தப்பிய சிவசங்கர் பாபா?!

சிவசங்கர் பாபா

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, பள்ளி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டது. பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டு, போலீஸார் விசாரித்து வரும் நிலையில், உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிவசங்கர் பாபா மாரடைப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து, சிவசங்கர் பாபாவிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி டிஎஸ்பி குணவர்மன் தலைமையில் தனிப்படை நேற்று டேராடூன் விரைந்தது. இந்த நிலையில் அவர் இப்போது அங்கு இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. சிவசங்கர் பாபா வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் சிபிசிஐடி போலீசார் நேற்று லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடதக்கது.

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 62,224 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் தொடர்ந்து ஒன்பதாவது நாளாக கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 2,96,33,105 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 2,542. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,79,573-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா சிகிச்சைப் பிரிவு

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,83,88,100-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 8,65,432 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 1,07,628 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 26,19,72,014 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 28,00,458 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.