனது குறிக்கோளை மக்களும் விரும்பினால் நிச்சயம் நான் அதை தயங்காமல் செய்வேன்” என அவர் தெரிவித்துள்ளார். அதிபர் தேர்தலில் அவர் எந்த கட்சிக்காக போட்டியிடுவார் என்பது குறித்த விவரங்கள் ஏதும் அவர் சொல்லவில்லை. அமெரிக்காவில் செலிபிரிட்டிகள் அரசியல் களத்தில் தடம் பதிப்பது புதிதல்ல. அர்னால்டு, ரொனால்டு ரீகன், ட்ரம்ப் ஆகியோர் ஆட்சி அதிகாரத்தில் இருந்துள்ளனர்.

இதற்கிடையேதான், ராக் அதிபராவது தொடர்பான செய்திகள் மீண்டும் இணையத்தில் வட்டமடிக்கத் தொடங்கியுள்ளன. சமீபத்தில் அடுத்த அதிபர் தொடர்பாக அமெரிக்காவில் நடந்த ஒரு கருத்துக் கணிப்பு, இதற்கு விதை போட்டுள்ளது. இந்தக் கருத்து கணிப்பில் 46% அமெரிக்கர்கள் ராக் அதிபராக வருவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்தச் செய்திகள் வெளியாக, அதனை மேற்கோளிட்டு ராக் நன்றி தெரிவித்துள்ளார்.

அதில், “அமெரிக்காவை நான் மனதார நேசிக்கிறேன். இந்த நாட்டில் எனக்கு கிடைத்த வாய்ப்புகளுக்காக, நான் நிறைய நன்றிக்கடன் பட்டுள்ளேன். நான் ஓர் அரசியல்வாதி கிடையாது. அதேபோல் அரசியல் ஆர்வம் கொண்டவனும் கிடையாது. அப்படி இருக்கையில், 46 சதவீத அமெரிக்கர்கள் நான் அதிபராக வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்பது என்னை ஊக்கப்படுத்தவும், விஷயங்களை கூர்ந்து கவனிக்கவும், கற்றுக்கொள்ளவும் தூண்டுகிறது. எனக்கு ஆதரவாக வாக்களித்தவர்களுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்” என்று நெகிழ்ந்து பேசியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.