தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. மே 2-ம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நள்ளிரவுக்குள் முடிக்கப்பட்டு வெற்றி அறிவிக்கப்பட்ட நிலையில், விராலிமலை தொகுதியில் மட்டும் 4-க்கும் மேற்பட்ட முறை வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக்கோரி தி.மு.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு சர்ச்சைகளுக்கிடையே கடைசியாக மே 3-ம் தேதி மதியம் வெற்றி அறிவிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் 23,642 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

விஜயபாஸ்கர்

இந்த நிலையில்தான், விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் பழனியப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது வழக்கு தொடர்ந்துள்ளார். பழனியப்பன் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் தாக்கல் செய்த மனுவில், “விஜயபாஸ்கர் தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்களர்களுக்குப் பரிசு பொருட்கள், பணம் ஆகியவற்றை விநியோகித்துள்ளார். மக்களின் வாக்குகளைக் கவர தேர்தல் ஆணையம் நிர்ணயித்ததற்கு அதிகமாகவும் செலவு செய்துள்ளார். அதோடு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் கட்டுப்பாட்டுக் கருவிகளில் முறைகேடு செய்துள்ளார். பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு தான் விஜயபாஸ்கர் வெற்றி பெற்றுள்ளார். எனவே, அவரின் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்” என்று மனுவில் குறிப்பிட்டிருக்கின்றனர். இந்த மனுவானது விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கு தொடர்பாக பழனியப்பனிடம் பேசினோம், “தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்தே விஜயபாஸ்கர் முறைகேடுகளையும் ஆரம்பித்துவிட்டார். பொங்கல் பானை, வேட்டி சேலை, ஸ்கூட்டி, கண்கண்ணாடி வழங்குறதுன்னு விதிமுறைகளை எல்லாம் மீறி ஏகப்பட்ட பரிசுப்பொருள்களை வாக்காளர்கள்கிட்ட கொண்டு சேர்த்தார். மாவட்ட அதிகாரிகளை எல்லாம் தனக்குச் சாதமாக இருக்கும்படி பார்த்துக்கொண்டார். தனக்கு ஆதரவான அதிகாரியை ஒருவாரத்திற்கு முன்பு விராலிமலை தொகுதிக்கு மாற்றி விராலிமலை தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலராக நியமித்தார்.

வாக்காளர்களுக்கு கொடுக்கும் பரிசுப்பொருள்கள் குறித்து எந்த மனு கொடுத்தாலும் அதற்கு நடவடிக்கை இல்லை. வாக்கு எண்ணிக்கை முடிந்து பாதுகாப்பு அறையில் வாக்கு எண்ணிக்கை வைக்கப்பட்ட போது, விராலிமலை தொகுதிக்குட்பட்ட வாக்கு இயந்திரத்திரம் ஒன்றின் சீல் வைக்கப்பட்ட பேப்பர் நாடா வெளியே கிடந்தது. இதுபற்றி கேள்வி எழுப்பியபோது, மாவட்ட அதிகாரிகள் சாக்குபோக்கு சொல்லி எங்களது மனுவை எடுத்துக் கொள்ளவில்லை.

விஜயபாஸ்கர்

வாக்கு எண்ணிக்கை அன்றும் கிட்டத்தட்ட 4 வாக்குப்பதிவு இயந்திரங்களில் முகவர்களின் ஆவணங்களில் இருந்த எண்களும் வாக்குப்பதிவு இயந்திரத்திலிருந்த எண்ணும் மாறுபட்டிருந்தது. உச்சபட்சமாக ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சணல் கொண்டு கட்டப்பட்டிருந்தது. இதனை எல்லாம் ஆதாரத்துடன் கூறி வாக்கு எண்ணிக்கையை அன்று நிறுத்தக் கோரினோம்.

மேலும், மே 3-ம் தேதி மதியம்தான் விராலிமலை தொகுதி வாக்குப்பதிவு எண்ணிக்கை எண்ணி முடிக்கப்பட்டது. ஆனால் முன்னதாக விஜயபாஸ்கரின் வெற்றியை உறுதிசெய்த அதிகாரிகள் மே 2-ம் தேதியைக் குறிப்பிட்டு வெற்றிச் சான்றிதழை தயாரித்து வைத்துவிட்டனர். இப்படி பல்வேறு முறைகேடுகள் செய்துதான் விஜயபாஸ்கர் வெற்றியைப் பெற்றுள்ளார். எனவே தான் அந்த வெற்றியை நிறுத்திவைக்கோரி நீதிமன்றத்தை நாடி இருக்கிறேன்” என்கிறார்.

இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பில் பேசினோம், “வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நாளிலே ஒவ்வொரு சுற்றிலும் விஜயபாஸ்கர் தான் முன்னிலையில் இருந்தார். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும் அளவுக்கு தொகுதிகளை கைபற்றிய பின்னர் தான் விஜயபாஸ்கர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. திமுக ஆட்சி அமைக்கும் நிலையில் அதிகாரிகள் அதிமுக வேட்பாளரான விஜயபாஸ்கருக்கு ஆதரவாக செயல்பட வேண்டிய அவசியம் என்ன? இது, சுய லாபத்துக்காக திமுக வேட்பாளர் தொடர்ந்து வழக்கு. மற்றப்படி வாக்கு எண்ணிக்கையில் எந்த குளறுபடியும் நடக்கவில்லை” என்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.