தமிழ்நாட்டில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கை மறைக்கப்படுகிறது என அறப்போர் இயக்கத்தினர் கூறியுள்ளனர். இதனை ஆய்வொன்று மேற்கொண்டு, சில தரவுகளுடன் அவர்கள் முன்வைத்துள்ளனர். இதுபற்றிய தங்களின் அறிக்கையில், அவர்கள் குறிப்பிட்டிருக்கும் சில முக்கியமான தரவுகள், இங்கே விரிவாக காணலாம்.

image

அறப்போர் இயக்கத்தினரின் அறிக்கையில், முக்கியமான சில தகவல்களும், தரவுகளும்:

  • 2021 ம் ஆண்டு, குறிப்பிட்ட 6 மருத்துவமனைகளில் ஜனவரி – மார்ச் மாதத்துக்குள் ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கை தரவுகள் பெறப்பட்டன. அதில், அந்த காலத்தில் ஒரு மாத இறப்பு எண்ணிக்கை, சுமார் 2000 என இருந்திருப்பது தெரியவந்தது. ஆனால் ஏப்ரல் 2021ல், இறப்பு எண்ணிக்கை 3009 என்றும் – மே 2021ல் இதே எண்ணிக்கை 8690 என உயர்ந்துள்ளது.

ஆக, கடந்த சில மாதங்கள் மற்றும் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இவ்வருட ஏப்ரல் மற்றும் மே மாதம் இறப்பு எண்ணிக்கை மிக அதிகமாகியுள்ளது. அதிலும், மே மாதத்தின் இறப்பு எண்ணிக்கை, கடந்த மாதங்கள் மற்றும் ஆண்டுகளின் எண்னிக்கையை விட 4 மடங்கு அதிகமாக உள்ளது. 

  • நாங்கள் தரவுகள் பெற்ற 6 மருத்துவமனைகளில், 2021 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நிகழ்ந்த இறப்புகள் 11699. இது, 2019 ஏப்ரல் மற்றும் மே மாதத்தை விட 7262 அதிகமாகவும்; 2020 ஏப்ரல் மற்றும் மே மாதத்தை விட 8438 அதிகமாகவும் உள்ளது. ஆக, எங்கள் கணிப்புப்படி, இந்த மருத்துவமனைகளில், இந்த இரு மாத இடைவெளிக்குள் ஏற்பட்ட கொரோனா இறப்புகள் – 7262 முதல் 8438 வரை இருக்கக்கூடும்.

ஆனால், ஜூன் 13, 2021 கணக்குப்படி தமிழ்நாடு அரசின் செய்திக்குறிப்பில், இம்மாதங்களில் இம்மருத்துவமனைகளில் ஏற்பட்ட இறப்புகள், 863 மட்டுமே. நாங்கள் கண்டறிந்த மரண எண்ணிக்கையை, சுகாதாரத்துறையினர் வெளியிட்ட எண்ணிக்கையை விட 13.7 மடங்கு அதிகமாக உள்ளது. 

image

இந்த 6 மருத்துவமனைகளில், நாங்கள் கண்டறிந்த கோவிட் மற்றும் கோவிட் சார்ந்த இணை சிக்கல்களால் ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கை தரவும், சுகாதாரத்துறை வெளியிட்ட இறப்பு எண்ணிக்கையை விட 8.4 முதல் 9.8 மடங்கு அதிகமாக இருக்குமென எங்கள் ஆய்வில் தெரிகிறது.

அதாவது, சுகாதாரத்துறை தரவு, நிலவரத்தை விட 8.4 முதல் 9.8 மடங்கு குறைவாக வெளியிட்டிருக்கக்கூடும். மாநில அளவில் இதை பொறுத்தி பார்த்தால், அரசு வெளியிட்டுள்ள இறப்பு எண்ணிக்கையான 12,800 ஒட்டிய மரண எண்ணிக்கை, 1,08,108 முதல் 1,26,126 என உயரலாம்.

எங்கள் ஆய்வின் கண்டுபிடிப்பின் அடிப்படையில், இறப்புச் சான்றிதழ்கள் – இறப்பு சார்ந்த தகவல் மற்றும் தமிழகத்திலுள்ள அனைத்து மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் நிகழ்ந்த இறப்புகள் ஆகியவற்றை அரசாங்கம் இணையத்தில் வெளிப்படைத்தன்மையோடு வெளியிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். மேலும், இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் இறுதி இறப்பு சான்றிதழ்களில், ஐசிஎம்ஆர் விதிகளின்படி இறப்புக்குப்பின் மருத்துவமனைகள் அளிக்கும் இறப்புக்கான காரணமும், பதியப்பட வேண்டும்.

இவற்றை மேற்கொள்ளவில்லையென்றால், அரசு வழங்கும் இழப்பீட்டு தொகையை வாங்க தகுதியானவர்கள், பெருமளவில் பாதிக்கப்படுவர். குறைவான இறப்பு எண்ணிக்கைகள் திருத்தப்படும் வரை, பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் கோவிட் காரணமாக குடும்பத்தினரை இழந்தும் இழப்பீடு பெற முடியாமலும் தவிக்கும். ஆகவே அரசு உடனடியாக இதை கணக்கில் கொள்ள வேண்டும்.

கோவிட் காலத்தில் நடந்த மரணங்கள் அனைத்தையும் தணிக்கை செய்யவும், U07.1 மற்றும் U07.2 (கொரோனாவால் நேரடியாக ஏற்படும் உயிரிழப்பு மற்றும் கோவிட் ஏற்படுத்திய இணை பாதிப்புகளின் தாக்கத்தால் ஏற்படும் உயிரிழப்பு) என கோவிட் இறப்பு கோடுகளின் மூலமாக இறந்தவருக்கு இறப்பின் காரணத்துடன் மருத்துவ சான்றிதழ் வழங்க தனிச்சையாக ஆணையம் ஒன்றை அரசு அமைக்க வேண்டும். இந்த ஆணையத்தில், கோவிட்டால் இறந்தோரின் குடும்பத்தினரின் கோரிக்கைகள், புகார்கள் பெறப்பட்டு அவை தீர்த்துவைக்கப்பட வேண்டும்.

image

இவையனைத்தும் நடைமுறைப்படுத்தப்படும்போது, இந்தளவுக்கு கொரோனா இறப்புகளை குறைத்து காண்பித்து தவறு செய்த அதிகாரிகளை, பொறுப்புடைமையாக்க வேண்டும் இந்த அரசு” எனக்கூறப்பட்டுள்ளது.

இந்த இயக்கத்தினர் ஆய்வு மேற்கொண்டிருக்கும் ஆறு மருத்துவமனைகள்: மதுரை ராஜாஜி மருத்துவமனை, கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, திருச்சியின் மகாத்மா காந்தி நினைவு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, வேலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை.

இவை அனைத்துமே தமிழ்நாட்டின் முக்கிய மருத்துவமனைகள், அதுவும் அரசு மருத்துவமனைகள் என்பதால், இந்த விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

அறப்போர் இயக்கத்தினர் வெளியிட்டிருக்கும் அந்த அறிக்கையை இங்கு காணலாம்:

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.