1996-ல் பஞ்சாயத்து ராஜ் சட்டத் திருத்தத்துக்குப் பின் நடைபெற்ற அந்தத் தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம், ‘மக்கள் நேரடியாக வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர்’ என்ற பெருமையைப் பெற்றார் மு.க. ஸ்டாலின். இப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராகியிருக்கும் ஸ்டாலின், 25 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி மேயராக இருந்தபோது, சென்னையை அழகுபடுத்தும் விதமாக, ‘சிங்காரச் சென்னை’ திட்டத்தைக் கொண்டுவந்தார்.

சென்னை மாநகர மேயராக மு.க.ஸ்டாலின்

”சென்னையை சிங்கார சென்னையாக மாற்றுவேன்” என்ற உறுதிமொழியுடன் ஸ்டாலின் அப்போது தொடங்கிய இத்திட்டத்தின் மூலம் மேம்பாலங்கள், சிறிய பாலங்கள், பூங்காக்கள், நீரூற்றுகள், கடற்கரைகள் அழகுபடுத்துதல், சாலை விரிவாக்கம் எனப் பல்வேறு பணிகள் சென்னையின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் செயல்படுத்தப்பட்டன.

2001-ல் ஆட்சியைப் பிடித்த அதிமுக, இத்திட்டத்தைக் கைவிட்டது. 2006-ல் திமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்தபோது, செயல்வடிவம் பெறத் தொடங்கியிருந்தது ‘சிங்கார சென்னை’ திட்டம். மெட்ரோ ரெயில் வேலைகளும் தொடங்கின. ஆனால், 2011-ல் ஆட்சி மாற்றத்தால் ‘சிங்கார சென்னை’ திட்டம் மீண்டும் நின்றுபோனது. கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டிருந்த இத்திட்டம், இப்போது திமுக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் நிலையில் செயல்பாட்டுக்கு வருகிறது.

ஸ்டாலினின் கனவுத் திட்டமான இதன் இரண்டாம் கட்டம், ‘சிங்கார சென்னை 2.0’ என்ற பெயரில் இப்போது புத்துயிர் பெற்றிருக்கிறது. சென்னையில் கொரோனா பரவல் கட்டுக்குள் வரத் தொடங்கியிருக்கும் நிலையில், சென்னை மாநகரின் உள்கட்டமைப்பு வசதிகளை இத்திட்டத்தின் மூலம் மேம்படுத்தும் முன்னெடுப்புகள் தொடங்கியிருக்கின்றன.

சென்னை மாநகராட்சி

இங்கிலாந்து அல்லாத காமன்வெல்த் நாடுகளின் மாநகராட்சியைக் காட்டிலும் பழமையானது சென்னை மாநகராட்சி. சென்னை மாநகரத்தை நிர்வகித்துவரும் சென்னை மாநகராட்சி, 1688-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1996-ம் ஆண்டில் மெட்ராஸ் மாநகரம், சென்னை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2011-ம் ஆண்டில் 9 நகரங்கள், 8 பேரூராட்சிகள், 25 பஞ்சாயத்துகள் இணைக்கப்பட்டு, 426 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள பெருநகரமாகச் சென்னை விரிவடைந்தது. 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ம் தேதி, சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 55 கிராமங்களுடன் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 67 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கி, 426 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 3 வருவாய் கோட்டங்களையும், 16 வட்டங்களையும், 122 வருவாய் கிராமங்களையும் கொண்டதாகச் சென்னை மாநகராட்சி பகுதிகள் விரிவாக்கம் செய்யப்பட்டன.

ரிப்பன் மாளிகை

இந்தப் பின்னணியில், 25 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ‘சிங்கார சென்னை’ திட்டத்தின் அடுத்த கட்டமான ‘சிங்கார சென்னை 2.0’ திட்டம் இன்றைக்கு முக்கியத்துவம் பெறுகிறது.

‘ப்ராஜெக்ட் புளூ’

கலை, மரபு, பண்பாடு, கல்வி, சுகாதாரம், விளையாட்டு, போக்குவரத்து மற்றும் இயக்கம், எளிய அணுகல் மற்றும் உள்ளடக்கம் போன்றவைச் சர்வதேசத் தரத்துக்கு மேம்படுத்தப்படும் என்பது இத்திட்டத்தின் அடிப்படைச் செயல்திட்டமாக உள்ளது.

மெரினா கடற்கரை

‘சிங்காரச் சென்னை 2.0’வின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக, நகர அழகுபடுத்தலில் ‘ப்ராஜெக்ட் புளூ’ என்ற பெயரில் கடல் சார்ந்த பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. சென்னை கடற்கரைகளின் விரிவான வளர்ச்சி; நீருக்கடியில் மீன்வளம் மற்றும் நீர் விளையாட்டுகளுக்கான அக்வா மண்டலங்கள்; திருவொற்றியூர் மற்றும் உத்தண்டி உள்ளிட்ட ஆறு இடங்களில் கடற்கரை முகப்பு வளர்ச்சி (இதில், 21.6 கி.மீ. பவளப்பாறைகளின் தலைமுறைக்கு ‘பயோராக்’ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்); மாற்றுத்திறனாளிகளுக்கான கடற்கரைகளைப் பார்க்கும் தளங்கள் எனப் பல்வேறு அம்சங்களை இந்த ‘ப்ராஜெக்ட் புளூ’ உள்ளடக்கியிருக்கிறது.

இவை தவிர ‘சிங்கார சென்னை 2.0’-வில் பரிசீலனையில் உள்ள வேறு சில திட்டங்கள்:

* சென்னை முழுவதும் சுத்தப்படுத்தப்படுவது மட்டுமல்லாமல் கூவம் நதியும், பங்கிங்ஹாம் கால்வாயும் சுத்தப்படுத்தப்படும்.

* சென்னையின் சுற்றுலா வளத்தை மேம்படுத்தும் வகையில் அருங்காட்சியகங்கள், பழங்காலக் கட்டடங்கள், வள்ளுவர் கோட்டம் போன்றவை புனரமைக்கப்படும்.

* சென்னையின் சாலைகள், பாலங்கள், சுரங்கப் பாதைகள் அனைத்தும் புதுப்பிக்கப்படும்.

* சென்னையில் மிகப்பெரிய விளையாட்டு வளாகம்; அண்ணா டவர் பூங்கா மறுவடிவமைப்பு; அனைத்து விதமான விளையாட்டுகள் மீதும் கவனம் செலுத்தப்படும்.

* குழந்தைகளுக்கு அறிவியல் மற்றும் கணிதப் பூங்காக்களும் அமைக்கும் திட்டம்.

விமர்சனங்களும் எதிர்பார்ப்புகளும்!

“இப்போதுதான் இத்திட்டத்தின் அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியிருப்பதால், ஒட்டுமொத்தமாக இவற்றால் ஏற்படப் போகும் நன்மைகள், தீமைகள் குறித்து இப்போது உறுதியாகச் சொல்லமுடியாது. ஆனால், இம்மாதிரியான திட்டங்களால் நிறைய பிரச்னைகள் வந்திருக்கின்றன.

நகரத்தை அழகுபடுத்துதல், சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு, ஆறுகள் சுத்தம் செய்தல் போன்றவை தொடர்ந்து பேசப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வந்தாலும், அவற்றின் நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை. நகரமும் அழகாகவில்லை; ஆறுகளும் சுத்தமாகவில்லை. இதுபோன்ற திட்டங்களுக்காக ஏழைகள் நகரத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கும் நிலையில், இதை நவீனத் தீண்டாமையாகவேப் பார்க்க முடியும்.

நித்யானந்த் ஜெயராமன்

‘சிங்கார சென்னை’ யாருக்கானது என்பது முக்கியம். இது எல்லோரையும் உள்ளடக்கிய ஒன்றாக இருக்கும்பட்சத்தில், இத்திட்டங்கள் வரவேற்கப்பட வேண்டியவையே!” என்று இதன் சாதக பாதகங்களை விளக்குகிறார் சூழலியல் செயற்பாட்டாளர் நித்யானந்த் ஜெயராமன்.

சென்னையின் வரலாற்று ஆய்வாளர் வி.ஸ்ரீராமிடம் ‘சிங்கார சென்னை 2.0’ திட்டம் குறித்து பேசினேன். “சென்னை மாநகரத்தைப் பொறுத்தவரை முதல் பிரச்னையும், முதன்மையான சிக்கலுமாக விளங்குவது நெரிசல் மிகுந்த நகர வாழ்க்கைதான். இத்தனைப் பெரிய மக்கள்தொகையைக் கொண்ட சென்னையில், மருத்துவக் கட்டமைப்புகள் போதுமானவையாக இல்லை; அவை இப்போது மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பின்னணியில் நகரை அழகுபடுத்துதல் என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்டு, காலப்போக்கில் கைவிடப்படும் திட்டங்களால் எந்தவித நன்மையும் ஏற்படப் போவதில்லை.

வி. ஸ்ரீராம்

சென்னை நகரின் மேம்பாலங்களுக்கு அடியில், அதன் தூண்களில் வளர்க்கப்படும் செடிகளால் அரசுக்குத் தேவையில்லாத செலவுதான் ஏற்படுகிறது; சிங்கப்பூரில் இத்திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், ஆண்டு முழுவதும் அங்கு மதிய வேளைகளில் மழை பெய்யும்; தனியாகச் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றத் தேவையில்லை. ஆனால், இங்கு அப்படிப்பட்ட தட்பவெப்ப சூழல் இல்லை. சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் தான் இங்குப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் காலப்போக்கில் மேம்பாலத்தின் கான்கிரீட் பாதிக்கப்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

மேலும், சென்னையின் பாரம்பரியக் கட்டடங்கள் கவனிப்பும், போதுமான பராமரிப்பும் இல்லாமல் இருக்கின்றன. நிறையக் கட்டடங்கள் இடிந்து விழும் நிலையில் இருக்கின்றன; பல ஏற்கெனவே இடிக்கப்பட்டுவிட்டன. இந்தப் பின்னணியில், பண்பாடு, மரபு சார்ந்த விஷயங்களுக்கு ‘சிங்கார சென்னை 2.0’ திட்டம் முக்கியத்துவம் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. மொத்தத்தில் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதுடன், இன்றைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாக இத்திட்டங்கள் இருக்க வேண்டும் என்பதே நம்முடைய எதிர்பார்ப்பு!” என்றார்.

சிங்கார சென்னை 2.0 திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன், அரசு பல தரப்பட்ட மக்களையும் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்பதே ஆர்வலர்களின் ஒருமித்த கருத்து!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.