பிரதமர் மோடியைச் சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

ஸ்டாலின் – மோடி

டெல்லியில் நாளை மறுநாள் பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முதல்வராக பதவியேற்றப் பின்னர் முதல்முறையாக பிரதமரை சந்திக்கிறார் ஸ்டாலின். முதல்வரின் இந்த டெல்லி பயணத்தின் இரண்டாம் நாளான வரும் 18-ம் தேதி காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்துகிறார்.

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 60,471 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் தொடர்ந்து எட்டாவது நாளாக கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 2,95,70,881 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 2,726. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,77,031-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பரிசோதனை

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,82,80,472 -ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 9,13,378 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 1,17,525 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 25,90,44,072பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

அயோத்தி நிலம் சர்ச்சையும் விளக்கமும்..!

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர், பூமிபூஜை நடத்தப்பட்டு, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி நடந்து வருகிறது. அதுதொடர்பான தேவைக்காக ராமர் கோவில் அறக்கட்டளை சார்பில் வாங்கிய நிலத்தில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. எனினும் இந்த குற்றச்சாட்டுக்கு ராமர் கோவில் அறக்கட்டளை மறுப்பு தெரிவித்துள்ளது.

அயோத்தி – மதுரா

அதில், “அயோத்தியில் பாக் பிஜைசி என்ற இடத்தில் உள்ள 12 ஆயிரத்து 80 சதுர மீட்டர் நிலத்தை அறக்கட்டளை வாங்கியது. அந்த நிலத்துக்கு ரூ.2 கோடியே 16 லட்சம் விலை என்ற அடிப்படையில், 2017-ம் ஆண்டு முதல்கட்ட ஒப்பந்தம் போடப்பட்டு இருந்தது. முன்பணமாக ரூ.92 லட்சம் கொடுக்கப்பட்டு இருந்தது. அது, 2017-ம் ஆண்டின் சந்தை விலை அடிப்படையில் மதிப்பிடப்பட்ட விலை என்பதால் குறைவாக இருந்தது. அப்போது, ராமர் கோவில் கட்ட அனுமதிப்பதற்கான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரவில்லை. அந்த தீர்ப்பு, 2019-ம் ஆண்டு நவம்பர் 9-ந் தேதி வெளியானது. அதன்பிறகு நிலத்தின் மதிப்பு ஏறக்குறைய 10 மடங்கு கூடிவிட்டது. அதனால்தான், கடந்த மார்ச் மாதம் அந்த நிலத்தை ராமர் கோவில் அறக்கட்டளை வாங்கியபோது, விலை 9 மடங்கு அதிகரித்து விட்டது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளின் இன்று முதல்..!

தமிழக ரேஷன் கடைகளில் இன்று முதல் கொரோனா நிவாராண நிதி இரண்டாவது தவணையான ரூ. 2000 வழங்கப்படும். மேலும் 14 மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்படும்.

சிவசங்கர் பாபாவை கைது செய்ய டேராடூன் விரைந்த சிபிசிஐடி தனிப்படை போலீஸார்!

சிவசங்கர் பாபா

சென்னை, கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபாவை கைது செய்ய சிபிசிஐடி தனிப்படை போலீசார் டேராடூன் விரைந்தனர். பாலியல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிவசங்கர் பாபா சிகிச்சை பெற்று வருவதாக கிடைத்த தகவலை அடுத்து, தனிப்படை டேராடூன் விரைந்தது. இதனிடையே, சிவசங்கர் பாபா வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க, லுக் அவுட் நோட்டீசும் விடப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.