கந்துவட்டிக் கும்பலின் மிரட்டலால் காவல்துறையினருக்கு மொபைல் வீடியோவில் வாக்குமூலத்தை முகமது அலி என்பவர் பதிவு செய்து, அனுப்பிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மதுரை மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

முகமது அலி

மதுரை மகபூப்பாளையத்தை சேர்ந்த 33 வயதான முகமது அலிக்கு, மனைவியும் 8, 3 வயதில் இரு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், `கந்து வட்டிக்காரர்கள் தொடர்ந்து மிரட்டியதாக’ வீடியோவில் பேசிவிட்டு நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

முகமது அலியின் மனைவி அளித்த புகாரைத் தொடர்ந்து மதுரை எஸ்.எஸ்.காலனி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். கந்துவட்டி கேட்டு மிரட்டுகிறார்கள் என்று ஏற்கனவே இந்த காவல் நிலையத்தில் முகம்மது அலி புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சொல்கிறார்கள்.

தற்கொலை

கொரோனா ஊரடங்கு காலத்தில் வருமானம் இன்றி தவிப்பதால் வாங்கிய கடனையோ, அதற்கான வட்டியையோ திருப்பி செலுத்த முடியாமல் பெரும்பாலான மக்கள் நெருக்கடிக்கு ஆளாகி வரும் நிலையில் கந்துவட்டிக் கும்பலின் அடாவடி மதுரையில் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குறை கூறுகிறார்கள்.

நம்மிடம் பேசிய சமம் குடிமக்கள் இயக்கத்தின் மாநிலத்தலைவர் வழக்கறிஞர் சி.ஜே.ராஜன், “தமிழகத்தில் கந்துவட்டி காரணமாகத் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதிலும் கொரோனா காலத்தில் அதிகரித்துள்ளது. கொரோனா ஊரடங்கால் வேலை இழந்து, ஊதிய குறைப்புக்கு உள்ளாகி அவதிப்படுவோர் அதிகம்.

இவர்கள் வேறு வழியில்லாமல் குடும்ப செலவுக்காக கந்துவட்டிக்கு கடன் வாங்குகிறார்கள். சில நாட்களில் வட்டி செலுத்த முடியாமல் கந்து வட்டிக்காரர்களின் கொடுமைக்கு ஆளாகி இறுதியில் தற்கொலையை நாடுகிறார்கள்.

சி.ஜே.ராஜன்

முகமது அலி தன் வீடியோ பதிவில், செல்வகுமார் என்பவரிடம் ரூ 5,00,000 கடன் வாங்கி ரூ 6,00,000 வரை திருப்பி செலுத்தியும் கூடுதலாகப் பணம் கேட்டு தொல்லை செய்ததாகவும், தன்னால் சமாளிக்க முடியவில்லை, வீட்டிற்கு வந்து மனைவி குழந்தைகளை அவதூறாகப் பேசுகிறார்கள் மிகவும் மோசமாக நடந்து கொள்கிறார்கள் எனவும் கூறியுள்ளார்.

மேலும் தன் தற்கொலைக்கு வழக்கறிஞர் செல்வக்குமார், ஜெயேந்திர சிங், காமாட்சி, மாரிமுத்து போன்றோர் முக்கியக் காரணம் என்றும் சொல்கிறார். பிள்ளைகளை நல்லபடியாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று தந்தையிடம் வேண்டுகோளும் வைக்கிறார்.

முகமது அலி

என்னோடு முடியட்டும், வேறு யாரும் இதுபோன்ற கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்யும் நிலை வரக்கூடாது, மாநகர காவல்துறை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மக்களின் குறைகளைத் தீர்த்து வைக்கும் முதல்வர் ஸ்டாலின் தன் மனைவி குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென்று கண்ணீர் மல்க பதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை போன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கந்துவட்டி கொடுமை தாங்க முடியாமல் பலர் உயிரை மாய்த்துக் கொள்ளும் அவல நிலை தொடர்கிறது.

கந்து வட்டி கொடுமை

சில ஆண்டுகளுக்கு முன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பே குடும்பத்துடன் தீவைத்து தற்கொலை செய்துகொண்ட கொடூர சம்பவங்கள் தமிழகத்தில் நடந்துள்ளன. இதனை முழுமையாகத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.

கந்து வட்டிக் கொடுமையால் சிக்கித் தவிப்பவர்கள் தங்களது சொத்துக்கள், உடமைகள் ஆகியவற்றை இழந்து தவிக்கின்றனர்.

அவர்களது வீட்டிலிருக்கும் பெண்கள், குழந்தைகள் என அனைவரும் அவமானபடுத்தப்படுவதால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்கின்றனர். இச்சூழலில் 2003- ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கந்துவட்டி தடுப்புச் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். முறையாக கண்காணிக்கப்பட வேண்டும்.

குற்றவாளிகள் மேல் உடனே வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும். அப்போதுதான் கந்துவட்டியால் ஏற்படும் தற்கொலைகளை தடுக்கமுடியும். சட்டத்தை முறையாக அமுல்படுத்தாத காரணத்தினால்தான் இது போன்ற துயர சம்பவங்கள் நடக்கின்றன.

கடன்…

இந்த ஊரடங்கு காலத்தில் வேலையிழந்து தவிக்கும் மக்கள் தாங்கள் வாங்கிய கடனை கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நேரத்தில் மக்களிடமிருந்து இ.எம்.ஐ.கள் மைக்ரோ பைனான்ஸ் கடன்கள், கிரெடிட் கார்ட் கடன்கள் போன்றவற்றை கட்டாயப்படுத்தி வசூலிக்க தடை விதிக்க வேண்டும்.

அடியாட்கள் மூலம் கட்டாயப்படுத்தி வசூலிக்க முயல்வர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம் என்கிற நம்பிக்கையை அரசு தெரிவிக்க வேண்டும். முகம்மது அலி தற்கொலைக்குத் காரணமான கந்துவட்டி நபர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து உடனடியாக அவர்கள் கைது செய்யப்பட வேண்டும். பாதிக்கப்படும் மக்கள் எந்தவித அச்சமும் இன்றி அரசுக்கு புகார் தெரிவிக்க மாவட்ட அளவில் சிறப்புக் குழுக்களை அரசு உடனடியாக அமைக்க வேண்டும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.