நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் நீண்ட அழகிய தந்தத்துடன் உலவி வந்த வலிமையான ஆண் காட்டுயானையை இந்த பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தின் பெயருடன் சேர்த்து `சில்வர் மான்ஸ்ட்ரா’ என பெயரிட்டு அழைத்து வந்தனர் உள்ளூர் மக்கள். சுமார் 30 வயது மதிக்கத்தக்க இந்த யானை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காயத்துடன் தென்பட்டது. மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

காயத்துடன் அவதிப்பட்டுவரும் யானை

மற்ற காட்டுயானைகளோடு ஏற்பட்ட மோதலில் காயம் ஏற்பட்டதாக கூறிய வனத்துறையினர், பழங்களில் மாத்திரைகளை மறைத்து வைத்து வழங்கினர். தொடர்ந்து காயத்துடனேயே தென்பட்ட இந்த காட்டுயானைக்கு அவ்வப்போது பழங்களில் மாத்திரைகளை மட்டுமே கொடுத்து வந்தனர்.

இரண்டு ஆண்டுகளில் அந்த காயம் பெரிதாகி, யானையின் பின் பகுதி முழுக்க புரையோடி புழு வைத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அவதிப்பட்டு வந்தது. “இந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து சிகிச்சை அளித்தால் உயிரிழக்க வாய்ப்புள்ளது” என தெரிவித்த வனத்துறையினர் சிகிச்சை அளிக்க தயக்கம் காட்டியே வந்தனர்.

காயத்துடன் அவதிப்பட்டுவரும் யானை

Also Read: `என்ன பண்றதுன்னு எங்களுக்கே தெரியல!’ – 2 ஆண்டுகளாகத் தவிக்கும் காட்டுயானை; திணறும் வனத்துறை!

மிக மோசமான காயத்துடன் அவதிப்பட்டுவரும் இந்த யானைக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் வலியுறுத்தி வந்தனர். நமது விகடனில் இந்த யானையின் நிலை குறித்து செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில், யானையைப் பிடித்து சிகிச்சை அளிக்க முடிவு செய்து வனத்துறையினர், கடந்த மூன்று நாள்களாக முயற்சி மேற்கொண்டு வந்தனர். மேலும் யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக முதுமலையில் உள்ள அபயரண்யம் பகுதியில் `க்ரால்’ எனப்படும் மரக்கூண்டை அமைத்து வந்தனர். இன்று காலை புத்தூர் வயல் பகுதியில் தென்பட்ட யானையை, கும்கி உதவியுடன் கால்நடை மருத்துவர்கள் பிடித்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

காயத்துடன் அவதிப்பட்டுவரும் யானை

யானை பிடிக்கப்பட்டது குறித்து பேசிய வனத்துறையினர், “ஈப்பங்காடு பகுதியில் உள்ள ஒரு தனியார் காப்பி தோட்டத்தில் யானை இருப்பதை உறுதி செய்தோம். விஜய், சுமங்களா ஆகிய இரண்டு கும்கி யானைகள் அதன் பாகன்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் குழுவோடு யானையை சுற்றி வளைத்து மயக்க ஊசி செலுத்தாமலேயே காலில் கயிற்றை பிணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தோம். காலில் வீக்கம் அதிகமாக உள்ளது. அறுவை சிகிச்சைக்காக சிறப்பு கால்நடை மருத்துவர்களை வரவழைத்துள்ளோம். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது”என்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.