கொரோனா தொற்றின் வேகம் குறைய ஆரம்பித்திருப்பதையடுத்து, ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகிறது தமிழக அரசு. ஆனால், ‘முழு ஊரடங்கே சரிவர கடைப்பிடிக்கப்படாத சூழலில், இந்தத் தளர்வு நடவடிக்கை தேவையா…’ என எதிர்க்கட்சிகள் எகிறியடிக்கின்றன.

இந்தச் சூழ்நிலையில், ‘இ பாஸ்’ நடைமுறையை ‘இ பதிவு’ என எளிமையாக மாற்றியமைத்து ஊரடங்குத் தளர்வுக்கு தன் பங்கைச் செய்துவரும் ‘தகவல் தொழில்நுட்பத் துறை’ அமைச்சர் மனோ தங்கராஜை சந்தித்தேன்….

” ‘தி பேமிலி மேன் – 2’ தொடரைத் தடை செய்யக்கோருவதில் தமிழக அரசு தீவிரம் காட்டாததன் பின்னணியில் ‘கருத்து சுதந்திர உரிமை’ இருக்கிறதா?”

தி பேமிலி மேன் – 2

”தி பேமிலிமேன் 2 – சீரிஸைத் தடை செய்கிற உரிமை மாநில அரசிடம் இல்லை. இதுபோன்ற தொடர்களை சென்சார் செய்கிற உரிமையும் நம்மிடம் இல்லை. இந்தச் சூழ்நிலையில் இந்த விவகாரத்தை நாம் மத்திய அரசிடம்தான் கொண்டுசெல்ல முடியும். அந்தவகையில், ‘தமிழ் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துகிற விதத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்தத் தொடரை தடை செய்யுங்கள்’ என ஏற்கெனவே கடிதம் எழுதியிருக்கிறோம். அந்தக் கடிதத்தை மறுபடியும் மத்திய அரசுக்கு நினைவுப்படுத்தியிருக்கிறோம். ஊடகம் வாயிலாகவும் நம்முடைய எதிர்ப்பை தொடர்ந்து பதிவு செய்துவருகிறோம்.

‘தி பேமிலி மேன் – 2’ முழுக்க முழுக்க புனைக்கதை என்றால் இந்தப் பிரச்னையே எழுந்திருக்காது. ஆனால், இந்தத் தொடர் ஈழப் போராட்ட வரலாற்றையும் இணைக்கின்ற கதையாக இருக்கும்போது, உண்மைக்கு மாறான தகவல்களை அதில் திணிக்கவோ அல்லது திரித்துப் பேசவோ கூடாது. மனித நேயத்தை நோக்கமாகக் கொண்டு போராடிய ஈழப் போராட்ட வரலாற்றை கருத்து சுதந்திரம் என்ற பெயரில், கொச்சைப்படுத்தப்படுவதை எப்படி நாம் ஏற்றுக்கொள்ள முடியும்?”

”தமிழக அரசு, மத்திய அரசுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடிக்காமல், ‘ஒன்றிய அரசு’, ‘ஜி.எஸ்.டி’ என தொடர்ந்து சண்டைக்கோழி மனப்பான்மையோடே அணுகிவருவது சரிதானா?”

”இணக்கம், சுணக்கம் என்றெல்லாம் இல்லாமல், கொள்கையின் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது தமிழக அரசு. இன்றைய மத்திய அரசோ, பா.ஜ.க ஆளுகிற மாநிலங்களில் ஒருவகையான அணுகுமுறையையும், மற்ற மாநிலங்களில் வேறு விதமான அணுகுமுறையையும் கையாண்டுவருகிறது. ஜனநாயக ரீதியிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கவிழ்ப்பதில் அவர்கள் காட்டுகிற முனைப்பும், எம்.எல்.ஏ-க்கள் பர்ச்சேஸ் செய்யும் அசிங்கமான அரசியல் செய்கிறார்கள்.

நிர்மலா சீதாராமன்

கொரோனா பேரிடரில் தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்திலும்கூட ஜி.எஸ்.டி-யில் நமக்கு வரவேண்டிய பங்கை-உரிமையைக்கூட நாம் கேட்டுப்பெற வேண்டிய நிலையில் மத்திய அரசு வைத்திருக்கிறது என்றால் எப்படி இணக்கம் வரும்?

அடுத்து, ‘யூனியன் கவர்ன்மென்ட்’ என்ற ஆங்கில வார்த்தைக்கு ‘ஒன்றிய அரசு’ என்றுதானே தமிழ்ப்படுத்த முடியும். இதை எப்படி தவறு என்று சொல்கிறீர்கள்? ‘மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி’ என்ற அண்ணாவின் கோரிக்கை இந்தியா முழுமைக்கும் வெகுவிரைவில் பரவுவதற்கான சூழலை மோடி அரசாங்கமே உருவாக்கித்தருகிறது!”

”தமிழ் மொழி – தமிழர் நலன் விஷயத்தில் தொடர்ச்சியாகவே மத்திய பா.ஜ.க அரசு பாராமுகம் காட்டிவருகிறது என்கிறீர்களா?”

”தமிழ்நாடு மட்டுமல்ல…. கேரளா, கர்நாடகா, ஆந்திரா என எந்தவொரு மாநில மொழி, பண்பாடு. நாகரிகம், கலை, வரலாற்றுக்கும் மத்திய அரசு மதிப்பளிப்பதாகவே தெரியவில்லை. ஏற்கெனவே இங்கே இருந்துவரக்கூடிய இந்தப் பன்மைத்துவத்தை ஏற்றுக்கொள்ளவே மோடி அரசு தயங்குகிறது. அதனால்தான் பன்மைத்துவத்துக்கும் மக்களின் உணர்வுகளுக்கும் ஏற்படுகிற அச்சுறுத்தல்கள் குறித்து அவர்கள் கவனம் கொள்வதும் இல்லை. மாறாக அவர்களுடைய விருப்பத்தை மாநில அரசுகள் மீது திணிப்பதில் மட்டும் கூடுதல் அக்கறை காட்டிவருகிறார்கள்.

நரேந்திர மோடி – அமித் ஷா

ஈழப் போராட்டம் என்பது நீதிக்காகவும் சமத்துவ உரிமைக்காகவும் நடைபெற்ற நீண்ட நெடிய வரலாறு. ரத்தமும் சதையுமான அந்தத் தியாக வரலாற்றை யாரும் திரித்துப் பேசக்கூடாது. உலகம் முழுக்கப் பரவிக்கிடக்கும் தமிழ்ச்சமூகத்தின் உணர்வுகளைப் புரிந்துகொள்கிற ஒரு பொறுப்பான அரசாக மோடி அரசு இருந்திருக்குமேயானால், ‘தி பேமிலி மேன் – 2’ விவகாரத்தை சிறப்பாகக் கையாண்டிருக்கும்!”

”தடுப்பூசி கையிருப்பு தகவலை மாநில அரசுகள், பொதுவெளியில் தெரிவிக்கவேண்டாம் என்ற மத்திய அரசின் செய்திக்குறிப்பு வெளியாகியிருக்கும் அன்றே, ‘தமிழகத்தில் தடுப்பூசி சுத்தமாக கையிருப்பில் இல்லை’ என்ற செய்தியும் வெளியாகியுள்ளதே…?”

”தடுப்பூசி இல்லை என்பதுதான் நாட்டுக்கே தெரிகிறதே… எனவே, ‘தடுப்பூசி இல்லை என்று வெளியே சொல்லவேண்டாம்’ என மத்திய அரசு சொல்லத் தேவையே இல்லை.

பேரிடரை எதிர்கொள்வதற்கான தயார் நிலை, பேரிடரின் தாக்கத்தை தணிப்பதற்கான நடவடிக்கை, பேரிடர் மேலாண்மை என இந்த 3 நடவடிக்கைகளில் எந்த ஒன்றையும் இதுவரை மத்திய அரசு சரிவர செய்யவில்லை. காரணம்…. பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான தொலைநோக்குப் பார்வை மோடி அரசிடம் இல்லை.

கோவிட் – 19 தடுப்பூசி

முதல் அலை வரும்போதே, 2-வது அலை குறித்த எச்சரிக்கையை உலக சுகாதார நிறுவனம் விடுத்தது. ஆனால், நமது மத்திய பா.ஜ.க அரசோ, முதல் அலையை கையாண்டதுபோலவே அலட்சியப் போக்கில் 2-வது அலையையும் எதிர்கொண்டது. எனவேதான் ரெம்டெசிவர், ஆக்ஸிஜன், தடுப்பூசி என அனைத்துக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. ‘உலகுக்கே தடுப்பூசி சப்ளை செய்வோம்’ என்று பெருமை பேசி, தனிப்பட்ட 2 கார்ப்பரேட் கம்பெனிகளின் வியாபாரத்தைத்தான் பா.ஜ.க அரசு பெருக்கிக்காட்டியிருக்கிறது. மற்றபடி சொந்த நாட்டு மக்களோ தடுப்பூசி கிடைக்காமல் திண்டாடி வருகிறார்கள்!”

”ஊரடங்கைக் கடைப்பிடிப்பதில், தமிழக அரசு காட்டிவரும் கனிவுதான் தொற்றுப்பாதிப்பை குறைக்கமுடியாததற்குக் காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனவே?”

”கொரோனா ஊரடங்கு குறித்த முடிவுகள் என்பது முதல்வர் தன்னிச்சையாக அல்லது சுயமாக எடுத்த முடிவு அல்ல. அனைத்துக்கட்சியினரையும் கூட்டி ஆலோசித்ததோடு, இதற்கென அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழுவிடம் ஆலோசனைக் கேட்டுத்தான் முடிவெடுக்கப்பட்டது. தளர்வுகளுடன் கூடிய தற்போதைய ஊரடங்கு நடவடிக்கையும்கூட பல்வேறு தரப்பிலான ஆலோசனைகளுக்குப் பிறகே எடுக்கப்பட்டுள்ளது!

ஊரடங்கு தளர்வு

அரசாங்கம் கட்டுப்படுத்துகின்ற முழு அடைப்பு என்பது ஒன்று; மக்களாகப் புரிந்துகொண்டு தாங்களாகவே கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதென்பது மற்றொன்று. அடுத்ததாக, கொரோனா முழு அடைப்பு என்பது அரசியல் காரணங்களுக்கானது அல்ல. எனவே இதில் வன்முறைக்கோ அல்லது காவல்துறையின் கடுமையான கண்டிப்புகளுக்கோ இடம் இல்லை. எனவேதான், ‘கடுமையான நடவடிக்கைகள் இல்லாமல், மக்களுக்குப் புரிகிறவிதத்தில் எடுத்துச்சொல்லி முழு ஊரடங்கை செயல்படுத்துங்கள்’ என்று முதல்வரும் காவல்துறையிடம் அறிவுறுத்தியுள்ளார்..

2 வார முழு ஊரடங்குக்குப் பிறகு தொற்றின் வேகம் கணிசமாகக் குறைந்திருக்கிறது. ஆனால், மக்களின் பொருளாதார நிலையும் சற்று தேக்கமடைந்ததால், அவர்களுக்கு 4 ஆயிரம் நிவாரணம் தொகை அளிக்கப்பட்டு, ஊரடங்கில் தளர்வு நிலையும் பிறப்பிக்கப்பட்டது. எனவே, இப்போதும்கூட தொற்றுப்பாதிப்பை மனதில் வைத்து மக்கள் எச்சரிக்கையோடு செயல்படவேண்டும்!”

”தமிழ்நாட்டைவிடவும் குறைந்த பாதிப்பு கொண்ட மாநிலங்களே ‘ஊரடங்கு தளர்வை’ அறிவிக்காதபோது, தமிழ்நாடு ஏன் தளர்வு அறிவித்தது என மருத்துவர் ராமதாஸ் கேட்கிறாரே?”

”பிரச்னையின் தீவிரத்தைப் பொறுத்து, ஒவ்வொரு மாநிலமும் தனித்தனியே முடிவுகளை எடுத்து செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், சிகிச்சைப் பெறுவதற்கு வசதியாக படுக்கைகளின் எண்ணிக்கையைக் கூட்டினோம், ஆக்ஸிஜன் சப்ளையை உறுதிப்படுத்தினோம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.

ராமதாஸ்

அதேசமயம் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட பொருளாதாரப் பிரச்னைகளையும் சமாளித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், தளர்வுகளை அறிவிக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டது. ஊரடங்கை மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்தியதால்தானே இன்றைக்கு தமிழ்நாட்டில், தொற்றின் வேகம் பெருமளவில் குறைந்திருக்கிறது!”

Also Read: சென்னை: பணத்துக்காக கொலை..? கொரோனா சிகிச்சையிலிருந்த பேராசிரியர் மனைவி மரணத்தில் திடீர் திருப்பம்!

”ஒரே நேரத்தில், 60 லட்சம்பேர் ‘இ-பதிவு’ செய்ததால், இணையம் முடங்கிவிட்டது என்று நீங்களே சொல்கிறீர்கள். இப்படி 60 லட்சம் பேர் வீட்டைவிட்டு வெளியே வந்தால், அது எப்படி ஊரடங்கு ஆகும்?”

”கொரோனாவைத் தடுக்கும் போராட்டத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையும் ஓர் அங்கமாக இருக்கிறது…. அவ்வளவுதான். மற்றபடி மக்களின் முழு பங்களிப்போடுதான் இந்தப் பிரச்னையை நாம் முறியடிக்க முடியும்.

மனோ தங்கராஜ்

கேரளாவில், கொரோனா முதல் அலையின்போது தன்னார்வலர்கள் கொண்ட குழுவை ஏற்படுத்தி மக்களின் துணையோடு வென்றெடுத்தார்கள். அதேபோல், மக்களின் பங்களிப்போடு கொரோனாவை வெல்லும் திட்டம் குறித்து எங்கள் துறை சார்பில், வல்லுநர்களோடு பேசிவருகிறோம். கொரோனா விழிப்புணர்வு பணியில் கிராம அளவிலேயே தன்னார்வலர்களை ஈடுபடுத்துவது மற்றும் ஆக்ஸிஜன் இருப்பு, காப்பீடு வசதி, படுக்கை வசதி என மருத்துவ உதவிகளை அறிந்துகொள்வதற்கான மென்பொருள் வடிவமைப்பு உள்ளிட்ட பணிகள் நடந்துவருகின்றன. விரைவில் முதல்வரிடம் ஒப்புதல் பெற்று இவை நடைமுறைக்கு வரும்!”

Also Read: தஞ்சாவூர் : மாற்றப்பட்ட கலெக்டர் கோவிந்தராவ் ஐ.ஏ.எஸ் – பிரிவைத் தாங்க முடியாத மக்கள் உருக்கம்!

”புதிதாக தொடங்கப்பட்ட முதல்வர் தனிப்பிரிவு இணையதளத்தில், 2013-ம் ஆண்டு கேட்கப்பட்ட கேள்விகளெல்லாம் இருப்பதாக சர்ச்சை கிளம்பியிருக்கிறதே…?”

”தமிழக அரசின் ஓர் அங்கமாக ‘தகவல் தொழில்நுட்பத் துறை’ என்று ஒரு தனித்துறையே இயங்கிவருகிறது. ஆனால், கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் அரசு சம்பந்தப்பட்ட எந்தவொரு பணியும் இந்தத் துறையின் வாயிலாக செயல்படுத்தப்படவில்லை. அதனால்தான் தகவல் தொழில்நுட்ப துறை குறித்த இந்திய அளவிலான ஒப்பீட்டில், தமிழ்நாடு கடைசி இடத்தில் இருக்கிறது.

மு.க.ஸ்டாலின்

ஆனால், இன்றைக்கு ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தில் பெறப்பட்ட 4 லட்சத்து 40 ஆயிரம் மனுக்களும் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டு அதுகுறித்த மேல் நடவடிக்கைகளும் இணையத்தில் முறையாகப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. மிக விரைவில் தமிழ்நாடு தகவல்தொழில் நுட்பத் துறையின் செயல்பாடுகள் இந்திய அளவில் மிகச்சிறந்த உதாரணமாகத் திகழப்போகிறது. எனவே, இப்போது குறை கூறுபவர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து எங்கள் பணியைப் பார்த்துவிட்டுப் பேசட்டும்!”

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.